search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி வைர அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

    • உற்சவர் பாலசுப்ரமணி, வள்ளி, தெய்வானையுடன் மயில்வாகனத்தில் பிரகாரப் புறப்பாடு நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் புகழ்பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு,நிலம், வேலை வாய்ப்பு, திருமணம், பிள்ளைபேரு உள்ளிட்ட பாக்கியங்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இவ்வாறு சிறப்புமிக்க இக்கோவிலுக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1.25 கோடி செலவில் திருப்பணிகள் செய்து

    கடந்த ஆகஸ்ட் மாதம் மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதன் பின்னர், இக்கோவிலுக்கு பக்தர்களின் வருகை நாளுக்கு, நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் செவ்வாய்க்கிழமை தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கட்டுக்கு அடங்காமல் இக்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி விட்டு செல்கின்றனர்.

    மேலும், கிருத்திகை, சஷ்டி, வியாழக்கிழமை,அரசு விடுமுறை நாட்கள் உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இருப்பினும், இக்கோவிலுக்கு பக்தர்களின் வருகைக்கு ஏற்றார் போல் போதிய அளவு போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய இயலாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், இன்று தமிழ் புத்தாண்டு மற்றும் அரசு விடுமுறை நாள் என்பதால் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனங்கள் உள்ளிட்ட வரிசைகளில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    இன்று காலை மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகங்கள் செய்து மகா அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரமும், அதைத்தொடர்ந்து வைர அங்கி அலங்காரத்துடன் மூலவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவர் பாலசுப்ரமணி, வள்ளி, தெய்வானையுடன் மயில்வாகனத்தில் பிரகாரப் புறப்பாடு நடைபெற்றது.

    இதன் பின்னர், மரகத விநாயகர் சன்னதி அருகே பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி கோவிலின் தலைமை குருக்கள் ஆனந்தன் தலைமையில் கோயிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ராணி ராஜா,ஒன்றிய கவுன்சிலர் சந்துரு உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×