search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
    • இதில் இந்திய வீரர்களான சாய் சுதர்சன், பிரிதிவி ஷா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் இந்திய இளம் வீரர்களான சாய் சுதர்சன், பிரிதிவி ஷா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    இதில் சாய் சுதர்சன் சர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். முதல் இன்னிங்சில் 14 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இதேபோல், நார்த்தம்டன்ஷைர் அணிக்காக விளையாடிய பிரித்வி ஷா முதல் இன்னிங்சில் 31 ரன்னும், 2வது இன்னிங்சில் 37 ரன்னும் எடுத்தார்.

    கவுன்டி போட்டிகளில் விளையாடி வரும் இளம் இந்திய வீரர்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் குறைந்த ரன்களில் அவுட்டானது ரசிகர்களை ஏமாற்றத்துக்கு ஆளாக்கியுள்ளது.

    • என்னுடைய வாழ்நாள் முழுவதும் இனிமேல் அந்த பிட்ச் மற்றும் மைதானத்தை மறக்க மாட்டேன்.
    • எனவே அதனுடைய சிறிய பகுதியை எடுத்துச் செல்ல விரும்பினேன்.

    பார்படாஸ்:

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று முடிந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் பார்படாஸ் மைதானத்தின் மண்னை ரோகித் சாப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில் அந்த பிட்ச்தான் எங்களுக்கு இந்த வெற்றியை கொடுத்தது என இதற்கான காரணம் குறித்து ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அது போன்ற விஷயங்களை என்னால் விவரிக்க முடியாது என்று நினைக்கிறேன். ஏனெனில் அது கதையாக எழுதப்பட்டது கிடையாது. அவை அனைத்தும் உள்ளுணர்வில் இருந்து வருவதாகும். அந்த தருணத்தில் பிட்ச் அருகே சென்று அதை நான் உணர்ந்தேன். ஏனெனில் அந்த பிட்ச்தான் எங்களுக்கு இந்த வெற்றியை கொடுத்தது. அதில் விளையாடி நாங்கள் வென்றோம்.

    என்னுடைய வாழ்நாள் முழுவதும் இனிமேல் அந்த பிட்ச் மற்றும் மைதானத்தை மறக்க மாட்டேன். எனவே அதனுடைய சிறிய பகுதியை எடுத்துச் செல்ல விரும்பினேன். அந்தத் தருணம் மிகவும் ஸ்பெஷலானது. அந்த இடத்தில்தான் எங்களுடைய கனவு நிஜமானது. எனவே அதை கொஞ்சம் நான் வைத்துக் கொள்ள விரும்பினேன். உலகக்கோப்பையை வென்றது உண்மையில் அற்புதமான உணர்வு. அது இன்னும் மூழ்கவில்லை என்று நான் சொல்வேன்.

    என்று ரோகித் கூறினார்.

    • ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோருக்கு பதிலாக 3 இளம் வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது.
    • ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது.

    5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இவரது தலைமையின் கீழ் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் இந்த சுற்றுபயணத்தில் விளையாடுகின்றனர். இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். 

    இந்நிலையில் ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோர் வெஸ்ட் இண்டீஸில் இருந்து நாடு திரும்ப தாமதமாவதால் அவருக்கு பதிலாக 3 இளம் வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அதை தொடர்ந்து ஜித்தேஷ் சர்மா, ஹர்சித் ரானா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இதுவரை நடந்த டி20 உலகக் கோப்பையை விட 2024 -ம் ஆண்டில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது.
    • ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு வீரர் அதிக சிக்சர் அடித்தது இந்த உலகக் கோப்பையில் தான்.

    2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 1- ந் தேதி தொடங்கி ஜூலை 29-ந் தேதி முடிவடைந்தது. இதில் இறுதிபோட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதியது. இந்த பரபரப்பான போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    இந்த 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் பல சாதனைகள் படைக்கப்பட்டது. நியூசிலாந்து வீரர் பெர்குசன் 4 ஓவர்களையும் மெய்டன் ஓவர்களாக வீசினார். இந்த உலகக் கோப்பை அதிக பவுண்டரிகள் விளாசப்பட்டது. ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு வீரர் அதிக சிக்சர் அடித்தது இந்த உலகக் கோப்பையில் தான். அதிக சிக்சர் விளாசிய கிறிஸ் கெய்ல் சாதனையை அந்த அணி வீரரான பூரன் முறியடித்தார்.

    அந்த வகையில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இதுவரை இல்லாத அளவாக 44 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன. 2007-ல் தொடங்கப்பட்ட டி20 உலக கோப்பை தொடர் முதல், 2024 ஆண்டு வரை 152 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன.

    2024-ம் ஆண்டு அதிகபட்சமாக 44 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக 2012-ம் ஆண்டில் 21 மெய்டன்கள் வீசப்பட்டது. 2009-ம் ஆண்டில் வெறும் 5 மெய்டன்களே வீச்சப்பட்டது.

