search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி திட்டம் - ஆட்டோ டிரைவர் சிக்கினார்
    X

    இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி திட்டம் - ஆட்டோ டிரைவர் சிக்கினார்

    இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது தொடர்பாக ஆட்டோ டிரைவர் பைசலை மடக்கிப் பிடித்த போலீசார் அவரை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். #ArjunSampath
    கோவை:

    இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர்சாதிக் அலி, திண்டிவனம் இஸ்மாயில், பல்லாவரம் சம்சுதீன், ஓட்டேரி சலாவுதீன், கோவை என்.எச்.ரோடு ஆசிக் ஆகிய 5 பேரை கோவை வெரைட்டி ஹால் போலீசார் கைது செய்தனர்.

    இவர்களில் இஸ்மாயில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினராக உள்ளார். மற்ற 4 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தீவிர ஆதரவாளர்களாக இருந்துள்ளனர்.

    இவர்கள் இந்து மக்கள் (தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத், சக்தி சேனா நிறுவனர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்யும் சதி திட்டத்துடன் கோவை வந்தது தெரிய வந்தது.

    சதிதிட்டத்துக்கு உக்கடத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பைசல் (28), குனியமுத்தூர் அன்வர் (29) ஆகியோர் உதவி செய்வார்கள் என ஆசிக் தன்னிடம் கூறியதாக இஸ்மாயில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

    இதைத்தொடர்ந்து ஆட்டோ டிரைவர் பைசலை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    இவர் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்யும் சதி திட்டத்தை பற்றி எனக்கு எதுவும் தெரியாது, நான் சதி திட்டத்துக்கு எந்த உதவியும் செய்யவில்லை, உதவி செய்வதாக யாரிடமும் உறுதி அளிக்கவில்லை என கூறி உள்ளார்.

    ஆசிக்குடன் இவரது தொடர்புகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போனில் இருந்து யார்-யாரிடம் பேசி உள்ளார்? இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சென்னை கும்பலுடன் பைசல் இதற்கு முன்பு பேசி உள்ளாரா? என விவரங்கள் சேகரித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பைசலை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது என அவர் கூறி வருகிறார்.

    உண்மையிலேயே அவர் சசி திட்டத்துக்கு உதவி செய்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. சதி திட்டத்துக்கு இவர் உதவி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதா? என பார்த்து வருகிறோம். விசாரணை முடிவில் தான் அவர் கைது செய்யப்படுவாரா? என தெரிய வரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள குனியமுத்தூரை சேர்ந்த அன்வரை போலீசார் தேடி வருகின்றனர். #ArjunSampath


    Next Story
    ×