search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    108 ஆம்புலன்ஸ் மூலம் 85,256 பேருக்கு அவசர சிகிச்சை உதவி: கோவைக்கு 2-வது இடம்
    X

    108 ஆம்புலன்ஸ் மூலம் 85,256 பேருக்கு அவசர சிகிச்சை உதவி: கோவைக்கு 2-வது இடம்

    • கோவையில் 66 ஆம்புலன்ஸ்களில் 12 அதிநவீன ஆம்பு லன்ஸ், 4 பைக் ஆம்புலன்ஸ், 2 பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ், வால்பாறையில் ஜீப் ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்தவர்கள் பட்டியலில் திருவள்ளூர் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது.

    கோவை:

    தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 2000-க்கும் மேற்பட்ட 108 ஆம்பு லன்ஸ் வாகனங்கள் சேவையாற்றி வருகின்றன. குறுகிய மற்றும் நீண்ட தொலைவில் உள்ள மலை கிராமங்களிலும் இந்த சேவையை வழங்க ஜீப் மற்றும் பைக் ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கோவை மாவட்டத்தில் 66 ஆம்புலன்ஸ்களில் 12 அதிநவீன ஆம்பு லன்ஸ், 4 பைக் ஆம்புலன்ஸ், 2 பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ், வால்பாறையில் ஜீப் ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது. விபத்து, கர்ப்பிணிகள், முதியோர், தற்கொலை முயற்சி மற்றும் அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை நாடுகின்றனர். அவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்கவும், உயிர்களை காப்பாற்றவும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து சென்று சேவையாற்றி வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டவர்கள் குறித்து 108 ஆம்புலன்ஸ் பிரிவு அதிகாரி செல்வமுத்துகுமார் கூறியதாவது:-

    கோவை நகரில் இருந்து 108 ஆம்புலன்சுக்கு அவசர சிகிச்சை உதவிக்கு அழைத்தால் 9 நிமிடத்திற்குள் சம்பவ இடத்தை அடையும் வகையில் துரித சேவை அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு (2023) ஜனவரி 1 -ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை கர்ப்பிணிகள் 16,962 பேர், பச்சிளம் குழந்தைகள் 1,091 பேர், விபத்தில் சிக்கிய 15,567 பேர், சர்க்கரை நோயாளிகள் 2,673 பேர், ஆம்புலன்சில் 33 பிரசவம், உடல் உபாதையால் பாதித்த 5,830 பேர் என மொத்தம் 85,256 பேர் அவசர மருத்துவ சிகிச்சை கேட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்தவர்கள் பட்டியலில் திருவள்ளூர் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. 2-வது இடத்தை கோவை மாவட்டம் பெற்று உள்ளது. கோவை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 85,256 பேர் அவசர மருத்துவ சிகிச்சை உதவி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×