search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் பொருத்த வந்த அதிகாரிகளை பெண்கள் முற்றுகையிட்டனர்.
    X
    மோட்டார் பொருத்த வந்த அதிகாரிகளை பெண்கள் முற்றுகையிட்டனர்.

    விருத்தாசலம் அருகே குடிநீர் பிரச்சனை- அதிகாரிகளை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குடிநீர் குழாயில் புதிய மோட்டாரை பொருத்த கோரி அதிகாரிகளை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது முடப்புளி கிராமம். இங்கு 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதி பொதுமக்களின் வசதிக்காக முடப்புளி ஊராட்சி சார்பில் ஆழ்துளை மோட்டாருடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    கடந்த 6 மாதத்துக்கு முன்பு அந்த ஆழ்துளை மோட்டார் பழுதானது. இதனால் புதிய ஆழ்துளை மோட்டார் அமைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குடிநீருக்காக அந்த பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். அவர்கள் அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் அவலநிலை ஏற்பட்டது.

    கடந்த 15-ந் தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில் இது பற்றி புகார் மனு கொடுக்க பொதுமக்கள் முடிவு செய்து சென்றனர். ஆனால் கூட்டம் முடிந்து விட்டது என்று அதிகாரிகள் கூறினார்கள். அதனால் அவர்களால் மனு கொடுக்க முடியவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் உங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அப்போது அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து வந்து விட்டனர்.

    ஆனால் இதுவரை குடிநீர் பிரச்சனை தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் முடப்புளி கிராம மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

    இதையறிந்த ஊராட்சி செயலாளர் மற்றும் அதிகாரிகள் இன்று காலை திடீரென்று முடப்புளி கிராமத்துக்கு வந்தனர். அவர்கள் பழுதான பழைய ஆழ்துளை மோட்டாரை அகற்றி விட்டு அதற்குப்பதில் வேறு ஒரு பழைய மோட்டாரை பொருத்த முயன்றனர்.

    தகவல் அறிந்த அந்த பகுதி பெண்கள் உள்பட பொதுமக்கள் பா.ம.க. இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அந்த இடத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் மோட்டார் பொருத்தும் பணியை தடுத்தனர். அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த இடத்தில் பழைய மோட்டாரை பொருத்தாமல் புதிய மோட்டார்தான் பொருத்த வேண்டும் என்று கோரி கோ‌ஷம் எழுப்பினர். இதையடுத்து பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய மோட்டார் அமைக்கப்படும் என உறுதி அளித்தனர். அதற்கு இன்றுக்குள் புதிய மோட்டார் அமைக்க வேண்டும். இல்லையென்றால் நாளை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×