search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பிசிசிஐ எங்கள் கோரிக்கையை நிராகரித்தது.. வேறு வழியின்றி இங்கு வந்தோம்.. குமுறும் ஆப்கானிஸ்தான்
    X

    பிசிசிஐ எங்கள் கோரிக்கையை நிராகரித்தது.. வேறு வழியின்றி இங்கு வந்தோம்.. குமுறும் ஆப்கானிஸ்தான்

    • கோரிக்கையை பிசிசிஐ மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ஆப்கானிஸ்தான் தான் நொய்டாவில் போட்டியை நடத்த விரும்பியதாக கூறப்பட்டது.

    ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒன்-ஆஃப் டெஸ்ட் போட்டி, மூன்று நாட்களாக டாஸ் கூட போடப்படாமல் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. கனமழை காரணமாக போட்டி தடைப்பட்ட நிலைமை மாறி, தற்போது மழையால் மைதானத்தில் தேங்கிய நீர் மற்றும் ஈரப்பதம் காரணமாக இரு அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் இன்னும் டாஸ் கூட போடப்படவில்லை.

    கிரேட்டர் நொய்டா ஸ்போர்ட்ஸ் வளாக மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே ஒரேயொரு டெஸ்ட் போட்டி நடைபெற திட்டமிடப்பட்டது. எனினும், போட்டி நடைபெற இருந்த முதல் மூன்று நாட்களாக மைதானத்தில் மழைநீர் தேங்கி இருப்பது, ஈரப்பதம் காயாமல் இருப்பது போன்ற காரணங்களால் போட்டி துவங்கப்படவே இல்லை.


    மைதானத்தில் போதுமான வசதி இல்லாதது குறித்து அதிருப்தி தெரிவித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இனி இங்கு வரவே கூடாது என்று கருத்து தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியை லக்னோ அல்லது டேராடூனில் நடத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்ததாகவும், அதனை பிசிசிஐ மறுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக பிசிசிஐ சார்பில் பெங்களூரு மற்றும் கான்பூர் போன்ற மைதானங்களில் போட்டியை நடத்த ஆலோசனை வழங்கப்பட்டதாகவும், ஆப்கானிஸ்தான் தான் நொய்டாவில் போட்டியை நடத்த விரும்பியதாக கூறப்பட்டது.

    "எங்களது முதல் தேர்வு லக்னோ மைதானம் தான். அது கிடைக்காத பட்சத்தில் டேராடூனில் விளையாட நினைத்திருந்தோம். ஆனால் எங்களது கோரிக்கைகளை பிசிசிஐ நிராகரித்து விட்டது. இரு இடங்களிலும் டி20 லீக் போட்டிகள் நடைபெற உள்ளதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களுக்கு இருந்த ஒரே ஆப்ஷன் நொய்டா மைதானம் மட்டும் தான்," என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×