search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜல்லிக்கட்டு காளையை புகுந்த வீட்டுக்கு அழைத்துச்சென்ற மணப்பெண்
    X

    ஜல்லிக்கட்டு காளையுடன் மணமேடையில் மணமக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சி.

    ஜல்லிக்கட்டு காளையை புகுந்த வீட்டுக்கு அழைத்துச்சென்ற மணப்பெண்

    • மதுரை மாவட்ட கிராமப்புற பகுதிகளில் விவசாயிகள் ஜல்லிக்கட்டுக்காக என்று தனியாக காளைகளை வளர்த்து வருகிறார்கள்.
    • சிறு வயது முதலே காளைகளை போட்டிக்கு பயன்படுத்தும் வகையில் மண் குத்துதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வழங்குவார்கள்.

    திருமங்கலம்:

    தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படுவது ஜல்லிக்கட்டு. இந்த ஜல்லிக்கட்டு தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு ஊர்களில் நடத்தப்படும்.

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ்பெற்றதாகும். உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை வளர்ப்பவர்கள், அதனை தனி அக்கறை எடுத்து வளர்த்து வருகிறார்கள்.

    குறிப்பாக மதுரை மாவட்ட கிராமப்புற பகுதிகளில் விவசாயிகள் ஜல்லிக்கட்டுக்காக என்று தனியாக காளைகளை வளர்த்து வருகிறார்கள். சிறு வயது முதலே காளைகளை போட்டிக்கு பயன்படுத்தும் வகையில் மண் குத்துதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வழங்குவார்கள்.

    இதன் காரணமாக குடும்பத்தோடு ஒன்றிவிடும் அந்த காளைகள் பாசத்தோடு வளர்கின்றன. வளர்ப்போரின் சொல்படி கேட்கும் அளவுக்கு அந்த பாசப்பிணைப்பு இருக்கும். இதனால் காளைகளை தங்களது குழந்தைகளை போல பேணி பாதுகாத்து வளர்த்து வருகிறார்கள். எந்தவித வருமான ஆதாயத்திற்காக இல்லாமல் பாரம்பரிய விளையாட்டை பாதுகாக்கும் நோக்கில் காளை இனங்களை பாதுகாக்கும் வகையில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் சிறு வயது முதலே காளையை தனது சகோதரன் போல் வளர்த்த இளம்பெண் ஒருவர், திருமணம் முடிந்த பின்பு அதனை பிரிய மனமில்லாமல் புகுந்த வீட்டுக்கு அந்த காளையையும் அழைத்துச் சென்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுகப்பிரியா. இவரது வீட்டில் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வந்தனர். அந்த காளை மீது அவரது குடும்பத்தினர் மிகவும் பாசமாக இருந்துள்ளனர். சுகப்பிரியா அந்த காளையை அன்பாக வளர்த்து வந்துள்ளார். இந்தநிலையில் அவருக்கு நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ராஜபாண்டி என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    அதன்படி அவர்கள் இருவருக்கும் நாகமலை புதுக்கோட்டையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் புகுந்த வீட்டிற்கு தனது ஜல்லிக்கட்டு காளையையும் சுகப்பிரியா அழைத்துச்சென்றார். அதனை மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். இந்த சம்பவம் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

    முன்னதாக மணப்பெண் சுகப்பிரியா, திருமணம் நடப்பதற்கு முன்னதாக தான் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையை மணமேடைக்கு அழைத்து வந்தார். பின்பு காளைக்கு முத்தமிட்டு அதனை மணமகன் ராஜபாண்டிக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்பு அந்த காளையுடன் மணமக்கள் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    Next Story
    ×