search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    • அடுத்த உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கிறது.
    • 2026 ஆண்டு ஜூன்- ஜூலை மாதங்களில் நடைபெறும் இந்த உலக கோப்பையின் போட்டி முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது .

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டி 1930 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த போட்டி நடைபெற்று வருகிறது. 2-வது உலக போர் காரணமாக 1942, 1946 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பை நடைபெறவில்லை.

    கத்தாரில் நேற்று முடிவடைந்த 22-வது உலக கோப்பையை அர்ஜென்டினா கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்சை வீழ்த்தியது.

    அடுத்த உலக கோப்பை போட்டியை வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள கனடா , மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. முதல் தடவையாக 3 நாடுகள் போட்டியை நடத்த உள்ளது. 2026 ஆண்டு ஜூன்- ஜூலை மாதங்களில் நடைபெறும் இந்த உலக கோப்பையின் போட்டி முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது .

    இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. கூடுதலாக 16 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். எஞ்சிய 45 அணிகளும் தகுதி போட்டிகள் மூலம் தகுதி பெறும்.

    மொத்தம் உள்ள 48 நாடுகளும் 16 பிரிவாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் இடம் பெறும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 2 அணிகள் நாக் அவுட் சுற்றான 2-வது ரவுண்டுக்கு முன்னேறும். 32 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். அதைத்தொடர்ந்து 3-வது சுற்று, கால்இறுதி , அரை இறுதி, இறுதிப்போட்டி நடைபெறும். மொத்தம் 80 ஆட்டங்கள் 16 நகரங்களில் நடத்தப்படுகிறது. ஆனாலும் இந்த போட்டி முறை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

    மெக்சிகோவில் 3-வது முறையாக உலக கோப்பை நடக்கிறது. இதற்கு முன்பு 1970, 1986-ல் நடந்தது. இதன் மூலம் உலக கோப்பையை 3-வது தடவையாக நடத்தும் முதல் நாடு என்ற பெருமையை பெறுகிறது. அமெரிக்காவில் இதற்கு முன்பு 1994-ல் நடந்தது. கனடாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது.

    1954 முதல் 1978 வரை 16 நாடுகள் பங்கேற்றன. 1982-ல் 24 நாடுகளாக உயர்த்தப்பட்டன. 1998-ல் நாடுகள் எண்ணிக்கை 32 ஆக அதிகரிக்கப்பட்டது. இனி வரும் உலக கோப்பை போட்டியில் நாடுகள் எண்ணிக்கை 48 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    • கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்த டுவிட் தற்போது வைரலானது.
    • என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பேன் என தகவல்.

    கால்பந்து உலக கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றுள்ள நிலையில், உலக முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் உலக அளவில் புகழ் பெற்ற பயண ஆர்வலரான ஜோஸ் மிகுவல் போலன்கோ என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் 21ந் தேதி தமது டுவிட்டர் பதிவில், 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் 18-ந் தேதி, 34 வயதான லியோ மெஸ்ஸி உலகக் கோப்பையை வென்று எல்லா காலத்திலும் சிறந்த வீரராக மாறுவார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய டுவிட்டை மீண்டும் பார்க்கவும் என்று பதிவிட்டிருந்தார். அவர் கணித்தபடி தற்போது அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பையை மெஸ்சி பெற்று தந்துள்ளதால், போலன்கோவின் டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


    இந்நிலையில் தமது கணிப்பு நிறைவேறிய பிறகு, போலன்கோ,  ஸ்பானிஷ் மொழியில் இன்று மீண்டும் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், உங்கள்(மெஸ்சி) முதல் உலகக் கோப்பையில் நான் இருந்தேன், இப்போது உங்கள் கைகளால் வானத்தைத் தொட்ட உங்களின் கடைசி போட்டியிலும் என்னால் இருக்க முடிந்தது, லியோ. டியாகோ செய்தது போல். என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பேன், நன்றி அர்ஜென்டினா, நாங்கள் உலக சாம்பியன்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • காங்கிரசின் முன்னாள் தலைவர், தற்போதைய தலைவரும் அர்ஜென்டினா அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு மோதின. இந்த போட்டியில் 90 நிமிடங்கள் ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் - அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் நீடித்ததால் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது.

