search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    • மான்செஸ்டர் சிட்டியின் லிகாய் 2 கோல் அடித்தார்
    • பெனால்டி வாய்ப்பு கோலைத் தவிர மேலும் கோல் அடிக்க முடியாமல் யுனைடெட் ஏமாற்றம்

    இங்கிலாந்தில் உள்ள கிளப் அணிகளுக்கு இடையில் நடத்தப்படும் எஃப்.ஏ. கோப்பைக்கான கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு விம்ப்ளே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மான்செஸ்டர் யுனைடெட்- மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பந்தை கடத்திய முதல் நிமிடத்திலேயே மான்செஸ்டர் சிட்டி வீரர் லிகாய் குன்டோகான் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் மான்செஸ்ட்ர் சிட்டி 1-0 என் முன்னிலைப் பெற்றது.

    பின்னர் 31-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி புருனோ பெர்னாண்டஸ் கோல் அடித்தார். இதன் காரணமாக முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களுடன் சமநிலையில் இருந்தன.

    2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் மான்செஸ்டர் சிட்டி கைதான் ஓங்கியிருந்தது. 51-வது நிமிடத்தில் மீண்டும் குன்டோகான் கோல் அடிக்க மான்செஸ்டர் சிட்டி 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் மான்செஸ்டர் யுனைடெட் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

    இறுதியில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் 7-வது முறையாக மான்செஸ்டர் சிட்டி எஃப்.ஏ. கோப்பையை வென்றுள்ளது.

    • பி.எஸ்.ஜி. அணிக்காக 57 போட்டிகளில் 22 கோல்கள் அடித்துள்ளார்
    • இரண்டு சீசனோடு பிஎஸ்ஜி-யில் இருந்து வெளியேறுகிறார்

    கால்பந்து, அர்ஜென்டினா என்றாலே நினைவுக்கு வரும் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் மெஸ்சி. பார்சிலோனா அணிக்காக நீண்ட காலம் விளையாடிய அவர், திடீரென பி.எஸ்.ஜி. (paris saint-germain fc) அணிக்கு மாறினார். 2021-ல் இருந்து பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார்.

    இதுவரை 57 போட்டிகளில் விளையாடி 22 கோல்கள் அடித்துள்ளார். பிஎஸ்ஜி அணியில் இருந்து மெஸ்சி வெளியேற வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன.

    இந்த நிலையில் பிஎஸ்ஜி அணி நாளை மறுதினம் சனிக்கிழமை கிளெர்மோன்ட் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதுதான் மெஸ்சி பிஎஸ்ஜி அணிக்காக விளையாடும் கடைசி போட்டி என அந்த அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டோபர் கால்டியர் தெரிவித்துள்ளார்.

    பார்சிலோனா அணிக்காக மெஸ்சி 474 போட்டிகளில் விளையாடி 520 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பார்சிலோனா அணி நிர்வாகத்திடம், மீண்டும் பார்சிலோனாவில் விளையாட தங்களுக்கு விருப்பம் இருந்தால் 10 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என மெஸ்சி தெரிவித்ததாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

    மெஸ்சி மீண்டும் அணிக்கு திரும்புவதை பார்சிலோனா மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கும் நிலையில், அவர்களின் நிதி அமைப்பு சிக்கலாக இருக்கும் எனத் தெரிகிறது.

    • முதல் சுற்றில் 'ஜி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய பெண்கள் அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் மீண்டும் கிர்கிஸ்தானை எதிர்கொண்டது.
    • இந்தியா முந்தைய ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் கிர்கிஸ்தானை வென்று இருந்தது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸ்சில் அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு ஆசிய கண்டத்தில் இருந்து தகுதி பெறும் 2 பெண்கள் கால்பந்து அணிகள் எவை? என்பதை நிர்ணயிப்பதற்கான ஆசிய பெண்கள் கால்பந்து போட்டி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடந்து வருகிறது.

    இதன் முதல் சுற்றில் 'ஜி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய பெண்கள் அணி நேற்று முன்தினம் இரவு நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் மீண்டும் கிர்கிஸ்தானை எதிர்கொண்டது.