    ஒவ்வொரு டி20 உலகக் கோப்பை தொடரில் வீசப்பட்ட மெய்டன் ஓவர்கள் விவரம்:-

    15 - 2007

    05 - 2009

    11 - 2010

    21 - 2012

    13 - 2014

    09 - 2016

    17 - 2021

    17 - 2022

    44 - 2024

    • 700 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர்.
    • மூன்றாவது பந்துவீச்சாளராக ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார்.

    இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை அடுத்து, அந்த அணியின் ஆலோசகர் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அடுத்த வாரம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறுகிறார். இந்த போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

     


    41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட் வரலாற்றில் 700 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். இதுதவிர இத்தனை விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளராக ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார்.

    அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

    • 2018-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் பிரித்வி ஷா தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார்.
    • இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று 4-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    நடந்து முடிந்த டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் மக்கள் கொண்டாடினர். இந்த வெற்றிக்கு வீரர்களின் உழைப்பு காரணமாக இருந்தாலும் டிராவிட்டின் முயற்சிகள் பின்னணியில் மகத்தானவையாக பார்க்கப்படுகிறது.

    ஆனால், கடந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணிக்கு டிராவிட் தொடர்ந்து பயிற்சியளிப்பார் என்று யாரும் நம்பவில்லை. ஆனால், கேப்டன் ரோஹித் சர்மாவிடம் இருந்து வந்த ஒரு போன்தான் டிராவிட்டை மாற்றியுள்ளது.

    ரோஹித் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் டிராவிட்டை 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வரை இந்திய பயிற்சியாளராக தொடர எப்படி சமாதானப்படுத்தினார்கள் என்பதை இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

    பார்படாஸில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா வென்ற பிறகு, "நவம்பரில் அந்த தொலைபேசி அழைப்புக்கு நன்றி, ரோஹித்" என்று டிராவிட் தெரிவித்து இருந்தார்.

    முன்னதாக, பயிற்சியாளர் பணியை விரும்பிச் செய்த டிராவிட், 2018-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் பிரித்வி ஷா தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார்.

    இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று 4-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டிராவிட் தனது பயிற்சிப்பட்டறையில் அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், இஷான் கிஷன், சுப்மான் கில் என ஏராளமான வீரர்களை உருவாக்கி உள்ளார்.

    • இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    • முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது.

    ஜிம்பாப்வேயில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையின் கீழ் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார், ரியான் பரக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், உலகக் கோப்பைத் தொடருக்கான ரிசர்வ் வீரர்களான ரிங்கு சிங், கலீல் அகமது ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியில், ருதுராஜ் கெய்க்வாட், துருவ் ஜுரேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்திய அணி ஜிம்பாப்வே-க்கு புறப்பட்டு சென்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை பி.சி.சி.ஐ. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது.

    • அவருடைய முடிவை நாங்கள் மதிக்கிறோம்.
    • அவரை நீட்டிக்க நான் வற்புறுத்த விரும்பவில்லை.

    17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை இந்திய அணி கைப்பற்றியது. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரின் தலைமையில் கீழ் இந்திய அணி கோப்பை வென்று சாதித்தது.

    இந்நிலையில் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் ஏன் விண்ணப்பிக்கவில்லை என்ற காரணத்தை ஜெய்ஷா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    குடும்பக் கடமைகள் காரணமாக அவர் விலக விரும்புவதாக தெரிவித்தார். அவருடைய முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவரை நீட்டிக்க நான் வற்புறுத்த விரும்பவில்லை.

    ராகுல் பாய் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டுக்கு சேவை செய்துள்ளார். அவர் மூன்று ஆண்டுகள் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக இருந்தார். பின்னர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக, அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார்.

    இந்த டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றதில் ரோகித் சர்மாவைப் போலவே ராகுல் டிராவிட்டின் பங்கும் முக்கியமானது. அவர் 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்துச் சென்றார். ஆனால் அதில் தோலிவியடைந்தால் மீண்டும் பயிற்சியில் தொடர விரும்பினார்.

    என்று அவர் கூறினார்.

    • சச்சினின் தீவிர ரசிகரான சுதிர்குமார் உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
    • இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

    உடல் முழுவதும் இந்திய அணியில் மூவர்ண கொடியின் பெயிண்டை அடித்து கொண்டு நெஞ்சில் சச்சின் டெண்டுல்கர் என்று எழுதி கொண்டு, தேசிய கொடியை எந்தி செல்லும் சச்சினின் அதி தீவிர ரசிகர் சுதிர் குமார்.

    இவர் தொடக்கத்தில் நண்பர்களிடம் கடனை வாங்கியாவது கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றுவிடுவார். சில சமயம், காசு இல்லை என்றால் நடந்தோ, இல்லை யாரிடமாவது லிப்ட் கேட்டோ, மைதானத்துக்கு சென்று விடுவார்.

    தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஒரே மாதிரி தோற்றத்துடன் வந்ததை அடுத்து கிரிக்கெட் வீரர்களிடமும், ரசிகர்களிடமும் பிரபலம் ஆனார். மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள், இவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்றால் காசு கொடுக்க வேண்டும். இப்படி தான் வாழ்க்கையை ஓட்டினார்.

