search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தங்க சிவலிங்கம் மாயமா?- திருவட்டார் கோவில் நகைகளை ஆய்வு செய்ய நீதிபதி நியமனம்
    X

    தங்க சிவலிங்கம் மாயமா?- திருவட்டார் கோவில் நகைகளை ஆய்வு செய்ய நீதிபதி நியமனம்

    • கோவில் கும்பாபிஷேகத்தின்போது பழைய கலசமும், தங்க ஆபரணங்களும் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை.
    • கோவிலின் பாதுகாப்பு அறையில் இருக்கும் நகைகளையும், கோர்ட்டில் சமர்ப்பித்த நகை பட்டியலையும் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும்.

    மதுரை:

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியைச் சேர்ந்த தங்கப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்க கோரி ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு உத்தரவுகள் பெறப்பட்டு உள்ளன. இந்த கோவிலின் கலசத்தை பாதுகாக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் கோவில் கும்பாபிஷேகத்தின்போது பழைய கலசமும், தங்க ஆபரணங்களும் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை. அவை எங்கு இருக்கின்றன என்று தெரியவில்லை. இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோதும் முறையான பதிலை கோவில் நிர்வாகம் தெரிவிக்கவில்லை.

    எனவே திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் தங்க சிவலிங்கம், பஞ்சலோக சிலைகள், பழைய கலசம் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்டவைகளை ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் வைத்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது கோவிலின் செயல் அலுவலர் ரத்தினவேல் நேரில் ஆஜரானார். கோவில் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அப்போது நீதிபதிகள், கோவிலின் நகைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. ஏன் தாமதம்? என கேள்வி எழுப்பினர்.

    பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    இந்த கோர்ட்டு பலமுறை உத்தரவிட்டும் கோவில் நகைகள் விவரங்களுடன் கூடிய பட்டியலை அறநிலையத்துறை அதிகாரிகள் சமர்ப்பிக்கவில்லை. இதனால் கோவிலின் செயல் அலுவலர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. அதன்பின்னர் அவசர அவசரமாக ஒரு குழு அமைத்து, நகைகளை சரிபார்த்ததாக பட்டியல் தயாரிக்கப்பட்டு இப்போது சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    எனவே கோர்ட்டு உத்தரவை முறையாக நிறைவேற்றாத கோவில் செயல் அலுவலர் ரத்தினவேல் பாண்டியன் மீது துறை ரீதியான நடவடிக்கையை அறநிலையத் துறை கமிஷனர் எடுக்க வேண்டும்.

    மேலும், இந்த வழக்கில் அறநிலையத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. எனவே கோவில் நகைகளை சரிபார்க்கவும், மாயமானதாக கூறப்படும் தங்க சிவலிங்கம் குறித்து விசாரணை நடத்தவும் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி நியமிக்கப்படுகிறார்.

    அவர், கோவிலின் பாதுகாப்பு அறையில் இருக்கும் நகைகளையும், கோர்ட்டில் சமர்ப்பித்த நகை பட்டியலையும் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். பத்மநாபபுரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வைக்கப்பட்டு இருக்கும் நகைகள் குறித்தும் விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதிக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×