    அதன்பின், பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா உலக கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

    இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தப் போட்டி மிகவும் பரபரப்பான கால்பந்து போட்டிகளில் ஒன்றாக நினைவுகூரப்படும். உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினாவுக்கு வாழ்த்துகள்! இந்த கால்பந்து தொடர் முழுவதும் அவர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸியின் மில்லியன் கணக்கான இந்திய ரசிகர்கள் இந்த அற்புதமான வெற்றியில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்! என பதிவிட்டுள்ளார்.

    மேலும் அவர், உலக கோப்பை கால்பந்து போட்டியில் உற்சாகமான செயல்திறனுக்காக பிரான்சுக்கு வாழ்த்துகள்! அவர்கள் இறுதிப் போட்டியில் தங்கள் திறன் மற்றும் விளையாட்டுத் திறமையால் கால்பந்து ரசிகர்களை மகிழ்வித்தனர் என பிரான்சு அணிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதேபோல், உலக கோப்பை வென்ற அர்ஜென் டினா அணிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தற்பொதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • முதல் பாதியில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
    • 2வது பாதியில் பிரான்ஸ் 2 கோல்கள் அடிக்க ஆட்டம் சமனிலை அடைந்தது.

    கத்தார்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின.

    முதல் பாதியில் அர்ஜென் டினா 2-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில் பிரான்ஸ் அணி 2 கோல் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

    கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் 3-3 என சமனிலை பெற்றன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரான்சை வீழ்த்தி உலக கோப்பையை 3வது முறையாக கைப்பற்றியது.

    இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்படுகிறது.

    இரண்டாவது இடம் பிடித்த பிரான்ஸ் அணிக்கு ரூ.244 கோடி பரிசாக அளிக்கப்படுகிறது.

    • அதிக கோல்கள் அடித்து கோல்டன் ஷூ விருதை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே வென்றார்.
    • அர்ஜென்டினா அணியின் மெஸ்சி கோல்டன் பந்து விருதை வென்றார்.

    கத்தார்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் 3-3 என சமனிலை வகித்தன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரான்சை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்து கோல்டன் ஷூ விருதை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே வென்றார்.

    அர்ஜென்டினா அணியின் மெஸ்சி கோல்டன் பந்து விருதை வென்றார்.

    • பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி முதல் கோல் அடித்தார்.
    • முதல் பாதியில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    கத்தார்:

    கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கிய 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நிறைவுக்கு வந்தது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவின் இறுதி ஆட்டம் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. கோப்பையைக் கைப்பற்றும் இந்த போட்டியில் பிரான்சும், அர்ஜென்டினாவும் மோதின. 


    ஆட்டம் தொடங்கிய 23-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி கேப்டன் மெஸ்சி தனது அணிக்கான முதல் கோலை அடித்து அந்நாட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். தொடர்ந்து 36-வது நிமிடத்தில் ஏஞ்சல் டிமெரியா அர்ஜென்டினாவிற்கான 2-வது கோலை அடித்தார். இதன்மூலம் முதல் பாதி ஆட்ட முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெடினா முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கும் முயற்சியை பிரான்ஸ் வீரர்கள் தீவிரப்படுத்தினர். அதன்படி 80-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். அடுத்த ஒரு நிமிடத்தில் மீண்டும் அவர் தமது அணிக்கு மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சம நிலையை எட்டியது.


    இதையடுத்து முதல் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் இரண்டாவதாக கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. 108வது நிமிடத்தில் மெஸ்சி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 3-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. 118-வது நிமிடத்தில் எம்பாப்பே தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார்.

    இதையடுத்து இரு அணிகளும் 3-3 சமனிலை பெற்றன. எம்பாப்பே ஹாட்ரிக் கோலடித்து அசத்தினார்.

    மூன்றாவது கூடுதல் நேரத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் முறை வழங்கப்பட்டது. இதில் 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்றாவது முறையாக அர்ஜென்டினா உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்படுகிறது.

    • முதல் பாதி ஆட்ட முடிவில் 2-0 கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை பெற்றது.
    • 2வது பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் அடுத்தடுத்து கோல் அடித்ததால் ஆட்டம் சமனில் இருந்தது.

    கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் மோதி வருகின்றன. லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர். ஆட்ட நேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.


    கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரிய திரைகள் அமைத்து உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம் ஒளிபரப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காணும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மத்திய கலாச்சாரத்துறை மந்திரி மீனாட்சி லேகி உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று போட்டியை கண்டு ரசித்தனர்.

    • இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது.
    • இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

    32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையைக் கட்டியது. எதிர்பார்க்கப்பட்ட நம்பர் ஒன் அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில் கால்இறுதியில் குரோஷியாவிடம் மண்ணை கவ்வியது.