    இதில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் கிர்கிஸ்தானை தோற்கடித்தது. இந்திய அணியில் சந்தியா 2 கோலும் (18-வது, 56-வது நிமிடம்), அனுஜ் தமாங் (24-வது நிமிடம்), ரேணு (85-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர்.

    இந்தியா முந்தைய ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் கிர்கிஸ்தானை வென்று இருந்தது. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற இந்திய அணி 2வது சுற்றுக்கு முன்னேறியது.

    • நீண்ட காலமாக வெள்ளை நிற ஜெர்சியும் வெள்ளை நிற ஷார்ட்சும் அணிந்து போட்டிகளில் பங்கேற்றுவந்தனர்.
    • ஷார்ட்ஸின் நிறத்தை மாற்ற வேண்டும் என்ற வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர்.

    இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணியினருக்கு விளையாடும்போது அணியும் உடைகளை பிரபல நிறுவனமான நைக் (Nike) தயாரித்து தருகிறது.

    இங்கிலாந்து மகளிர் கால்பந்து வீராங்கனைகள் நீண்ட காலமாக வெள்ளை நிற ஜெர்சியும் வெள்ளை நிற ஷார்ட்சும் அணிந்து போட்டிகளில் பங்கேற்றுவந்தனர்.

    மாதவிடாய் காலத்தில் வெள்ளை நிறத்தில் ஷார்ட்ஸ் அணிந்து விளையாடுவதில் இங்கிலாந்து வீராங்கனைகள் சொல்ல முடியாத சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், ஷார்ட்சின் நிறத்தை மாற்ற வேண்டும் என்ற வீராங்கனைகளின் கோரிக்கையை ஏற்று நீல நிற ஷார்ட்சை அணிய இங்கிலாந்து மகளிர் கால்பந்து நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது.


    பிரேஸிலுக்கு எதிரான ஆட்டத்தில் வியாழக்கிழமை களம் காண்கிறது இங்கிலாந்து மகளிர் அணி. அந்த ஆட்டத்தில் இருந்து நீல நிற ஷார்ட்ஸ், வெள்ளை நிற ஜெர்ஸி அணிந்து வீராங்கனைகள் விளையாடவுள்ளனர்.

    • ஆட்டத்தின்போது ராணியேரி கால்பந்து மைதானத்தில் தனது காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்தார்.
    • அம்ரபத் அவசரவசரமாக வாழைப்பழம் சாப்பிட்டு தண்ணீர் குடித்து தனது விரதத்தை முடித்தார்.

    மிலனில் உள்ள சான் சிரோவில் சனிக்கிழமை நடந்த போட்டியில், இத்தாலியின் ஃபியோரெண்டினா மற்றும் இண்டர் மிலன் இடையே கிளப் போட்டி நடந்தது.

    இந்த ஆட்டத்தின்போது, ஃபியோரெண்டினா அணியைச் சேர்ந்த இத்தாலிய கால்பந்து வீரர் லூகா ராணியேரி தனது அணி வீரரான மொராக்கோவைச் சேர்ந்த சோபியான் அம்ராபத்துக்கு நோன்பு துறக்க வாய்ப்பளிப்பதற்காக காயம் ஏற்பட்டது போல் நடித்ததாக கூறப்படுகிறது. இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆட்டத்தின்போது ராணியேரி கால்பந்து மைதானத்தில் தனது காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த நேரத்தில், அம்ரபத் அவசரவசரமாக வாழைப்பழம் சாப்பிட்டு தண்ணீர் குடித்து தனது விரதத்தை முடித்தார்.

    போட்டியின் வர்ணனையாளர்களும், ஃபியோரெண்டினா மிட்ஃபீல்டருக்கு நோன்பு துறக்க இவ்வாறு அவர் நடிப்பது போல இருக்கிறது என கூறினர்.

    ஐந்து நிமிட கூடுதல் நேரத்துடன் 91:34 நிமிடத்தில் இந்த தருணம் நடந்தது மற்றும் ஃபியோரெண்டினா ஒரு கோலுடன் இண்டர் மிலானை விட முன்னிலையில் இருந்தது. இப்போட்டியில் இண்டர் மிலனுக்கு எதிராக ஃபியோரெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    கால்பந்தாட்ட போட்டிக்கு நடுவே தனது சக வீரர் நோன்பு துறக்க வாய்ப்பளிக்கும் விதமாக, காயம்பட்டதுபோல் போலியாக நடித்த

    இத்தாலிய வீரரின் செயல் காண்போரை நெகிழவைத்தது.

    • ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
    • இதில் பெங்களூரு அணியை வீழ்த்தி மோகன் பகான் அணி கோப்பை வென்றது.

    கொல்கத்தா:

    11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் ஏ.டி.கே மோகன் பகான் அணியும், பெங்களுரு எப்.சி அணியும் மோதின. பரபரப்பாக நடந்த போட்டியின் 14வது நிமிடத்தில் டிமிட்ரி பெட்ராடஸ் முதல் கோல் அடித்தார்.

    முதல் பாதியின் முடிவில் கூடுதலாக வழங்கப்பட்ட 5வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் சேத்ரி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார்.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 78வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ராய் கிருஷ்ணா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

    இதற்கு பதிலடியாக மோகன் பகான் அணியின் டிமிட்ரி பெட்ராடஸ் 85-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என சமனானது.

    இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் 4-3 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணி பெங்களூரு எப்.சி. அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    • பிபாவின் சிறந்த வீரர் விருதை மெஸ்சி வென்றார்.
    • பிபாவின் சிறந்த வீராங்கனை விருதை புடெல்லாஸ் வென்றார்.

    பாரிஸ்:

    சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (பிபா) சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, கடந்த ஆண்டுக்கான பிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களாக மெஸ்சி, கைலியன் எம்பாப்பே மற்றும் கரீம் பென்சிமா அறிவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், பிபா சிறந்த கால்பந்து வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2022-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது அர்ஜென்டினாவின் மெஸ்சிக்கும், சிறந்த வீராங்கனை விருது ஸ்பெயினின் அலெக்சியா புடெல்லாசுக்கும் வழங்கப்பட்டது.

    கத்தாரில் கடந்த ஆண்டு நடந்த 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சி முகர்ந்தது.

    அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி 7 கோல்களுடன், ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

    • ஜெர்மனியில் 2500 பெனால்டிக் கிக் அடித்ததே சாதனையாக இருந்தது.
    • காலை 7.38 மணிக்கு பெனால்டிக் கிக் அடிக்கும் நிகழ்ச்சி தொடங்கி இரவு 7.38 வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

    உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்த போது இவர்கள் ஜெர்மனி, பிரேசில் கால்பந்து வீரர்களுக்கு கட்-அவுட் அமைத்து கொண்டாடினர். மேலும் கேரளாவை சேர்ந்த வீரர்கள் பலரும் பல்வேறு கால்பந்து அணிகளிலும் இடம்பெற்று விளையாடி வருகிறார்கள்.

    அதோடு கேரளாவில் கால்பந்து போட்டிகள் நடந்தாலும் அதனை காண ஏராளமானோர் திரண்டு வருவார்கள். மேலும் கால்பந்தில் சாதனை படைக்கவும் அவர்கள் அடிக்கடி முயற்சி செய்வது வழக்கம்.

    அந்த வகையில் பெனால்டிக் கிக் அடிப்பதில் சாதனை படைக்கும் முயற்சி ஒன்று நேற்று நடந்தது. மஞ்சேரி பையநாடு பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    இதில் காலை 7.38 மணிக்கு பெனால்டிக் கிக் அடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இரவு 7.38 வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடந்த பெனால்டிக் கிக் அடிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். இதில் மொத்தம் 4500 பெனால்டிக் கிக் அடிக்கப்பட்டது.


    இரவு 7.38 மணிக்கு இந்த நிகழ்ச்சியை விளையாட்டு துறை மந்திரி பெனால்டிக் கிக் அடித்து நிகழ்ச்சியை முடித்து வைத்தார். இதற்கு முன்பு ஜெர்மனியில் 2500 பெனால்டிக் கிக் அடித்ததே சாதனையாக இருந்தது.

