search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இந்தியா எந்தளவுக்கு நல்ல அணி என்பதை நாங்கள் அறிவோம். அதை சொல்வதற்காக நாங்கள் கூச்சப்படவில்லை.
    • இந்த போட்டிக்காக அணியாக நாங்கள் ஆர்வமுடன் உள்ளோம்.

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது. அப்போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி காண்போம் என்று அயர்லாந்து அணி வீரர் ரோஸ் அடேர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த போட்டிக்காக அணியாக நாங்கள் ஆர்வமுடன் உள்ளோம். இந்திய வீரர்களை நியூயார்க் நகரில் முதல் போட்டியில் எதிர்கொள்வதை எதிர்நோக்கியுள்ளோம். இந்தியா எந்தளவுக்கு நல்ல அணி என்பதை நாங்கள் அறிவோம். அதை சொல்வதற்காக நாங்கள் கூச்சப்படவில்லை. ஆனால் நாங்கள் இந்த போட்டிக்காக முழுமையாக தயாராகியுள்ளோம்.

    அதனால் இந்தியாவுக்கு நாங்கள் நல்ல போட்டியை கொடுப்போம் என்று நம்புகிறோம். போட்டியை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய வீரர்கள் இந்திய அணியில் நிறைந்திருக்கிறார்கள். இருப்பினும் நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி முடிந்த வரை இந்தியாவை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்போம்.

    என்று கூறினார்.

    • பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர் கொள்கிறது.
    • இதற்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸில் நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் நேற்று பாகிஸ்தான் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கால்பந்தாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்களில் அசாம் கானை பார்த்து பாபர் அசாம் காண்டாமிருகம் என திட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இதனை பார்த்த ரசிகர்கள் பாபர் அசாமுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேப்டன் என்ற முறையில் இதுபோன்ற வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்த கூடாது எனவுக் கூறி வருகின்றனர்.

    பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர் கொள்கிறது. இந்த போட்டி வருகிற 6-ந் தேதி கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியம், டல்லாஸ் என்ற மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    • கால்இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்- கேஸ்பர் ரூட்டுடன் இன்று மோத இருந்தார்.
    • காயத்தன்மை தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளதையடுத்து ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகினார்.

    'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்ட நடப்பு சாம்பியனும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பிய வீரர் ஜோகோவிச் வலது கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் 4-வது சுற்றில் போராடி வெற்றிக்கனியை பறித்தார். இதனால் கால்இறுதியில் ஜோகோவிச்- கேஸ்பர் ரூட்டுடன் இன்று மோத இருந்தார்.

    இந்த நிலையில் ஸ்கேன் பரிசோதனையில் அவரது காயத்தன்மை தீவிரமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனில் இருந்து நேற்று விலகினார். நம்பர் ஒன் இடத்தை தக்க வைப்பதற்கு பட்டத்தை வென்றாக வேண்டிய நெருக்கடியில் இருந்த ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்பாக வெளியேறி விட்டதால், நம்பர் ஒன் இடத்தையும் இழக்கிறார்.

    2-வது இடத்தில் இருக்கும் இத்தாலியின் ஜானிக் சினெர் முதல்முறையாக 'நம்பர் ஒன்' இடத்தை பிடிக்கிறார். வருகிற 10-ந்தேதி வெளியாகும் புதிய தரவரிசையில் 22 வயதான சினெர் 'நம்பர் ஒன்' அரியணையில் ஏறுவார். டென்னிஸ் தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தை அலங்கரிக்க போகும் முதல் இத்தாலி வீரர் இவர் தான்.

    • என்னுடைய மிகப்பெரிய ரோல் மாடல் ராகுல் டிராவிட்.
    • நான் தனிப்பட்ட முறையில் ராகுல் டிராவிட் சந்தித்து பயிற்சியாளராக இருங்கள் என்று கூறினேன்.

    நியூயார்க்:

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் தற்போது நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வருகிறது. அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை.

    இந்த நிலையில் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நீடிக்க சமாதானப்படுத்த முயற்சித்தேன் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    என்னுடைய முதல் சர்வதேச போட்டியில் ராகுல் டிராவிட்தான் கேப்டனாக இருந்தார். என்னுடைய மிகப்பெரிய ரோல் மாடல். அவர் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு பல விஷயங்களை செய்திருக்கிறார். ஒரு வீரராக அவர் தனிப்பட்ட முறையில் என்ன சாதித்தார் என்பதும், பல ஆண்டுகளாக அணிக்காக அவர் என்ன செய்துள்ளார் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

    ஒரு அணியாக இதைதான் செய்ய வேண்டும் என என்னிடம் முதலில் கூறியது டிராவிட் தான். நான் தனிப்பட்ட முறையில் ராகுல் டிராவிட் சந்தித்து பயிற்சியாளராக இருங்கள் என்று கூறினேன். குறைந்தபட்சம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காவது பயிற்சியாளராக இருக்க வற்புறுத்தினேன்.

    என்று ரோகித் சர்மா கூறினார்.