    லீக் சுற்றுகள், நாக் அவுட் சுற்றுகளின் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இந்நிலையில், உலக கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் இன்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் மோத உள்ளன.

    உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த இறுதிப்போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் அது அவர்கள் வெல்லும் 3-வது உலகக் கோப்பையாக அமையும்.

    மெஸ்சியின் கடைசி உலக கோப்பை போட்டி இது என்பதால் கோப்பையை கையில் ஏந்துவாரா என அர்ஜென்டினா ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில் குரோஷியா வீரர் கோல் அடித்தார்.
    • 2வது பாதி ஆட்டத்தின் முடிவில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரை இறுதி ஆட்டங்களில் தோல்வி அடைந்த குரோஷியா-மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஜோஸ்கோ குவார்டியோல் தமது அணிக்கான முதல் கோல் அடித்தார்.

    பதிலுக்கு 9வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் அக்ரஃப் தாரி ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் சமநிலையில் இருந்தது. இதையடுத்து 42வது நிமிடத்தில் குரோஷியா வீரர் மிஸ்லாவ் ஒர்சிக் தமது அணிக்கான 2வது கோலை அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்ட முடிவில் குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

    இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் எதுவும் அடிக்கவில்லை. கூடுதல் நேர ஆட்ட முடிவிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற குரோஷியா இந்த உலக கோப்பை தொடரில் 3வது இடத்தை பிடித்தது.

    • ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு இறுதி ஆட்டம்.
    • இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது. அல்பேத் ஸ்டேடியத்தில் ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் தியோ ஹெர்னாண்டஸ் தமது அணிக்கான முதல் கோலை அடித்தார். பதில் கோல் அடிக்க மொராக்கோ வீரர்கள் தீவிரமாக முயன்றனர்.

    எனினும் அவர்களது முயற்சிகள் வெற்றி பெறவில்லை. முதல் பாதி ஆட்ட நிறைவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தின் 79 வது நிமிடத்தில் மற்றொரு பிரான்ஸ் வீரர் கோலோ முவானி தனது அணிக்கான 2வது கோலை அடித்தார். இதனால் பிரான்ஸ் வெற்றி உறுதியானது. கூடுதல் ஆட்ட நேர முடிவு வரை  கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் உலக கோப்பை தொடரில் 4வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.

    இந்த உலகக் கோப்பையில் கணிக்க முடியாத ஒரு அணியாக கருதப்பட்ட மொராக்கோ, அரை இறுதியை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையை படைத்தது. எனினும் இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் அந்த அணி வெளியேறியது அந்நாட்டு ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அரையிறுதி போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

    • முதல் கோல் அடித்து வெற்றி கணக்கை தொடங்கி வைத்தார் மெஸ்சி.
    • முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, குரோஷியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் கோல் போடுவதற்கு அர்ஜென்டினா வீரர்கள் தீவிரம் காட்டினார்.

    34வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சி முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். 39 வது நிமிடத்தில் அந்த அணியின் மற்றொரு வீரர் ஜூலியன் அல்வொரஸ் கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.


    2வது பாதியின் 69 வது நிமிடத்தில் மெஸ்சி கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி அல்வொரஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினா வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் ஆட்ட நேர முடிவு வரை குரோஷியா வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதையடுத்து 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்திய அர்ஜென்டினா 6வது முறையாக உலக கோப்பை இறுதி போட்டிக்குள் நுழைந்தது. 

    • குரோஷியா அணி இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை.
    • அர்ஜென்டினா அணி அரை இறுதி ஆட்டங்களில் தோல்வி அடைந்ததில்லை.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அரையிறுதி ஆட்டங்களுக்கு அர்ஜென்டினா, பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ அணிகள் முன்னேறியுள்ளன. இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் முதலாவது அரை இறுதியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோதுகிறது.

    கடந்த உலகக் கோப்பையில் இறுதி சுற்றில் தோல்வியை தழுவிய குரோஷியா, இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. நடப்பு உலகக் கோப்பை தொடரில் அந்த அணி எந்த போட்டியிலும் தோல்வியை சந்திக்கவில்லை. 1978, 1986-ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா, அரை இறுதி ஆட்டங்களில் இதுவரை தோல்வி அடைந்ததில்லை.

    அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி தமது நாட்டிற்கு உலகக் கோப்பையை பெற்று தர இதுவே கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் உள்ளதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×