search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கனகசபை விவகாரம்: தீட்சிதர்கள் வைத்த பதாகையை அகற்றிய அதிகாரிகள்.. ஆனாலும் சிக்கல் நீடிப்பு
    X

    கனகசபை விவகாரம்: தீட்சிதர்கள் வைத்த பதாகையை அகற்றிய அதிகாரிகள்.. ஆனாலும் சிக்கல் நீடிப்பு

    • பதாகையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் வாக்குவாதம் செய்தனர்.
    • பக்தர்கள் மற்றும் தீட்சிதர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் திருச்சிற்றம்பல மேடை என்று கூறப்படும் கனகசபை மீது ஏறி நின்று சாமியை தரிசனம் செய்வது வழக்கம். கனகசபையில் ஏறி தரிசனம் செய்யப் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

    இந்நிலையில், ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு, கனக சபையில் ஜூன் 24, 25, 26 மற்றும் 27 ஆகிய நாள்களில் வழிபடத் தடை விதித்து தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை வைத்திருந்தனர். அதை போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றினர். பதாகையை அகற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் வாக்குவாதம் செய்தனர்.

    பதாகை அகற்றப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த பக்தர்கள், இன்று கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய முயன்றனர். அப்போது கதவு திறக்கப்படவில்லை. எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள், பக்தர்களை உள்ளே விடாமல் கதவை உள்பக்கமாக பூட்டியதாக தகவல் வெளியானது. இதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. கோவில் வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பக்தர்கள் மற்றும் தீட்சிதர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதற்கிடையே பதாகையை அகற்றச் சென்ற அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அறநிலையத்துறை அதிகாரி சரண்யா கொடுத்த புகாரின் அடிப்படையில், தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×