search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தொடர்ந்து பலத்த மழை இல்லாததால் திருவள்ளூர்-காஞ்சிபுரம் மாவட்டங்களில் 30 சதவீத ஏரிகள் மட்டுமே நிரம்பியது
    X

    தொடர்ந்து பலத்த மழை இல்லாததால் திருவள்ளூர்-காஞ்சிபுரம் மாவட்டங்களில் 30 சதவீத ஏரிகள் மட்டுமே நிரம்பியது

    • வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் இன்னும் பலத்த மழை பெய்யவில்லை.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 570 ஏரிகள் 50 முதல் 75 சதவீதம் நிரம்பி உள்ளது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் 8 ஆயிரத்து 744 மி.கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 74 சதவீதம் ஆகும்.

    வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் இன்னும் பலத்த மழை பெய்யவில்லை. இதனால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து எதிர்பாத்த அளவு இல்லை. இந்த 3 மாவட்டங்களிலும் மொத்தம் 930 ஏரி, குளங்கள் உள்ளன. இதில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 20 முதல் 30 சதவீதம் ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 570 ஏரிகள் 50 முதல் 75 சதவீதம் நிரம்பி உள்ளது. 200 ஏரிகள் 75 சதவீதத்திற்கும் மேல் கொள்ளளவை எட்டி உள்ளது.

    சென்னையை சுற்றி உள்ள 12 ஏரிகள் பாதி அளவு மட்டுமே நிரம்பி உள்ளது. இதே நிலைதான் மாமல்லபுரம், மீஞ்சூர், பொன்னேரி, ஆரணி பகுதியில் உள்ள ஏரிகளிலும் உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அயப்பாக்கம், பருத்திப்பட்டு, அத்திப்பட்டு, திருத்தணி மற்றும் ராமாபுரம் பெரிய ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, வழக்கமாக நவம்பர் மாத மத்தியில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி விடும். தற்போது தொடர்ந்து பலத்த மழை இல்லாததால் ஏரி, குளங்களுக்கு போதிய அளவு தண்ணீர் வரத்து இல்லை. வரும் நாட்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஏரி, குளங்கள் முழு கொள்ளளவை எட்டும் என்றார்.

    Next Story
    ×