    இதுக்கு பதில் அளித்த ராகுல் டிராவிட் , இந்த பணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவதை மகிழ்ச்சியாக செய்கின்றேன். ஆனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பார்க்க வேண்டி இருக்கிறது. தற்போது உள்ள சூழலில் நான் மீண்டும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.

    • மழையால் இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 109 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு கொடுக்கப்பட்டது.
    • மீண்டும் மழை தொடர்ந்து நிற்காமல் பெய்துகொண்டிருந்தது. இதனால் ஆட்டம் பாதியிலேயே கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

    பிரிட்ஜ்டவுண்:

    டி20 உலகக்கோப்பையில் நேற்று இரவு நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜார்ஜ் முன்சி மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது.

    தொடர்ந்து பெய்த மழை, சில மணி நேரங்களுக்கு பின்னர் நின்றது. இதனால் முழு போட்டியையும் நடத்தாமல் 10 ஓவர்களாக கொண்ட போட்டியாக நடத்த முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 109 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு கொடுக்கப்பட்டது.

    எனினும், மீண்டும் மழை தொடர்ந்து நிற்காமல் பெய்துகொண்டிருந்தது. இதனால் ஆட்டம் பாதியிலேயே கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இங்கிலாந்து அணி எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழையால் போட்டி கைவிடப்பட்டதால் அந்நாட்டு வீரர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    • சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளன.
    • 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நியூயார்க்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் 8-வது லீக்கில் இந்திய அணி, அயர்லாந்தை (ஏ பிரிவு) சந்திக்கிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா என்று அனைத்து முன்னணி வீரர்களும் இருப்பதால் வலுவாக காணப்படுகிறது.

    விராட் கோலியும், கேப்டன் ரோகித் சர்மாவும் தொடக்க ஆட்டக்காரராக இறங்கினால், ஆடும் லெவனில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சனை காட்டிலும் ரிஷப் பண்டுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

    அயர்லாந்து சிறிய அணியாக கருதப்பட்டாலும், முந்தைய காலங்களில் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து இருக்கிறது. அதனால் அவர்களை துளி கூட சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று இந்திய வீரர்களை அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    போட்டி நடக்கும் நியூயார்க்கில் உள்ள ஆடுகளங்கள் செயற்கையாக அமைக்கப்பட்டவை. இந்த ஆடுகளத்தில் அதிரடி காட்டுவது அவ்வளவு எளிதல்ல. இதே மைதானத்தில் ஆடிய இலங்கை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெறும் 77 ரன்னில் அடங்கியதே அதற்கு உதாரணம். 'இங்குள்ள சூழலுக்கு ஏற்ப வீரர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இது போன்ற ஆடுகளங்களில் 140 ரன் கூட வெற்றிக்குரிய ஸ்கோராக இருக்கலாம்' என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

    இந்த உலகக் கோப்பையுடன் பயிற்சியாளர் பணியில் இருந்து விடைபெறும் டிராவிட், உலகக் கோப்பையை வெல்வதற்குரிய வாய்ப்பை உருவாக்குவதே எங்களது இலக்கு என்றும் குறிப்பிட்டார்.

    பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியில் ஆன்டி பால்பிர்னி, லோர்கன் டக்கர், டெக்டர், ஜார்ஜ் டாக்ரெல் உள்ளிட்டோர் நிலைத்து நின்று விட்டால் அதிரடியில் மிரட்டி விடுவார்கள். கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 183 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து கவனத்தை ஈர்த்தனர். இதனால் அதிக நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். முடிந்த வரை 20 ஓவர் முழுமையாக ஆட முயற்சிப்பார்கள்.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளன. 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம்:-

    இந்தியா:

    ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

    அயர்லாந்து:

    பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ரோஸ் அடைர், ஆன்டி பால்பிர்னி, நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், மார்க் அடைர், கர்டிஸ் கேம்பர், காரெத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், கிரஹாம் ஹூமே, ஜோஷ் லிட்டில், பாரி மெக்கர்த்தி, பென் ஒயிட், கிரேக் யங்,

    நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - உகாண்டா அணிகள் விளையாடியது.
    • இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உகாண்டா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - உகாண்டா அணிகள் விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உகாண்டா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன குர்பாஸ் 76 ரன்களிலும், இப்ராஹிம் சத்ரான் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின் களமிறங்கிய வீரர்களில் யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.

    இதன் மூலம் 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 76 ரன்கள் குவித்தார். உகாண்டா தரப்பில் அதிகபட்சமாக காஸ்மாஸ் கியூட்டா மற்றும் மாசாபா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்குடன் களமிறங்கிய உகாண்டா 16 ஓவர்களில் 58 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



    • 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
    • இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.

    9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 3 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன.

    இந்நிலையில் இந்த தொடரில் நியூயார்க்கில் இன்று நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் களம் இறங்கினர்.

