search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்? அண்ணாமலை
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்? அண்ணாமலை

    • தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை விட 2½ மடங்கு அதிகமாக டாஸ்மாக் கடைகள் உள்ளன.
    • இந்தியாவிற்கே தமிழகம் உதாரணம் என்று கூறிய காலம் போய் இன்று இந்தியாவின் முன் தமிழகம் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறோம்.

    கோவை:

    கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜனதா தொண்டர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்காகவும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் இன்று (நேற்று) மதுரை ஆரம்பித்து, சென்னை, கோவை என அனைத்து பகுதிகளிலும் தொண்டர்கள், தலைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதை தடுத்து, கைது செய்துள்ளனர்.

    மக்கள் பிரச்சனைக்காகவும், கள்ளச்சாராய சாவுக்காகவும், தமிழகத்தில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்காக ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ.க. தலைவர்கள் அந்தந்த மாவட்ட போலீஸ் அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி கடிதம் கொடுத்து உள்ளார்கள். கோவையில் எந்த இடம் என்றாலும், எந்த நேரம் என்றாலும் சொல்லுங்க அந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்று போலீசாரிடம் தெரிவித்து இருந்தோம்.

    ஆனால் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து, பெண்கள் உள்பட அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் 4,661 நூலகங்களும், 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. ஆனால் 5,329 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

    தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை விட 2½ மடங்கு அதிகமாக டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் வெளிப்பாடு தமிழகத்தில் மதுவுக்கு அடிமையாக இருக்க கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கி இருக்கிறார்கள்.

    கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் இறந்து உள்ளனர். இவர்களில் 53 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் கண்பார்வை இழந்து உள்ளனர். இந்தியாவிற்கே தமிழகம் உதாரணம் என்று கூறிய காலம் போய் இன்று இந்தியாவின் முன் தமிழகம் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறோம். தமிழகம் முழுவதும் நாங்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்று எழுத்துப்பூர்வமாக கொடுத்த கடிதத்தை நிராகரித்து இருக்கிறார்கள். எங்களது கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கவர்னரிடம் தொலைபேசியில் முறையிட்டேன்.

    இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பா.ஜ.க. கட்சி குழு கவர்னரை சந்திக்க உள்ளது. இந்த குழு கவர்னரை சந்தித்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு, நாங்கள் நேரிடையாக கள்ளக்குறிச்சி சென்று பார்வையிட்டது என அனைத்தையும் கவர்னரிடம் தெரிவிக்க உள்ளோம். இந்த சம்பவத்தில் தி.மு.க.விற்கு உள்ள தொடர்பு குறித்து கவர்னரிடம் அறிக்கையாக சமர்பிக்க உள்ளோம். எங்களது கருத்துரிமையை பறிக்க கூடிய தி.மு.க. அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமா என்ற கேள்வியை கவர்னர் முன்வைப்போம். இந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணையை வலியுறுத்துவோம்..

    தி.மு.க.விற்கும், கள்ளச்சாராய கும்பலுக்கும் உள்ள தொடர்பை வெளிகொண்டு வர சி.பி.ஐ. விசாரணை தேவைப்படுகிறது. தமிழகத்திற்கு சி.பி.ஐ. வர வேண்டும் என்றால் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் வாரந்தோறும் கள்ளச்சாராயம் குறித்த கண்காணிப்பு கூட்டம் நடைபெறும் என்று கடந்த ஆண்டு முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி எத்தனை ஆய்வு கூட்டங்கள் நடைபெற்றது என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். வேறு மாநிலங்களில் ஏதாவது ஒரு தவறு நடைபெற்றால் இங்கு உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவார்கள். ஆனால் ஒரு கண்டன குரல் கூட வரவில்லை. கள்ளக்குறிச்சிக்கு இன்னும் ஏன் முதலமைச்சர் செல்லவில்லை.

    தேசிய பட்டியலின ஆணையம் தமிழகத்திற்கு உடனடியாக வர வேண்டும் என மத்திய அரசிடம் தெரிவித்து உள்ளோம். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கோர்ட்டு அனுமதி பெற்று மீண்டும் தேதி அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×