search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலூர் அருகே தொழில் அதிபர் காருடன் கடத்தல்
    X

    மேலூர் அருகே தொழில் அதிபர் காருடன் கடத்தல்

    தொழில் அதிபர் மற்றும் அவரது உதவியாளர் காருடன் கடத்தப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியில் ‘‘சூப்பர் மேக்’’ என்ற பெயரில் ரப்பர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பைசல் வாரா பகுதியைச் சேர்ந்த ஜோசப் மேத்யூ (வயது60) இதனை நடத்தி வருகிறார்.

    இவருக்கு கேரளாவில் டீ எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்கள் உள்ளன. தொழிலதிபரான இவர், அடிக்கடி மதுரைக்கு வந்து ரப்பர் தொழிற்சாலையை பார்வையிட்டு செல்வது வழக்கம்.

    இன்று காலை ஜோசப் மேத்யூ, தனது உதவியாளர் மத்தாய் என்பவருடன் காரில் மதுரை புறப்பட்டார். டிரைவர் ஷியாம் காரை ஓட்டி வந்தார். காலை 8.30 மணியளவில் மேலூர் 4 வழிச்சாலையில் நரசிங் கம்பட்டி பிரிவில் இருந்து அரிட்டாபட்டிக்கு செல்லும் பாதையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது 2 கார்கள் வேகமாக வந்தன. அந்த கார்கள் ஜோசப் மேத்யூ வந்த காரை வழிமறித்து நின்றன.

    2 கார்களில் இருந்தும் திபு...திபுவென இறங்கிய சுமார் 9 பேர் கொண்ட கும்பல் ஜோசப் மேத்யூ வந்த கார் டிரைவர் ஷியாமை வெளியே இழுத்து சரமாரி தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அதற்குள் அந்த கும்பலில் சிலர் ஷியாமை கீழே தள்ளிவிட்டு தொழில் அதிபர் ஜோசப் மேத்யூ, அவரது உதவியாளர் மத்தாய் ஆகியோரை காருடன் மின்னல் வேகத்தில் கடத்திச் சென்றது.

    கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வந்த கார்களை எடுத்துக் கொண்டு தப்ப முயன்ற போது பொதுமக்கள் ஒரு காரை மடக்கினர். அதில் டிரைவர் மட்டுமே இருந்தான். அவனை பிடித்த பொதுமக்கள், மேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கலைக்கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். காருடன் பிடிபட்ட வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவனது பெயர் கார்த்திக், மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவன் என தெரியவந்தது.

    தொழில் அதிபர் காருடன் கடத்தப்பட்ட தகவல், சோதனை சாவடி மற்றும் போலீஸ் நிலையங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில், போலீசார் உஷார் படுத்தப்பட்டு, மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தனிப்படை அமைக்கப்பட்டும் தொழில் அதிபர்மற்றும் அவரது உதவியாளரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. தொழில் போட்டியில் ஜோசப் மேத்யூ கடத்தப்பட்டரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காருடன் சிக்கிய கடத்தல் கும்பலைச் சேர்ந்த கார்த்திக்கிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் தொழில் அதிபர் காருடன் கடத்தப்பட்ட சம்பவம், மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×