    இதில் பதும் நிசாங்கா 3 ரன்னிலும், குசல் மெண்டிஸ் 19 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய இலங்கை வீரர்கள் தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் காமிந்து மெண்டிஸ் 11 ரன், வனிந்து ஹசரங்கா 0 ரன், சதீரா சமரவிக்ரமா 0 ரன், சரித் அசலங்கா 6 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் இலங்கை அணி 45 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இதையடுத்து அனுபவ வீரர்களாக ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தசுன் ஷனகா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் ஷனகா 9 ரன்னிலும், மேத்யூஸ் 16 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து மகேஷ் தீக்சனா மற்றும் மதீஷா பதிரனா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் இலங்கை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 19 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அன்ரிச் நார்ட்ஜே 4 விக்கெட்டுகளும், மகராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பில் குயிண்டன் டி காக் மற்றும் ஹென்ரிக்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஹென்ரிக்ஸ் 4 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மார்க்ரம் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக டி காக்குடன், ஸ்டெப்ஸ் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் டி காக் 20 ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து ஸ்டெப்ஸ் 13 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக கிளாசெனுடன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். .

    இறுதியில் கிளாசென் 19 (22) ரன்களும், டேவிட் மில்லர் 6 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் ஹசரங்கா 2 விக்கெட்டுகளும், நுவன் துஷாரா மற்றும் தசுன் ஷனகா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதன்மூலம் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.

    • ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பை ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    • 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்கு 46. 54 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிகளை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது.

    ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பை ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்த உலகக்கோப்பைக்கான மொத்த பரிசுத்தொகையாக 93.5 கோடியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

    உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு 20.36 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரன்னர் அப் அணிக்கு 10.36 கோடி பரிசுத்தொகையாகும்.

    செமி பைனலில் தோற்கும் அணிகளுக்கு 6.54 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்.

    இதுவரை நடைபெற்ற டி20 உலககோப்பைகளில் அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகைகளில் இதுவே அதிகபட்ச தொகையாகும்.

    2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்கு மொத்தமாக 46.54 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிக பட்சமாக குசல் மெண்டீஸ் 19 ரன்கள் எடுத்தார்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் அன்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டும் ரபாடா, மகாராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    நியூயார்க்:

    9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் நியூயார்க்கில் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

    அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசங்கா - குசல் மெண்டீஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 3 ஓவரில் வெறும் 13 ரன்களே எடுத்தது.

    தொடர்ந்து தடுமாறி வந்த இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த வகையில் நிசங்கா 8 பந்தில் 3 ரன்களிலும், கமிண்டு மெண்டீஸ் 15 பந்தில் 11 ரன்களிலும், ஹசரங்கா 0, சதீரா 0, அசலங்கா 6, குசல் மெண்டீஸ் 19 (30) தசுன் சனங்கா 9, பதிரனா 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இதனால் இலங்கை அணி 19.1 ஓவரில் 77 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிக பட்சமாக குசல் மெண்டீஸ் 19 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அன்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டும் ரபாடா, மகாராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    • இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்காவும், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எய்டன் மார்க்ரமும் கேப்டனாக செயல்படுகின்றனர்.
    • டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

    நியூயார்க்:

    9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் நியூயார்க்கில் மோதுகிறது.

    இந்த தொடருக்கான இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்காவும், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எய்டன் மார்க்ரமும் கேப்டனாக செயல்படுகின்றனர். இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

    • உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை.
    • நான் உலகக் கோப்பையில் விளையாடும் போது தான் யார் டாப் 4 அணியாக வருவார்கள் என்பதைப் பற்றி நினைப்பேன்.

    ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்தியா தங்களுடைய பயிற்சிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

    இதைத் தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிராக தங்களுடைய முதல் போட்டியில் களமிறங்கும் இந்தியா 2-வது போட்டியில் பாகிஸ்தானை நியூயார்க் நகரில் எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் இந்த உலகக் கோப்பையை தமக்கு இடம் கிடைக்காததால் தாம் பார்க்கப்போவதில்லை என்று இளம் இந்திய வீரர் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அரையிறுதியில் விளையாடப் போகும் டாப் 4 அணிகளை பற்றி கணித்தால் நான் ஒருதலைபட்சமாக இருப்பேன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை. கடைசியில் யார் கோப்பையை வெல்கிறார்கள் என்பதை மட்டும் பார்ப்பேன். அதுவே எனக்கு மகிழ்ச்சி. நான் உலகக் கோப்பையில் விளையாடும் போது தான் யார் டாப் 4 அணியாக வருவார்கள் என்பதைப் பற்றி நினைப்பேன்.

    ஏதோ ஒரு தருணத்தில் என்னை நீங்கள் இந்திய அணியில் எடுப்பீர்கள் அல்லவா? எனவே நான் கண்டிப்பாக இந்தியாவுக்காக விளையாடுவேன். ஆனால் அது எப்போது என்பதை பற்றி கவலைப்படவில்லை என்று கூறினார்.

    அவருடைய இந்த கருத்து இந்திய ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதுவரை இந்தியாவுக்காக அறிமுகமாகாமல் ஐபிஎல் தொடரிலும் 2024 சீசன் தவிர்த்து பெரும்பாலும் சுமாராகவே செயல்பட்டுள்ள ரியான் பராக் சுயநலமாக நாட்டுப்பற்று இல்லாமல் பேசியுள்ளார். அதனால் அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

    ×