என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் பேர் திரள்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் சிறப்புரை
- சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் 9 லட்சம் சதுரஅடி பரப்பளவில் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
- பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரது உருவங்கள் பொறிக்கப்பட்டு கோட்டை போன்ற வடிவில் மாநாட்டின் முகப்பு பகுதி காட்சி அளிக்கிறது.
சேலம்:
சேலத்தில் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டையொட்டி சேலம் மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.
21-ந் தேதி அன்று காலை 9 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்குகிறது. தி.மு.க. துணை பொது செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி. தி.மு.க. கொடியை ஏற்றி வைக்கிறார். இதற்காக மாநாட்டு முகப்பு பகுதியில் 100 அடி உயரத்தில் பிரமாண்ட கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர் தூத்துக்குடி ஜோயல் வரவேற்று பேசுகிறார். இதையடுத்து பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசுகிறார்கள். காலை 11 மணியில் இருந்து மாலை 6 மணி வரையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
அதன் பின்னர் மாலை 6.30 மணியளவில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு தலைவர் உரையை நிகழ்த்துகிறார். அதனை தொடர்ந்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு, பொது செயலாளர் துரைமுருகன் ஆகியோரும் பேசுகிறார்கள். இறுதியாக 7.30 மணியளவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாநாட்டில் நிறைவு பேருரை மற்றும் சிறப்புரை ஆற்றுகிறார்.
இளைஞரணி மாநாட்டையொட்டி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் 9 லட்சம் சதுரஅடி பரப்பளவில் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
1.5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான முறையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு திடலில் லட்சக்கணக்கானோர் மாநாட்டை கண்டுகளிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் பேர் திரள்கிறார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மாநாட்டு திடலில் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு நுழைவு பகுதியில் பிரமாண்டமான முறையில் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரது உருவங்கள் பொறிக்கப்பட்டு கோட்டை போன்ற வடிவில் மாநாட்டின் முகப்பு பகுதி காட்சி அளிக்கிறது. பந்தல் அலங்காரமும் சிறப்பான முறையில் செய்யப்பட்டு உள்ளது.
மாநாட்டையொட்டி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பிரமாண்டமான புல்லட் பேரணி 20-ந் தேதி மாலையில் நடைபெறுகிறது. மாநாட்டு திடலில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து புறப்படும் இந்த புல்லட் பேரணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.
அப்போது டிரோன்கள் மூலமாக மாநாட்டு விளக்க காட்சியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போட்டு காண்பிக்கப்படுகிறது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் 20-ந் தேதி பிற்பகலில் சேலம் வருகிறார்கள். ஓமலூர் விமான நிலையத்தில் இருந்து இருவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதற்காக அங்கிருந்து மாநாடு நடைபெறும் இடம் வரையில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருவரையும் வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. கொண்டலாம்பட்டியில் மேற்கு மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதேபோன்று மேட்டு பட்டியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் விமான நிலையத்தில் இருந்து மாநாட்டு திடல் வரையில் 20 அடி தூரத்துக்கு ஒரு மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பத்தில் ராட்சத விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. வழிநெடுக தி.மு.க. கொடிகளும் பறக்க விடப்பட்டு உள்ளன.
மாநில உரிமை மீட்பு முழக்கம் என்கிற பெயரில் நடத்தப்படும் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.
இவர்கள் நாளை மறுநாள் 20-ந் தேதி அன்றே சேலத்தில் குவிய உள்ளனர். இப்படி வெளியூர்களில் இருந்து வரும் தி.மு.க. தொண்டர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் செய்துள்ளனர்.
மாநாட்டில் மொழி போர் தியாகிகளின் படங்கள் திறந்து வைக்கப்படுகிறது. பெரியார் நுழைவு வாயில், அண்ணா திடல், கலைஞர் அரங்கம், பேராசிரியர் மேடை, வீரபாண்டியார் கொடி மேடை, முரசொலி மாறன் புகைப்பட கண்காட்சி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
வீரபாண்டி ஆ.ராஜா, வீரபாண்டி செழியன், நீட் தேர்வுக்காக உயிர்நீத்த அனிதா, தனுஷ் ஆகியோரது பெயர்களில் தோரண வாயில்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
மாநாட்டில் மாநில சுயாட்சியை வலியுறுத்தும் வகையிலும், மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலும் மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
முடிவில் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி பிரபு நன்றி கூறுகிறார்.
இளைஞரணி மாநாட்டையொட்டி தி.மு.க.வினர் சேலம் மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வரவேற்பு பேனர்களை வைத்து, தி.மு.க. கொடிகளையும் பறக்கவிட்டுள்ளனர். இதனால் சேலம் தி.மு.க. மாநாடு 2 நாட்களுக்கு முன்பே களை கட்டி உள்ளது.
மாநாட்டையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் சேலத்தில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். மேற்கு மண்டல ஐ.ஜி. பவா னீஸ்வரி, சேலம் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் ஆகியோரின் மேற்பார்வையில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்