search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஏப்.23-ந்தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
    X

    ஏப்.23-ந்தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

    • 21-ந்தேதி அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பாடாகிறார்.
    • 22-ந்தேதி புதூரில் எதிர்சேவையும், 23-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் நடக்கிறது.

    மதுரை:

    தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். வருடத்தின் 12 மாதங்களும் மீனாட்சி அம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் சித்திரை மாதத்தில் நடக்கும் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனைத்தொடர்ந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடக்கும்.

    மதுரையில் சைவமும், வைணவமும் இணையும் வகையில் நடக்கும் சித்திரை திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (12-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழா இன்று தொடங்கி வருகிற 23-ந்தேதி வரை நடக்கிறது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மறுநாள் (21-ந்தேதி) விமரிசையாக நடைபெறுகிறது. அன்று இரவு மணக்கோலத்தில் சுவாமி-அம்பாள் யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் வீதி உலா வருகின்றனர்.

    22-ந்தேதி காலை திருத்தேரோட்டம் நடக்கிறது. 23-ந் தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.

    சித்திரை திருவிழாவின் நடைபெறும் நாட்களில் தினமும் இரவு சுவாமி-அம்பாள் 4 மாசி வீதிகளில் உலா வருகிறார்கள். அப்போது சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கானோர் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதன் காரணமாக மாசி வீதிகள் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும்.

    மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டும்போது பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற 19-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது. 21-ந்தேதி அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பாடாகிறார்.

    22-ந்தேதி புதூரில் எதிர்சேவையும், 23-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் நடக்கிறது.

    இந்நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவையொட்டி ஏப்.23-ந்தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏப்.23-ந்தேதிக்கு பதிலாக மே 11-ந்தேதி சனிக்கிழமை வேலை நாள் என்று மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.

    Next Story
    ×