search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2-வது டி20 போட்டி: இந்திய அணியின் வெற்றி தொடருமா? தென்ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்
    X

    2-வது டி20 போட்டி: இந்திய அணியின் வெற்றி தொடருமா? தென்ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்

    • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் 16-ல் இந்தியாவும், 11-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன.

    கெபேஹா:

    தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டர்பனில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    தொடக்க ஆட்டத்தில் சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால் (107 ரன், 50 பந்து, 7 பவுண்டரி, 10 சிக்சர்) இந்தியா 202 ரன்கள் குவித்தது. திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் நல்ல பங்களிப்பை அளித்தனர். அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங் பேட்டிங் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. பந்து வீச்சில் அசத்திய இந்திய அணியினர் தென்ஆப்பிரிக்காவை 17.5 ஓவர்களில் 141 ரன்னில் அடக்கி வெற்றியை வசப்படுத்தினர். வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் கலக்கினர்.

    கடைசியாக தனது 11 சர்வதேச 20 ஓவர்களில் தொடர்ச்சியாக வெற்றியை குவித்துள்ள இந்திய அணி தனது ஆதிக்கத்தையும், உத்வேகத்தையும் தொடரும் ஆவலுடன் உள்ளது.

    தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தமட்டில் கடந்த ஆட்டத்தில் அதிரடி ஆட்டக்காரர்களான ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர் மற்றும் கேப்டன் மார்க்ரம் பேட்டிங்கில் சொதப்பியது சறுக்கலை சந்திக்க காரணமாக அமைந்தது. அத்துடன் பந்து வீச்சில் ஜெரால்டு கோட்ஜீ தவிர மற்றவர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

    தனது வெற்றியை தொடர இந்திய அணி முழு முனைப்பு காட்டும். அதேநேரத்தில் தோல்வியில் இருந்து மீண்டு பதிலடி கொடுக்க தென்ஆப்பிரிக்க அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16-ல் இந்தியாவும், 11-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    செயிண்ட் ஜார்ஜ் மைதானத்தை பொறுத்தவரை மொத்தம் 4 சர்வதேச 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் தென்ஆப்பிரிக்கா மூன்றில் வெற்றியையும், ஒன்றில் தோல்வியையும் சந்தித்துள்ளது. வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமான இங்கு ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் (2023-ம் ஆண்டு) மட்டும் களம் கண்டுள்ள இந்திய அணி மழையால் பாதித்த அந்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் பணிந்தது. அந்த ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்ததே இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். 2012-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து 146 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்சமாகும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல் அல்லது ரமன்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், வருண் சக்ரவர்த்தி.

    தென்ஆப்பிரிக்கா: மார்க்ரம் (கேப்டன்), ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், பேட்ரிக் குருகர், மார்கோ யான்சென், அன்டில் சிம்லேன், ஜெரால்டு கோட்ஜீ, கேஷவ் மகராஜ், நபயோம்ஜி பீட்டர் அல்லது ஒட்னில் பார்ட்மேன்.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.

    Next Story
    ×