search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை.
    X
    கடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை.

    மேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்பியது

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றிரவு மீண்டும் 120 அடியை தாண்டி நடப்பாண்டில் 3-வது முறையாக அணை நிரம்பியது.
    மேட்டூர்:

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் மேட்டூர் அணைக்கு கடந்த 45 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் கடந்த மாதம் 23-ந் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை தாண்டியது. பின்னர் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் சரிந்தது.

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த 11-ந் தேதி மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியது.

    தொடர்ந்து மேட்டூர் அணைக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்ததால் அணை பாதுகாப்பு கருதி கூடுதல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 119.25 அடியாக சரிந்தது.

    இதற்கிடையே கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று 80 ஆயிரம் கன அடியாக சரிந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவு 50 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

    இதனால் நேற்று காலை 11.25 கன அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றிரவு மீண்டும் 120 அடியை தாண்டி நடப்பாண்டில் 3-வது முறையாக அணை நிரம்பியது.

    கடந்த 2005-ம் ஆண்டு மேட்டூர் அணை 5 முறை நிரம்பியது. அதன் பிறகு நடப்பாண்டில் நேற்றிரவு 3-வது முறையாக நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120.21 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 75 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் அணையில் இருந்து 75 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து நேற்று 98 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    கபினி அணையில் இருந்து மட்டும் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறையும்.

    ஒகேனக்கலில் நேற்று காலை 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று தண்ணீர் வரத்து 75 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கலில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்றும் தடை விதிக்கப்பட்டிருந்தது.



    Next Story
    ×