    சுதிர் குமார் சௌத்ரியின் அன்பை பார்த்த சச்சின் டெண்டுல்கரே, அவருக்கான டிக்கெட் செலவு மற்றும் போக்குவரத்து செலவை ஏற்று கொண்டார். பின்னர் அவரின் குடும்பத்துக்கும் உதவித் தொகையும் சச்சின் வழங்குகிறார். சச்சின் ஓய்வு பெற்ற பிறகும் அணி நிர்வாகமே இவருக்கான டிக்கெட்டை வழங்கி வருகிறது. வீரர்கள் உடை மாற்றும் அறைக்கு சென்று அங்குள்ள வீரர்களிடம் பேசும் அளவுக்கு இந்திய அணியில் செல்லப் பிள்ளையாக மாறினார் சுதிர்குமார் சௌத்ரி.

     

    இந்த நிலையில் சுதிர்குமார் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியை பார்க்க சென்றார். இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு ரோகித் சர்மா அங்குள்ள கடற்கரையில் போட்டோஷீட் நடத்தினார். அப்போது உலகக் கோப்பையுடன் சுதிர்குமார் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவருடன் ரோகித் சர்மாவும் இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.
    • ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே செல்ல உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டது. இந்த இளம் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக அனுபவம் வாய்ந்த வீரர் சிக்கந்தர் ராசா நியமிக்கப்பட்டார்.

    சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பைக்கு இந்த அணி தகுதி பெறத் தவறியதால், புதிய தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் சம்மன்ஸின் கீழ் மீண்டும் கட்டமைக்கும் நோக்கத்தில், ஜிம்பாப்வே ராசாவின் கீழ் ஒரு இளம் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

    ஜிம்பாப்வே அணி:

    சிக்கந்தர் ராசா (கேப்டன்), அக்ரம் ஃபராஸ், பென்னட் பிரையன், கேம்ப்பெல் ஜொனாதன், சதாரா டெண்டாய், ஜாங்வே லூக், கையா இன்னசென்ட், மடண்டே கிளைவ், மாதேவெரே வெஸ்லி, மருமணி தடிவானாஷே, மசகட்சா வெலிங்டன், மவுடா பிராண்டன், முசரபானி பிளஸ்ஸிங், மியர்ஸ் டியான், நக்வி ஆன்டம், ங்கரவா ரிச்சர்ட், ஷும்பா மில்டன்.

    • 2023 -ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று நான் நினைத்தேன்.
    • ஆனால் அது நடக்கவில்லை. இந்த முறை நாங்கள் அதை செய்து விட்டோம்.

    தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் நான் இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற தேதி மற்றும் டி20 கோப்பையை பச்சைக் குத்தி கொள்ள போகிறேன் என சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் அதை முன்பே திட்டமிட்டு இருந்தேன். 2023 -ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இந்த முறை நாங்கள் அதை செய்து விட்டோம். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு அருமையான தருணம். ஜூன் 29 எனது தங்கையின் பிறந்த நாள் வேறு. நான் தற்போது பச்சைக் குத்திக்கொள்வது அவருக்கும் ஒரு பிறந்த நாள் பரிசாக அமையும். அதோடு இந்த நாள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய நாள் என்றார்.

    உலகக் கோப்பையை வென்றது எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இது நீண்ட காலமாக நினைவில் இருக்கும். இதைப் பற்றி சிந்திக்க எனக்கு சிறிது நேரம் உள்ளது. உலகக் கோப்பையை வென்ற நாளை நான் எனது நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்வேன்.

    என்று கூறியுள்ளார்.

    • இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • 2-வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 373 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    சென்னை:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா பொறுப்பாக ஆடி சதமடித்து அசத்தினர். ஷபாலி வர்மா-ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்தனர்.

    ஸ்மிர்தி மந்தனா 149 ரன் எடுத்து அவுட்டானார். பொறுப்பாக ஆடிய ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து, 205 ரன்னில் வெளியேறினார். இரண்டாம் நாளில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 69 ரன்னும், ரிச்சா கோஷ் 86 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    இதன்மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.

    இதனை தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 266 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சினே ரானா சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதன்மூலம் பாலோ ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் சூன் லூஸ் சதமடித்து 109 ரன்னில் அவுட்டானார். லாரா வோல்வார்ட் 93 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில் கடைசி நாளான இன்று தென் ஆப்பிரிக்கா அணி தொடர்ந்து ஆடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வோல்வார்ட் 122 ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய நாடின் டி கிளர்க் 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 373 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 37 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதனையடுத்து எளிதான இலக்கை நோக்கி விளையாடிய சுபா- ஷபாலி ஜோடி விக்கெட் இழப்பின்றி இலக்கை கடந்தது. இதனால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஆட்ட நாயகியாக சினே ரானா தேர்வு செய்யப்பட்டார்.

    ×