search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    • புதிய சவாலை எதிர்கொள்ள தயாராகவும் ஆர்வமாகவும் இருக்கிறேன் என மெஸ்சி கூறினார்.
    • அர்ஜென்டினா கால்பாந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்சி, அமெரிக்காவின் இண்டர் மியாமி அணிக்காக விளையாட உள்ளார்.

    அமெரிக்கா:

    கால்பந்து உலகின் சிறந்த வீரரும் , அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்சி பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) அனிக்காக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வந்தார் .பிஎஸ்ஜி அணியுடன் எற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த அணியில் இருந்து விலகி அமெரிக்காவின் இண்டர் மியாமி அணிக்காக விளையாட உள்ளார்.

    இந்நிலையில் அமெரிக்காவில் இண்டர் மியாமி வீரராக அவரை அறிமுகப்படுத்த அணியின் நிர்வாகம் சிறப்பு நிகழ்வு ஒன்றை எற்பாடு செய்து உள்ளது. அதில் பங்கேற்பதற்காக மெஸ்சி அமெரிக்கா சென்று உள்ளார்.

    அங்கு அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்,அதில்'"நான் எடுத்த முடிவில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய சவாலை எதிர்கொள்ள தயாராகவும் ஆர்வமாகவும் இருக்கிறேன்," என்று கூறினார்.

    மேலும் அவர்,"எனது மனநிலையும் என் உறுதியும் மாறப்போவதில்லை. நான் எங்கிருந்தாலும், எனக்காகவும் அணிக்காகவும் அதிகபட்ச உழைப்பை கொடுக்க முயற்சிப்பேன். உயர்ந்த தரத்தில் தொடர்ந்து செயல்படுவேன்'என்று பேட்டி அளித்து உள்ளார்.

    மெஸ்சி இண்டர் மியாமி அணியில் முன்னாள் பார்சிலோனா அணி வீரர் செர்ஜியோ புஸ்கெட்ஸ் மற்றும் முன்னாள் அர்ஜென்டினா பயிற்சியாளர் ஜெரார்டோ மார்டினோவுடன் மீண்டும் இணைய உள்ளார். மெஸ்சி இண்டர் மியாமி அணி வீரராக முதல் ஆட்டத்தை ஜூலை 21 அன்று மெக்சிகன் அணியான குரூஸ் அசுலுக்கு எதிரான லீக் கோப்பை மோதலில் அறுமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

    • இந்தியா 5-4 என்ற புள்ளி கணக்கில் குவைத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
    • 9-வது முறையாக இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் கிடைத்து உள்ளது.

    பெங்களூரு:

    14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும், குவைத்தும் நேற்று மோதின. இந்த போட்டியில் இரு அணியினரும் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக விளையாடினர். இதனால், கோல் அடிக்க முடியாமல் வீரர்கள் திணறினர். இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளுடன் (1-1) போட்டி முடிவின்போது, சமநிலையில் இருந்தன.

    இதனால், பெனால்டி ஷூட்அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில், இந்திய அணியின் கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து ஒரு கோலை அடிக்க விடாமல் தடுத்து அணி வெற்றி பெற உதவினார். போட்டியில் இந்தியா 5-4 என்ற புள்ளி கணக்கில் குவைத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால், 9-வது முறையாக இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் கிடைத்து உள்ளது.

    இந்திய அணி கோப்பையை வென்ற நிலையில் அந்த அரங்கம் முழுவதிலும் இருந்த ரசிகர்கள் வந்தே மாதரம் என முழுக்கமிட்டனர். அப்போது இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரியும் அவர்களுடன் சேர்ந்து வந்தே மாதரம் என முழக்கமிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ராஜஸ்தான் ராயல் அணியின் நிர்வாகமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

    • உரிய அனுமதியின்றி கட்டுமான பணிகளை நெய்மர் மேற்கொண்டு வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த பணிகளை தொடர கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது.
    • ரியோடிஜெனீரோ மாகாண அரசு நெய்மருக்கு ரூ.28.6 கோடியை அபராதமாக விதித்துள்ளது.

    ரியோடிஜெனீரோ:

    பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மருக்கு ரியோடிஜெனீரோ மாகாணத்தின் தெற்கு கடற்கரை பகுதியையொட்டி சொகுசு பங்களா உள்ளது. செழுமையான மரங்களை கொண்ட அந்த பண்ணை வீட்டின் அருகில் செயற்கை ஏரி அமைத்தல் உள்பட பல்வேறு வசதிகளை உருவாக்கும் வகையில் உரிய அனுமதியின்றி கட்டுமான பணிகளை நெய்மர் மேற்கொண்டு வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த பணிகளை தொடர கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது.

