search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆதிச்சநல்லூர் அகழாய்வில் ஒரே முதுமக்கள் தாழியில் 2 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
    X

    2 எலும்புக்கூடுகள் இருந்த முதுமக்கள் தாழியை காணலாம்.

    ஆதிச்சநல்லூர் அகழாய்வில் ஒரே முதுமக்கள் தாழியில் 2 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

    • இரட்டை மூடிகளுடன் இருந்த அந்த முதுமக்கள் தாழிக்குள் 2 பேரின் மண்டை ஓடுகள், கை, கால் எலும்புகள் போன்றவை இருந்தன.
    • மேலும் சிறு பானைகளும், இரும்பாலான உளியும் இருந்தன.

    ஸ்ரீவைகுண்டம்:

    பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் மற்றும் சைட் மியூசியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு நடைபெற்ற அகழாய்வில் கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அகழாய்வில் கல்வட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு முதுமக்கள் தாழியை தொல்லியல் துறையினர் திறந்து பார்த்து ஆய்வு செய்தனர். இரட்டை மூடிகளுடன் இருந்த அந்த முதுமக்கள் தாழிக்குள் 2 பேரின் மண்டை ஓடுகள், கை, கால் எலும்புகள் போன்றவை இருந்தன. மேலும் சிறு பானைகளும், இரும்பாலான உளியும் இருந்தன.

    இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், ''முதுமக்கள் தாழியில் இருந்தது கணவன்-மனைவியின் எலும்புக்கூடுகளா? அல்லது தாய்- குழந்தையின் எலும்புக்கூடுகளா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது'' என்றனர்.

    இதுதொடர்பாக தொல்லியல் ஆர்வலர்கள் கூறும்போது, 'கலம்செய் கோவே, கலம்செய் கோவே' என்ற புறநானூறு பாடலில், போரில் கணவர் இறந்ததால், அவரது உடலுடன் தன்னையும் அடக்கம் செய்யுமாறு மனைவி கூறுவதாக உள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், ஒரே முதுமக்கள் தாழியில் 2 எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன' என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×