search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபினி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம் - மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
    X

    கபினி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம் - மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.
    மேட்டூர்:

    கபினி அணையின் நிர்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது.

    இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்தது. 84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 81 அடியை தாண்டியது.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 23-ந் தேதி மதியம் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது.

    23-ந் தேதி காலையில் 1,299 கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 18 ஆயிரத்து 428 கன அடியாக இருந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    இதற்கிடையே கபினி அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அணையில் இருந்து நீர்திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

    கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை 81 அடியாக இருந்தது. அணைக்கு 2440 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    124.8 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.35 அடி யாக இருந்தது. அணைக்கு 5715 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கர்நாடக பாசன தேவைக்காக 3464 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிய தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் படிப்படியாக சரிய வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 16 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 11 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கலில் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்வதுடன் உற்சாகமாக படகு சவாரியும் சென்றனர்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இன்று காலை மேட்டூர் அணைக்கு 13 ஆயிரத்து 694 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து குடி நீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து வரும் குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 53.04 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 54.71 கன அடியாக இருந்தது. பிற்பகல் 55 அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×