    அத்துடன் அந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் நெய்மர் சுற்றுப்புற சூழல் விதிமுறைகளை கடைபிடிக்காததுடன் முறையான அனுமதி பெறாமல் நதி நீரை திசைதிருப்புதல், மரங்களை வெட்டுதல், கற்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து ரியோடிஜெனீரோ மாகாண அரசு நெய்மருக்கு ரூ.28.6 கோடியை அபராதமாக விதித்துள்ளது. அத்துடன் இந்த விதிமீறல் செயல்கள் குறித்து உள்ளூர் அட்டர்னி ஜெனரல் அலுவலகம், சிவில் போலீஸ், சுற்றுச்சுழல் பாதுகாப்பு அலுவலகம் ஆகியவை தொடர்ந்து விசாரணை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இரண்டு பெனால்டிகளும் மாற்றப்பட்ட நிலையில், 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்தது.
    • குர்பிரீத் சிங் சந்து கோல் அடித்ததை அடுத்து இந்தியாவுக்கு 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.

    பெங்களூருவில் 14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரை இறுதி சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், குவைத்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

    சாம்பியன் பட்டத்ததை தக்க வைக்கும் முயற்சியில் இந்திய வீரர்கள் துவக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    அதேபோல் முதல் முறையாக கோப்பை வெல்லும் முனைப்புடன் குவைத் வீரர்களும் பதிலடி கொடுத்ததால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.

    சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்ட குவைத் அணி லீக் சுற்றில் இந்தியாவுடன் 'டிரா' செய்தது. நேபாளம், பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது. அரையிறுதியில் கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டியிலும் குவைத் அணியின் தாக்குதல் ஆட்டம் தொடர்ந்தது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதிய நிலையில், ஆட்ட நேர இறுதியில் தலா ஒரு கோல் அடித்து சமன் ஆனது. இதனால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் சுனில் சேத்ரி கோல் அடிக்க இந்தியா 1-0 என முன்னிலையில் இருந்தது.

    பின்னர் அடித்த கோலை குவைத் தவறவிட, சந்தேஷ் ஜிங்கன் கோல் அடித்து 2-0 என இந்தியா முன்னிலையில் இருந்தது. இருப்பினும், குவைத் தனது இரண்டாவது வாய்ப்பில் கோல் அடித்ததால் 2-1 ஆனது.

    இரண்டு பெனால்டிகளும் மாற்றப்பட்ட நிலையில், 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்தது.

    இதையடுத்து, உதாந்தா சிங் தனது கோலை தவறவிட்டார். ஆனால் சுபாஷிஷ் போஸ் கோல் அடித்ததால் ஸ்கோர் பின்னர் 4-4 என்று கோல் கணக்கில் சமமானது.

    பின்னர், குர்பிரீத் சிங் சந்து கோல் அடித்ததை அடுத்து இந்தியாவுக்கு 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.

    இதன்மூலம், குவைத்தை வீழ்த்தி 9வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வென்றது.

    • வெற்றி பெற்ற விராங்கனைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் ரெயில் நிலையம் வந்திருந்தனர்.
    • இறுதிப்போட்டியுடன் சேர்த்து மொத்தம் 10 போட்டிகளில் விளையாடியதாக வீராங்கனைகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற்ற 27வது சீனியர் தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு பெண்கள் அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. போட்டியில் வென்ற அணியினர் இன்று தமிழகம் திரும்பினர். வெற்றிக் கோப்பையுடன் வந்த அவர்களுக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வீராங்கனைகளை வரவேற்று உற்சாகப்படுத்தும் வகையில் ரெயில் நிலையத்தில் மேளதாளங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    மேலும், வெற்றி பெற்ற விராங்கனைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் ரெயில் நிலையம் வந்து இனிப்புகள் வழங்கியும் மாலை அணிவித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வீராங்கனைகள், 'இறுதிப்போட்டியுடன் சேர்த்து மொத்தம் 10 போட்டிகளில் ஆடியதாகவும், லீக் போட்டி முதல் அனைத்து போட்டிகளிலும் அதிக கோல்கள் அடித்து வெற்றி பெற்றதாகவும் கூறினர்.


    • சர்வதேச கால்பந்து சங்கம் அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
    • 5 ஆண்டுக்கு பிறகு இந்திய அணி 100-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    புதுடெல்லி:

    சர்வதேச கால்பந்து சங்கம் அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் 36 ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறது.

    பிரான்ஸ் 2-வது இடமும், பிரேசில் 3 வது இடமும், இங்கிலாந்து 4-வது இடமும், பெல்ஜியம் 5-வது இடத்திலும் உள்ளது.

    சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி 100-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    • பரபரப்பான இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் அரியானாவை வீழ்த்தியது.
    • அர்ப்பணிப்பு, திறமை மற்றும் குழுவாக இணைந்து செய்த முயற்சி பெருமை அளிப்பதாக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பெண்களுக்கான தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அமிர்தசரஸ் குரு நானக் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழக அணி, அரியானா அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

    நிறைவு விழாவில் இந்திய கால்பந்து சம்மேளன தலைவா கல்யாண் சவுபே கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். பஞ்சாப் கால்பந்து சங்க துணை தலைவர் பிரியா தாபார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    முதலமைச்சர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 27வது சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக மகளிர் அணி சிறப்பான வெற்றியை பெற்றதற்கு பாராட்டுக்கள். தோல்வியுறாத சாதனையுடன் நீங்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால், இந்த சாதனை முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் குழுவாக இணைந்து செய்த முயற்சி பெருமை அளிக்கிறது. நீங்கள் தொடர்ந்து உயர்ந்து நம் மாநிலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கூறியிருப்பதாவது:-

    தேசிய சீனியர் மகளிர் கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட அணிக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 2 - 1 என்ற கோல் கணக்கில் ஹரியானாவை வீழ்த்தி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ள சந்தியா, இந்துமதி உட்பட அத்தனை வீராங்கனையரையும் பாராட்டுகிறேன்.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயின்ற வீராங்கனைகளை அதிகம் கொண்ட தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட அணி, இன்னும் பல சாதனைகளை புரியட்டும். கழக அரசு அவர்களுக்கு துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஏ பிரிவில் இன்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, குவைத் அணிகள் மோதின.
    • ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்க, போட்டி டிரா ஆனது.

    பெங்களூரு:

    14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஏ பிரிவில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, குவைத் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே இந்திய அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இதனால் ஆட்டத்தின் 90-வது நிமிடம் முடிந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் 2-வது நிமிடத்தில் தடுப்பாட்டத்தில் இந்திய அணியின் அன்வர் அலி செய்த தவறால் பந்து கோல் வளைக்குள் செல்ல குவைத் அணிக்கு கோல் வழங்கப்பட்டது. ஆட்ட நேர முடிவில் 1-1 என போட்டி டிராவில் முடிந்தது.

    ஏற்கனவே இந்தியா மற்றும் குவைத் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சுனில் சேத்ரி 91-வது சர்வதேச கோலை பதிவு செய்துள்ளார்
    • ‘ஏ’ பிரிவில் இருந்து குவைத், இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

    14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதின. முதல்பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    2-வது பாதிநேர ஆட்டத்தில் இந்தியாவின் கை ஓங்கியது. ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்தார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. சுனில் சேத்ரிக்கு இது 91-வது சர்வதேச கோலாகும்.

    அடுத்த 6-வது நிமிடத்தில் இந்தியா மேலும் ஒரு கோல் அடித்தது. சேத்ரி கொடுத்த பாஸை மகேஷ் சிறப்பான முறையில் கோலாக்கினார். அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இந்தியா 2-0 என வென்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 'ஏ' பிரிவிலா் இடம் பிடித்துள்ள மற்றொரு அணியான குவைத்தும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    • நமது வாழ்க்கையின் ஒரு பகுதியான நீ என்னுடன் வேண்டும்.
    • புருனா, நான் ஏற்கனவே எனது தவறுகள், தேவையற்ற சர்ச்சைகளுக்காக மன்னிப்பு கேட்டு விட்டேன்.

    பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், தமது கர்ப்பிணி காதலியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். இதனை சமூக ஊடக பக்கத்தில் தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார். 31 வயதான நெய்மர் தமது காதலி புருனா பியான்கார்டி-ஐ தாம் கனவு கண்டிருந்த பெண் என கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் இதனை உனக்காகவும் உனது குடும்பத்துக்காகவும் செய்கிறேன். இது பிரச்சினைகளை தீர்க்குமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் முயற்சி செய்ய விரும்புகிறேன் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன். நமக்கான தேவை, நம் குழந்தை மீது நாம் வைத்திருக்கும் அன்பு வெல்லும். நாம் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதல் நம்மை பலப்படுத்தும்.

    நமது வாழ்க்கையின் ஒரு பகுதியான நீ என்னுடன் வேண்டும். அதுமட்டுமின்றி, உங்களை பற்றி வெளிவந்த செய்திகள் உங்களை எவ்வளவு காயப்படுத்தியது, நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்பது எனக்கு தெரியும். இந்த சூழலில் உனக்கு ஆதரவாக இருக்கிறேன்.

    களத்தின் உள்ளே மற்றும் வெளியே நான் பல தவறுகளை செய்திருக்கிறேன். நான் செய்த தவறுக்கு தினந்தோறும் மன்னிப்பு கேட்க தயங்குகிறேன். வீட்டில் எனது தனிமை, குடும்பத்தார், நண்பர்களிடம் மட்டுமே நான் எனது தவறுகளை திருத்திக்கொள்ள முடியும்.

