search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் - விழுப்புரம் மாவட்டங்களில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை
    X

    கடலூர் - விழுப்புரம் மாவட்டங்களில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை

    கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது.

    இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லமுடியாமல் கடும் அவதியடைந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை 7 மணியளவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. சிறிது நேரத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கத்தது.

    பண்ருட்டி, காடாம் புலியூர், புதுப்பேட்டை, கண்டரக்கோட்டை போன்ற பகுதிகளில் இரவு 8 மணியளவில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. காற்று வேகமாக வீசியதால் சாலையோரம் நின்ற மரங்கள் சாய்ந்து விழுந்தன.

    மரக்கிளைகள், விளம்பர பதாகைகள் காற்றில் பறந்து விழுந்தன. சுமார் 1 மணிநேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. பல இடங்களில் தென்னை, பலா, முந்திரி, வாழை போன்ற மரங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. பண்ருட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய மின்சாரம் தடை ஏற்பட்டது. இந்த பகுதிகள் இருளில் மூழ்கியது.

    பண்ருட்டி அருகே உள்ள தெற்கு மே.மாம்பட்டு காலனியில் வேல் என்பவரது வீட்டு முன்பு நின்ற தென்னைமரத்தில் இரவு 9 மணியளவில் இடி விழுந்து தீ பிடித்து எரியதொடங்கியது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் பண்ருட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சக்கரவர்த்தி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். தீ மேலும் அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்து அணைத்தனர்.

    பண்ருட்டி - அரசூர் சாலையில் அம்மாபேட்டை அருகே சாலையோரம் நின்ற புளியமரம் ஒன்று சூறாவளிக்காற்றில் சாய்ந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ரமேஷ், மணிகண்டன் ஆகியோர் மீது மரக்கிளை விழுந்ததால் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விருத்தாசலம் மற்றும் அதன்சுற்றியுள்ள பகுதிகளும் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 30 நிமிடம் பலத்த மழை கொட்டியது. சூறாவளிக் காற்றும் வீசியதால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

    ஸ்ரீமுஷ்ணம், குணமங்கலம், அக்ரஹாரம், எசலூர், புதுக்குப்பம், நாச்சியார்பேட்டை போன்ற பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் திடீரென்று காற்றுடன் சாரல் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழை கொட்டியது. சுமார் 1 மணிநேரம் மழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    அதேபோல் சூறாவளிக் காற்றும் பயங்கரமாக வீசியது. சாலையோரம் நின்ற மரங்களின் கிளைகள் ஒடிந்து விழுந்தன. ஓட்டு வீடுகளில் இருந்த ஓடுகள் காற்றில் பறந்தன.

    ஸ்ரீமுஷ்ணம் பழைய பஸ்நிலையத்தில் உள்ள மேற்கூரையின் கீழ் பயணிகள் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தன. அப்போது வீசிய சூறாவளிக் காற்றில் பஸ்நிலையத்தில் உள்ள மேற்கூரை காற்றில் பறந்தன. இதனால் அங்கு நின்ற பயணிகள் அலறியடித்து கூச்சல் போட்டு ஓடினர்.

    சிறுபாக்கம் பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணிநேரம் பலத்த மழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

    இதேபோல் மாங்குளம், எஸ்.புதூர், மேட்டூர், மா.குடிகாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. நேற்று 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது.

    இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென்று சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. திருக்கோவிலூர் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் குளிர்ந்தகாற்று வீசியது. பின்பு அது சூறாவளிக் காற்றாக மாறியது.

    திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1 மணிநேரம் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    சூறாவளிக்காற்றில் திருக்கோவிலூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. திருக்கோவிலூர்- விழுப்புரம் நெடுஞ்சாலையில் பெரிய புளியமரம் ஒன்று சாய்ந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் 2 மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பேரூராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மரங்கள் வெட்டும் பணியில் ஈடுபட்டனர். திருக்கோவிலூர் பகுதியில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் பல கிராமங்களுக்கு மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த கிராமங்கள் இருளில் மூழ்கியது.
    Next Story
    ×