    நேற்று நடந்த நிகழ்ச்சி மூலம் இந்த சாதனையை கேரள இளைஞர்கள் முறியடித்து உள்ளனர். இதன்மூலம் அவர்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளனர்.

    • போர்ச்சுகல் பயிற்சியாளராக இருந்த பெர்னாண்டோ சான்டோஸ் ராஜினாமா செய்தார்.
    • புதிய பயிற்சியாளர் ராபர்ட்டோ மார்ட்டினஸ் பெல்ஜியம் அணியின் பயிற்சியாளராக இருந்தார்.

    கத்தாரில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி, காலிறுதியில் எதிர்பாராதவிதமாக மொராக்கோவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இதையடுத்து போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளராக இருந்த பெர்னாண்டோ சான்டோஸ், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில் ஸ்பெயினை சேர்ந்த ராபர்ட்டோ மார்ட்டினஸ் (வயது 49), போர்ச்சுகல் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு பெல்ஜியம் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தார். கத்தார் உலகக்கோப்பை போட்டியில் குரூப் சுற்றில் பெல்ஜியம் அணி வெளியேறியதைத் தொடர்ந்து, மார்ட்டினஸ் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    போர்ச்சுகல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய ராபர்ட்டோ, "உலகின் மிகவும் திறமையான அணிகளில் ஒன்றான போர்ச்சுகல் அணியில் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார்.

    • பிரேசிலின் பீலே புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம் தேதி மரணம் அடைந்தார்.
    • பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தனது மனைவியுடன் சென்று பீலே உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    சான்டோஸ்:

    கால்பந்து உலகின் சரித்திர நாயகனும், மூன்று முறை உலகக்கோப்பையை கையில் ஏந்திய ஒரே வீரருமான பிரேசிலின் பீலே (82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் காலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தனது மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு பீலேவின் உடல் தீயணைப்பு வாகனத்தில் ஊர்வலமாக சான்டோஸ் வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டது. சாலையின் இரு புறமும் நின்றிருந்த ரசிகர்கள் கண்ணீர் மல்க தங்களது கால்பந்து மன்னனுக்கு விடையளித்தனர். அஞ்சலி மற்றும் இறுதி ஊர்வலத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

    14 அடுக்கு மாடிகளைக் கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தை அவரது உடல் சென்றடைந்தது. இது தான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். அங்கு அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளை செய்தனர். அதைத் தொடர்ந்து 9-வது மாடியில் பீலே என்ற பெயர் பொறிக்கப்பட்ட பெட்டகத்தில் அவரது பதப்படுத்தப்பட்ட உடல் வைக்கப்பட்டது.

    தனது மறைவுக்கு பிறகு ஸ்டேடியத்தை நோக்கியே தனது உடலை அடக்கம் செய்யவேண்டும் என பீலே கூறியிருந்தாராம். அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது உடல் இந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    • பிரேசிலின் பீலே புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம் தேதி மரணம் அடைந்தார்.
    • அவரது மறைவையொட்டி பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

    சான்டோஸ்:

    உலக கோப்பை கால்பந்தில் 3 முறை மகுடம் சூடிய ஒரே வீரர் பிரேசிலின் பீலே (82). புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

    பிரேசில் நாட்டின் சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் பீலே உடல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இங்குள்ள பெட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட அவரது உடல் வைக்கப்படும். இதுதான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும்.

    இங்கு நடக்கும் இறுதிச்சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. கால்பந்து நாயகன் பீலேவுக்கு விடையளிக்க லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஒடிசா அணி 11 ஆட்டத்தில் 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிராவுடன் 19 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது.
    • மும்பை அணி 11 ஆட்டத்தில் 8 வெற்றி, 3 டிராவுடன் 27 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் நாளை நடக்கும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி- ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன.

    இப்போட்டி புவனேஸ்வரில் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மும்பை அணி 11 ஆட்டத்தில் 8 வெற்றி, 3 டிராவுடன் 27 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி 9வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும். ஒடிசா அணி 11 ஆட்டத்தில் 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிராவுடன் 19 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது. அந்த அணி உள்ளூரில் விளையாடுவதால் வெற்றிக்கு போராடும்.

    ×