    இவை அனைத்தும் என் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நபரை அதிக அளவில் பாதித்துள்ளது. என்னுடன் பயணிக்க வேண்டும் என்று நான் விரும்பிய பெண், எனது குழந்தையின் தாய் இதில் அடங்குவர். இது எனது குடும்பத்தை காயப்படுத்தி இருக்கிறது.

    அவள் சமீபத்தில்தான் கருவுற்று மகிழ்ச்சியான காலக்கட்டத்தை துவங்கி இருக்கிறாள். புருனா, நான் ஏற்கனவே எனது தவறுகள், தேவையற்ற சர்ச்சைகளுக்காக மன்னிப்பு கேட்டு விட்டேன். இதற்காக பொதுவெளியில் பேச வேண்டும் என்று கருதுகிறேன். ஒரு தனிப்பட்ட விஷயம் பொதுவெளிக்கு வந்து விட்டால், அதற்கான மன்னிப்பும் பொதுவெளியிலேயே கேட்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    நெய்மரின் இந்த பதிவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது. அவர் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 7 மில்லியன் ரசிகர்கள் தங்கள் ஆதரவை பதிவு செய்துள்ளனர்.

    • தனது 200 சர்வதேச போட்டியில் அவர் கோல் அடித்து முத்திரை பதித்தார்.
    • அவர் 123-வது சர்வதேச கோலை பதிவு செய்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

    ரெய்க்ஜவிக்:

    ஐரோப்பிய கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 14 முதல் ஜூலை 14 வரை ஜெர்மனியில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜவிக்கில் நடந்த யூரோ தகுதி சுற்று போட்டி ஒன்றில் போர்ச்சுக்கல்- ஐஸ்லாந்து அணிகள் மோதின.

    போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இதில் விளையாடினார். அவருக்கு இது 200-வது சர்வதேச போட்டியாகும். இதன் மூலம் ரொனால்டோ புதிய சாதனை படைத்தார். 200 சர்வதேச போட்டிகளில் ஆடிய முதல் வீரர் ஆவார்.

    போர்ச்சுக்கல் நாட்டுக்காக 200 போட்டிகளில் விளையாடிய 38 வயதான அவருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

    123- வது கோல் இந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 1-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை தோற்கடித்தது. 89-வது நிமிடத்தில் ரொனால்டோ இந்த கோலை அடித்தார்.

    தனது 200 சர்வதேச போட்டியில் அவர் கோல் அடித்து முத்திரை பதித்தார். அவர் 123-வது சர்வதேச கோலை பதிவு செய்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக குவைத் வீரர் அல் முதாவா 196 சர்வதேச போட்டியில் விளையாடி உள்ளார்.

    அர்ஜென்டினாவை சேர்ந்த உலகின் மற்றொரு முன்னணி கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி 175 சர்வதேச போட்டியில் பங்கேற்று 10-வது இடத்திலும், 103 கோல்கள் அடித்து 3-வது இடத்திலும் உள்ளார்.

    • பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்தார்.
    • இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை மறுதினம் நேபாளத்தை சந்திக்கிறது.

    பெங்களூரு:

    14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீவரா ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது. ஜூலை 4-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் லெபனான், மாலத்தீவு, பூடான், வங்காளதேசம் அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியை எட்டும்.

    இதில் நேற்று இரவு நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. மழைக்கு மத்தியில் இந்த போட்டி அரங்கேறியது.

    இந்த போட்டியில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி தொடர்ச்சியாக 3-வது கோலை அடித்து 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார். அத்துடன் சர்வதேச போட்டியில் அவர் அடித்த 90-வது கோலாக இது பதிவானது.

    இதன் மூலம் சுனில் சேத்ரி (90 கோல்கள், 138 ஆட்டங்கள்) சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் மலேசியாவின் மோக்தார் தஹாரியை (89 கோல், 142 ஆட்டங்கள்) பின்னுக்கு தள்ளி 4-வது இடத்துக்கு முன்னேறினார். இந்த பட்டியலில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 123 கோல்களுடன் (200 ஆட்டங்கள்) முதலிடத்திலும், ஈரானின் அலி டாய் (109 கோல்) 2-வது இடத்திலும், அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி (103 கோல்) 3-வது இடத்திலும் உள்ளனர். மேலும் அதிக கோல்கள் அடித்த ஆசிய வீரர்களில் சுனில் சேத்ரி 2-வது இடம் வகிக்கிறார்.

    இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை மறுதினம் நேபாளத்தை சந்திக்கிறது. 

    ×