search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: டாப் 10-ல் முதல் முறையாக இடம் பிடித்த ஆப்கானிஸ்தான் வீரர்
    X

    ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: டாப் 10-ல் முதல் முறையாக இடம் பிடித்த ஆப்கானிஸ்தான் வீரர்

    • டெஸ்ட் தரவரிசையில் தமிழக வீரர் அஸ்வின் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.
    • ஒருநாள் பேட்டர்கள் தரவரிசை 1,2,3,4 ஆகியவை முறையே பாபர் அசாம், ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி உள்ளனர்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதல் 4 இடங்களில் மாற்றமில்லை. இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    பயங்கரமான கார் விபத்தில் சிக்கி காயமடைந்து அதில் இருந்து மீண்டு ஏறக்குறைய 20 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், சென்னையில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் சதம் (109 ரன்) அடித்து அசத்தினார். இதையடுத்து மீண்டும் தரவரிசையில் நுழைந்துள்ள அவர் 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பொதுவாக ஒரு வீரர் 12 முதல் 15 மாதங்கள் வரை டெஸ்டில் ஆடாவிட்டால் தரவரிசையில் இருந்து நீக்கப்படுவார். அதன்படி ஒரு கட்டத்தில் தரவரிசையில் இடத்தை இழந்த பண்ட், சதம் விளாசியதன் மூலம் விபத்துக்கு முன்பாக பெற்றிருந்த அதே தரநிலையை தற்போது பெற்றிருக்கிறார். இந்திய இளம் புயல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்திருக்கிறார்.

    சென்னை டெஸ்டில் 6 மற்றும் 5 ரன் வீதம் எடுத்து சொதப்பிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா 5 இடங்களை பறிகொடுத்து 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதே டெஸ்டில் ரன் எடுக்க தவறிய (6 ரன் மற்றும் 17 ரன்) மற்றொரு இந்திய நட்சத்திரம் விராட் கோலி 7-ல் இருந்து 12-வது இடத்துக்கு சறுக்கினார். அதே சமயம் இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் 119 ரன்கள் சேர்த்த இந்திய வீரர் சுப்மன் கில் 5 இடங்கள் அதிகரித்து 14-வது இடத்தை பெற்றுள்ளார். காலேயில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் செஞ்சுரி அடித்த இலங்கை வீரர் காமிந்து மென்டிஸ் 3 இடங்கள் ஏற்றம் கண்டு 16-வது இடம் வகிக்கிறார்.

    டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் இரு இடங்களில் இந்தியாவின் ஆர். அஸ்வினும், ஜஸ்பிரித் பும்ராவும் தொடருகிறார்கள். சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் உயர்ந்து 6-வது இடத்தை பிடித்துள்ளார். இதே போல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட்டுகளை அள்ளிய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 5 இடங்கள் எகிறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

    சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசையிலும் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் பேட்ஸ்மேன் வரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர்அசாம் முதலிடத்திலும், இந்தியாவின் ரோகித் சர்மா 2-வது இடத்திலும், சுப்மன் கில் 3-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் உள்ளனர்.

    சார்ஜாவில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சதமும், அரைசதமும் நொறுக்கிய ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் ரமனுல்லா குர்பாஸ் 10 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை ஆக்கிரமித்துள்ளார். ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் டாப்-10 இடத்திற்குள் அடியெடுத்து வைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

    இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 154 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 16-ல் இருந்து 9-வது இடத்துக்கு வந்துள்ளார்.

    ஒரு நாள் போட்டி பந்து வீச்சாளர் தரவரிசையில் தென்ஆப்பிரிக்காவின் கேஷவ் மகராஜ் முதலிடமும், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா 2-வது இடமும் வகிக்கிறார்கள். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 7 விக்கெட்டுகளை சாய்த்த ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 8 இடங்கள் ஏற்றம் அடைந்து 3-வது இடத்தை எட்டிப்பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4-வது இடத்திலும், பும்ரா 8-வது இடத்திலும், முகமது சிராஜ் 9-வது இடத்திலும் உள்ளனர்.

    Next Story
    ×