search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல் - அரசு மருத்துவமனையில் 3 பேர் அனுமதி
    X

    நெல்லை மாவட்டத்தில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல் - அரசு மருத்துவமனையில் 3 பேர் அனுமதி

    நெல்லையில் இளம்பெண் உள்பட 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. #dengue
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் இருந்தன. டெங்கு காய்ச்சலால் பலர் இறந்த‌னர். ஏராளமானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நெல்லை அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அரசு தீவிர நடவடிக்கை எடுத்து கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டது.

    இதற்காக சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாக சென்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை முடிந்து வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள‌ நிலையில் மாவட்டத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் எட்டிப்பார்க்க தொடங்கியுள்ளது.

    நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இதை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் டெங்கு வார்டுகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. காய்ச்சல் நோயாளிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே நேற்று பாளையில் மர்ம காய்ச்சலுக்கு 6 மாத பெண்குழந்தை இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் வாலிபர் உள்பட 3 பேர் டெங்கு அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆலங்குளம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரைட்சிங் (வயது 30). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குறையவில்லை.

    ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் செய்யப்பட்ட பரிசோதனையில், அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரது ரத்த மாதிரியை எடுத்து பரிசோதித்து பார்த்ததில், அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு வார்டில் அவரை சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதேபோன்று நேற்று மாலையில் இளம்பெண் உள்பட மேலும் 2 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களும் சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. #dengue
    Next Story
    ×