search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடல் சீற்றம் எதிரொலி: ராமேசுவரம் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு
    X

    கடல் சீற்றம் எதிரொலி: ராமேசுவரம் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு

    தமிழகத்தையொட்டி உள்ள தெற்குமேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சியால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மழை ஓய்ந்திருந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணி முதல் கனமழை பெய்தது. 9 மணி வரை மழை நீடித்ததால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் கடும் அவதியடைந்தனர்.

    பரமக்குடி, திருவாடானை, திருப்புல்லாணி, கமுதி, சாயல்குடி ஆகிய பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கண்மாய், ஏரிகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் விவசாய பணிகள் தீவிர மடைந்துள்ளன.

    மண்டபம், ராமேசுவரம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஏற்கனவே கடலுக்கு சென்றுள்ள மீனவர்களை உடனே கரைக்கு திரும்புமாறு மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    ராமேசுவரத்தில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது. ராமேசுவரம் பஸ் நிலையம், கோவில், பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் மணி மண்டபம் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

    குறிப்பாக தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. அலைகள் பனைமர உயரத்துக்கு எழும்புகின்றன. மேலும் காற்று காரணமாக தனுஷ்கோடி சாலை மணலால் மூடப்பட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், இன்று சில பகுதிகளில் மட்டுமே மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    விருதுநகர் மாவட்டத் தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் மட்டுமே பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர், சாத்தூர், சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில அவ்வப்போது லேசான மழை பெய்தது.

    ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக அய்யனார் கோவில் ஆறு, முள்ளியாறு, பேயனாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ள 6-வது மைல் ஏரியின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, சோழவந்தான், மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நகரில் இன்று காலை அரைமணி நேரம் மழை பெய்தது. மற்ற இடங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

    Next Story
    ×