search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடலில் மீனவர்கள் மாயமானால் 3 மாதங்களில் இறப்பு சான்றிதழ்- விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
    X

    கடலில் மீனவர்கள் மாயமானால் 3 மாதங்களில் இறப்பு சான்றிதழ்- விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

    • குமரி மாவட்டத்தில் 72 கி.மீ. தூரத்தில் கடற்கரை உள்ளது.
    • அனைத்து மீனவ கிராமங்களிலும் மீன் பதனிடும் நிலையங்கள் நிறுவ வேண்டும்.

    நாகர்கோவில்:

    மீன் பிடிக்க செல்லும்போது கடலில் மீனவர்கள் காணாமல் போனால் 3 மாதங்களில் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி. பேசினார்.

    பாராளுமன்றத்தில் மீன்வள பட்ஜெட் மானியங்கள் குறித்த கூட்டத் தொடர் நடந்தது. இதில் விஜய் வசந்த் எம்.பி. பேசியபோது கூறியதாவது:-


    குமரி மாவட்டத்தில் 72 கி.மீ. தூரத்தில் கடற்கரை உள்ளது. கடற்கரையோரமாக 48 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 5 லட்சம் மக்கள் கடலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். குமரி மாவட்ட கடற்கரையில் அடிக்கடி நிகழும் கடல் அரிப்பு காரணமாக மீனவர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பெரும் அச்சம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண கடற்கரை முழுவதும் தடுப்பு சுவர்கள் மற்றும் தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும். இதற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.

    மீன்பிடிக்க சென்று கடலில் காணாமல் போகும் மீனவர்களுக்கான இறப்பு சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு பிறகு தான் வழங்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் அந்த குடும்பம் பல இன்னல்களை சந்திக்கிறது. எனவே இதுபோன்ற சூழலில் உயர்மட்ட குழு அமைத்து 3 மாதத்திற்குள் இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீனவர் கடலில் இறந்தால் அவர்களது குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.


    டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியத்தின் அளவை உயர்த்த வேண்டும். குமரி மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் சாலை உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க நிதி ஒதுக்க வேண்டும். தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் பணிகளை விரைவில் முடிக்கவும், குளச்சல் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யவும், வாணியகுடியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அனைத்து மீனவ கிராமங்களிலும் மீன் பதனிடும் நிலையங்கள் நிறுவ வேண்டும். தேங்காப்பட்டணம்-இரயுமன்துறை இடையே மேம்பாலம் அமைத்து, ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை கடற்கரை சாலைகளை சீரமைக்க வேண்டும். வெளிநாட்டு சிறைகளில் வாடும் இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க கடல்சார் பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு உயர்மட்ட குழு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×