search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஊட்டி கோத்தகிரி சாலையை கடந்து செல்லும் பாகுபலி யானையை காணலாம்
    X
    ஊட்டி கோத்தகிரி சாலையை கடந்து செல்லும் பாகுபலி யானையை காணலாம்

    ஒரு வருடத்துக்கு பிறகு காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்த பாகுபலி யானை

    வனத்தை விட்டு வெளியேறி மீண்டும் ஊருக்குள் புகுந்துள்ள பாகுபலி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து, அடர்ந்த வனத்திற்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சிறுமுகை:

    மேட்டுப்பாளையம், சுற்றுவட்டார பகுதிகளான நெல்லிமலை, வெல்ஸ்புரம், கல்லாறு, ஓடந்துறை, ஊமப்பாளையம், பாலப்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆண் காட்டு யானை ஒன்று சுற்றி வந்தது.

    உருவத்தில் பெரிதாக காணப்பட்டதால் இந்த யானையை மக்கள் பாகுபலி யானை என பெயர் வைத்து அழைத்து வந்தனர்.

    யானைகளின் இயல்பை மீறி இந்த பாகுபலி யானை பிற யானைக்கூட்டங்களோடு சேராமலும், வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்லாமலும் தொடர்ச்சியாக குறிப்பிட்ட கிராமப் பகுதிகளில் மட்டும் சுற்றி வந்தது.

    அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து தனக்கு பிடித்த வாழை, மக்காசோளம், கரும்பு போன்ற உணவு பயிர்களை சாப்பிட்டும் வந்தது.

    இந்த யானையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பாகுபலி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக டாக்டர்களுக்கு உதவியாக டாப்சிலிப்பில் இருந்து கலீம், மாரியப்பன், வெங்கடேஷ் என்ற 3 கும்கிகளும் வரவழைக்கப்பட்டது.

    கும்கி யானைகள், 50 வேட்டை தடுப்பு காவலர்களுடன் யானையை தேடி அலைந்தனர். ஆனால் யானை பிடிபட்டால் அவர்களுக்கு போக்கு காட்டியது. இதையடுத்து வனத்துறையினர் பாகுபலி யானையை பிடிப்பதை தற்காலிகமாக கைவிட்டனர்.

    அதன்பின்னர் கடந்த சில மாதங்களாக பாகுபலி யானையின் நடமாட்டம் அந்த பகுதியில் இல்லை. மேலும் யார் கண்ணிலும் யானை தென்படவில்லை. இதனால் மக்களும் நிம்மதியாக இருந்தனர்.

    இந்த நிலையில் ஓராண்டுக்கு பிறகு மீண்டும் பாகுபலி யானையின் நடமாட்டம் அந்த பகுதியில் தெரியவந்துள்ளது. யானை ஏற்கனவே சுற்றி திரிந்த கிராமங்களிலும், ஊட்டி கோத்தகிரி சாலையிலும் சுற்றி திரிய தொடங்கியுள்ளது.

    கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் வனத்தை விட்டு வெளியில் வரும் பாகுபலி யானை ஊட்டி கோத்தகிரி சாலையில் சிறிது நேரம் சுற்றி திரிந்து விட்டு, அதன்பின்னர் சாவகாசமாக சாலையை கடந்து செல்கிறது. யானை வருவதை பார்த்த வாகன ஓட்டிகள் உடனடியாக வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்தி விட்டு, சாலையை கடக்கும் வரை காத்திருந்து பின்னர் செல்கின்றனர்.

    தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதால் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் இந்த சாலையில் சென்று கொண்டிருக்கின்றன.

    இப்படிபட்ட சூழ்நிலையில் பாகுபலி யானை நடமாட்டம் சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வனத்தை விட்டு வெளியேறி மீண்டும் ஊருக்குள் புகுந்துள்ள பாகுபலி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனத்திற்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு பாகுபலி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
    Next Story
    ×