search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சம்பா சாகுபடி வயல்களில் மீண்டும் மழைநீர் தேங்கியுள்ள காட்சி
    X
    சம்பா சாகுபடி வயல்களில் மீண்டும் மழைநீர் தேங்கியுள்ள காட்சி

    டெல்டா மாவட்டங்களில் மீண்டும் தொடர் மழை- வயல்களில் வடியாத வெள்ள நீர்

    காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பலவீனமான கரையோர பகுதிகளில் அப்பகுதி மக்கள் மணல் மூட்டைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுக்கி வைத்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று மாலை முதல் மீண்டும் தொடர் கனமழை பெய்து வருகிறது.

    டெல்டா மாவட்டங்களில் கடந்த வாரம் விடாது பெய்த தொடர் கனமழையால் 1 லட்சத்துக்கும் அதிகமான விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் சம்பா-தாளடி இளம் நாற்றுகள் மூழ்கி பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மழை, வெள்ள நீரை வயல்களில் இருந்து வடியவைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் கடந்த நான்கு நாட்களாக மழை முழுவதுமாக விட்டிருந்த நிலையில் ஒரு சில இடங்களில் வயல்களில் தேங்கிய மழைநீர் வடிய தொடங்கியது. இதையடுத்து விவசாயிகள் சம்பா-தாளடி நெற்பயிர்களை காப்பாற்றும் முயற்சியிலும், சாகுபடி பணியிலும் மும்முரம் காட்டினர்.

    இந்நிலையில் நேற்று மாலை முதல் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மீண்டும் வயல்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சம்பா-தாளடி பயிர்களை எப்படி காப்பாற்றுவது என தெரியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கரில் மழைநீர் வடிந்து வந்த நிலையில் மீண்டும் மழை பெய்து வருகிறது. வேளாங்கண்ணி,  நாகூர், திட்டச்சேரி மற்றும் வேதாரண்யம் பகுதகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதேபோல் மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் இன்று காலை வரை கனமழை பரவலாக பெய்து வருகிறது.

    இந்த தொடர் கனமழை காரணமாக மாவட்டங்களில் முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறக்கப்படுவதால் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கொள்ளிடம் கரையோர விவசாயிகள், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர் மழை மற்றும் காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பலவீனமான கரையோர பகுதிகளில் அப்பகுதி மக்கள் மணல் மூட்டைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுக்கி வைத்துள்ளனர்.

    திருவாரூர் கமலாலய குளம் மழைநீரால் நிரம்பி கடல்போல் காட்சி அளிப்பதை காணலாம்

    இந்நிலையில் வானிலை இலாக்கா மேலும் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவித்துள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    மேலும் இந்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காய்கறிகள் தட்டுப்பாட்டால் விலை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    தொடர் மழை காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



    Next Story
    ×