search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மாணவனுக்கு ரூ.90 ஆயிரம் பணம் அனுப்பிய பண்ட்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்
    X

    மாணவனுக்கு ரூ.90 ஆயிரம் பணம் அனுப்பிய பண்ட்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்

    • மாணவனின் படிப்புக்கு ரிஷப் பண்ட் 90,000 ரூபாய் பணத்தை அனுப்பியதாக தெரிகிறது.
    • ரிஷப் பண்ட் அந்த மாணவனுக்கு உதவி செய்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தன.

    இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாடி வருகிறார். அந்த நிலையில் ட்விட்டர் பக்கத்தில் தம்முடைய படிப்புக்கு பண உதவி செய்யுமாறு ஒரு மாணவர் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

    குறிப்பாக ஏழை குடும்பத்தைச் சேர்ந்த தமது இன்ஜினியரிங் படிப்பை முடிக்க பண உதவி செய்யுமாறு சான்றிதழ்களை காண்பித்து அவர் கோரிக்கை வைத்தார்.

    இது பற்றி அந்த நபர் ட்விட்டரில் பதிவிட்டது பின்வருமாறு. "ஹலோ ரிஷப் பண்ட் சார். நான் பொறியியல் கல்விக்கு நிதி இல்லாமல் போராடும் மாணவன். உங்கள் ஆதரவு என் வாழ்க்கையை மாற்றும். எனது பிரச்சாரத்திற்கு உதவ அல்லது பகிர்வதை கருத்தில் கொள்ளவும். உங்கள் கருணை எனக்கு எல்லாவற்றையும் கொடுக்கும்" என்று பதிவிட்டார்.

    அதைப் பார்த்த ரிஷப் பண்ட் அந்த மாணவனின் படிப்புக்கு 90,000 ரூபாய் பணத்தை அனுப்பியதாக தெரிகிறது.

    அத்துடன் அந்த நபருக்கு "உங்களுடைய கனவுகளை தொடர்ந்து துரத்துங்கள். கடவுள் எப்போதும் சிறந்த திட்டங்களை வைத்திருப்பார்" என்று ரிஷப் பண்ட் பதிலளித்தார். அவருக்கு அந்த நபர் "உங்கள் ஆதரவு எல்லாவற்றையும் குறிக்கிறது. கல்விக்கு தேவையான நிதி சேகரிக்கப்படவில்லை. இதை பரப்புவதில் எந்த உதவியும் ஒரு ஆசிர்வாதமாக இருக்கும். இன்னும் என் கனவுகளை துரத்துகிறேன்" என்று பதிலளித்தார். அத்துடன் ரிஷப் பண்ட் பணத்தை அனுப்பிய விவரங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அந்த நபர் "நன்றி ரிஷப் பையா" என்று பதிவிட்டார். இதைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் அந்த மாணவனுக்கு உதவி செய்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தன. ஆனால் அதைப் பார்த்த இதர இந்திய ரசிகர்கள் ரிஷப் பண்ட் ஏமாற்றப்பட்டதாக ஆதாரத்துடன் கண்டுபிடித்தனர்.

    அதாவது அதே நம்பர் கடந்த 3/4/2024 ம் தேதியன்று கல்லூரி படிப்புக்காக வைத்திருந்த 90000 ரூபாயை ஆன்லைனில் ஆர்சிபி அணியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு இழந்ததாக ட்விட்டரில் பதிவிட்டார். எனவே தம்முடைய கல்லூரி படிப்புக்காக உதவி செய்யுங்கள் என்று அந்த நபர் இதே போன்ற கோரிக்கையை வைத்திருந்தார். அந்த ஆதாரத்தை எடுத்த ரசிகர்கள் "இவருக்கு ஏன் பணம் அனுப்பினீர்கள்? இவர் ஏமாற்றுபவர்" என்று ரிஷப் பண்ட்டுக்கு தெரிவித்தனர்.

    இருப்பினும் ரிஷப் பண்ட் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால் மற்ற ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து நம் நாட்டுக்காக விளையாடும் கிரிக்கெட்டரை இப்படியா ஏமாற்றுவீர்கள்? என்று அந்த குறிப்பிட்ட நபரை ட்விட்டரில் ஆதாரத்துடன் விமர்சித்து திட்டி தீர்த்தார்கள். அதற்கு தாக்குப்பிடிக்க முடியாத அந்த ரசிகர் தற்போது 90,000 ரூபாய் பணத்தை மீண்டும் ரிஷப் பண்ட்க்கு அனுப்பிவிட்டதாகவும் தம்மை அனைவரும் மன்னித்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார்.

    Next Story
    ×