search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அழைப்பு விடுத்த ஓ.பி.எஸ். - சற்றும் யோசிக்காமல் நிராகரித்த அ.தி.மு.க.
    X

    அழைப்பு விடுத்த ஓ.பி.எஸ். - சற்றும் யோசிக்காமல் நிராகரித்த அ.தி.மு.க.

    • அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்தார்.
    • ஓ.பி.எஸ். அழைப்புக்கு அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதில்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மோசமான தோல்வியை தழுவின. தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன.

    இந்த நிலையில், தேர்தல் தோல்வியை அடுத்து அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ""ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்." இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே" என்னும் கழக நிறுவனர், புரட்சித் தலைவர், மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம்."

    "நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். மாண்புமிகு நம் அம்மா அவர்கள் உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்," என்று குறிப்பிட்டிருந்தார்.

    அ.தி.மு.க.-வினரை ஒன்றிணைந்து செய்லபட ஓ. பன்னீர்செல்வம் விடுத்த அழைப்பை அ.தி.மு.க. நிராகரித்துள்ளது. கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "சசிகலாவை வெளியிட்டுள்ள அறிக்கை நானும் பார்த்தேன். அ.தி.மு.கவை காப்பாற்றுவேன். அனைவரும் வாருங்கள், என்றார். அவர் குடியிருக்கும் வீடடிற்கு அம்மாவின் பெயர் வைத்து இருக்கிறார் சசிகலா. அந்த வீட்டிற்கு அனைவரும் வாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அவர் அறிக்கை வெளியிட்டு எவ்வளவு நேரமாகுகிறது. எத்தனை தொண்டர்கள் அவர் பின்னால் சென்றார்கள் என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்."

    "எப்படியாவது அ.தி.மு.க. தொண்டர்களிடையே குழப்பதை ஏற்படுத்தவே வேண்டும் என்று சிலர் முயற்சித்து வருகின்றனர். இந்த குழப்பங்களை களைய எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள், நிர்வாகிகளை ஒன்றிணைந்து, கட்சியின் செயல்பாடுகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்."

    "2019 நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க., புதிய நீதிகட்சி, புதிய தமிழகம், த.மா.கா. போன்ற கட்சிகளுடன் கூட்டணியுடன் நாங்கள் வாங்கிய வாக்குகள் 18 சதவீதம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்து தற்போது வாங்கிய வாக்குகள் 20.46 சதவீதம் பெற்று இருக்கிறோம்."

    "2019-ம் ஆண்டு தி.மு.க. 32.5 சதவீதம் பெற்றிருந்தது. தற்போது முடித்து நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 26.93 சதவீதம் பெற்றுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு 6 சதவீதம் வாக்குகள் குறைந்தள்ளது. ஆனால், அ.தி.மு.க. கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலைவிட தற்போது நடந்து முடித்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 2 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளது. இதுவே எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை சிறப்பாக நடத்தி வருகிறார்."

    "அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை சந்தித்தபோது அதற்கு முக்கிய கருவியாக இருந்து கட்சிக்கு மேலும், மேலும் பல சோதனைகளை கொடுத்தவர் ஓ.பன்னீர் செல்வம் தான். அ.தி.மு.க. பொதுக் குழுவை அவமதித்து விட்டு, தொண்டர்கள் கோவிலாக வணங்கும் அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்தை குண்டர்கள் உதவியோடு சூறையாடிச் சென்றவர் ஓ.பி.எஸ்.தான்."

    "முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையோடு கைகோர்த்துக்கொண்டு தன் சுயநலத்திற்காக அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர் தான் இந்த ஓ பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வை முடக்க முயற்சித்த அவர் தற்போது எம்.ஜி.ஆர். பாடலை பாடி அனைவரும் ஒன்றிணைவோம் வா என அழைப்பு விடுப்பதற்கு எந்த ஒரு தார்மீக உரிமையும், தகுதியும் இல்லை," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×