search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திமுக அரசு கொண்டு வரும் திட்டத்தை மக்கள் பாராட்டுகின்றனர் - மு.க.ஸ்டாலின்
    X

    திமுக அரசு கொண்டு வரும் திட்டத்தை மக்கள் பாராட்டுகின்றனர் - மு.க.ஸ்டாலின்

    • பெற்றோருக்கே உரிய பாச உணர்வோடு நான் தொடங்கிய திட்டம் தான் காலை உணவு திட்டம்.
    • காலை உணவு திட்டத்தில் எந்த இடத்திலும் உணவின் தரம் குறைய கூடாது.

    தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், முதல் கட்டமாக கடந்த 15.9.2022 அன்று தொடங்கப்பட்டது.

    அதன்படி 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1.14 லட் சம் மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

    இந்த திட்டத்துக்கு பொது மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து, கடந்த 25.8.2023 அன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30,992 அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இந்த திட் டத்தை விரிவுபடுத்தினார்.

    இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

    இதன் ஒரு பகுதியாக கல்வி வளர்ச்சி நாள் என்று அழைக்கப்படும் காமராஜர் பிறந்த நாளான இன்று திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பின்னர் மாணவ-மாணவிகளுக்கு அவர் உணவு பரிமாறினார். அதன்பிறகு மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு சாப்பிட்டார். அப்போது அவர் மாணவிகளுக்கு காலை உணவை ஊட்டி விட்டு மகிழ்ந்தார். பின்னர் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தைகளிடம் என்ன படிக்கிறீர்கள்? உணவு நன்றாக இருக்கிறதா என்று கேட்டறிந்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவ-மாணவிகள் பயன்பெறுவார்கள்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    மிக மிக மகிழ்ச்சியாக உங்கள் முன்பு நின்று கொண்டிருக்கிறேன். என் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்றால், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், கலைஞர் உரிமை திட்டம் என தமிழ்நாட்டில் இருக்கிற பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என உங்களின் முன்னேற்றத்துக்கும், எதிர்காலத்துக்கும் முதலமைச்சராக இருந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பு, பாடுபடக்கூடிய எண்ணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சியை வழங்கிய தமிழ்நாட்டு மக்களான உங்களுக்கு முதலில் என்னுடைய நன்றி.

    பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகளின் பசியை போக்க வேண்டும் என்று முடிவு செய்து உருவாக்கிய திட்டம்தான் இந்த காலை உணவுத்திட்டம். சென்னையில் ஒரு பள்ளி விழாவுக்கு போனபோது ஒரு குழந்தை இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை என்று சொன்னதை கேட்டவுடன் ஒரு பெற்றோருக்கே உரிய பாச உணர்வோடு நான் உருவாக்கிய திட்டம் தான் இந்த காலை உணவு திட்டம்.

    அரசாங்கத்துக்கு நிதி எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு குழந்தை கூட பசியோடு பள்ளிக்கு வந்து தவிக்கக் கூடாது என்று இந்த திட்டத்தை தொடங்க உத்தரவிட்டேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தேன். இன்று பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தி இருக்கிறேன். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும்தான் காலை உணவா? எங்களுக்கு இல்லையா? என்று அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் கேட்டனர்.

    அதனால்தான் இந்த திட்டத்தை கிட்டத்தட்ட 18 லட்சத்து 50 ஆயிரம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் வயிறாற சாப்பிட காரணமான இந்த திட்டத்தை இன்று விரிவுப்படுத்தி இருக்கிறேன். இனிமேல் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 2 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் காலை உணவு சாப்பிட இருக்கிறார்கள். மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் நாள்தோறும் 20 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் சத்தான, சுவையான காலை உணவை சாப்பிடுகிறார்கள்.

    புறநானூறு, திருக்குறள், மணிமேகலை என்று நம்முடைய இலக்கியங்கள் மட்டுமல்ல; அவ்வையார், வள்ளலார் போன்ற சான்றோர்களும் பசிப்பிணியை போக்குவது குறித்து உயர்வாக சொல்லி இருக்கிறார்கள். சங்க காலத்தை சேர்ந்த ஒரு குறுநில மன்னர் ஏழை-எளியவர்களின் பசியை போக்கியதால் பசிப்பிணி மருத்துவன் என்று போற்றப்படுகிறார். பசிப்பிணி போக்கும் பணி அரசுக்கும் பொருந்தும்.

    ஏழை-எளிய மாணவர்களுக்கு உணவளிப்பதன் மூலம் குழந்தைகளை நலமான, வளமான அறிவுமிக்க சமூகமாக வளர்த்திருக்கிறோம். ஏனென்றால் குழந்தைகள்தான் தமிழ்நாட்டின் எதிர்கால சொத்து. அதனால்தான் காலை உணவு திட்ட ஒதுக்கீடு பற்றி அதிகாரிகள் என்னுடன் விவாதித்தபோது அதை நிதி ஒதுக்கீடு என்று சொல்லாதீர்கள். வருங்கால தலைமுறையை உருவாக்குகிற முதலீடு என்று சொல்லுங்கள் என்று ஆனித்தரமாக சொன்னேன்.

    ஆனால் இந்த திட்டம் மாணவ-மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது. பெற்றோர்களுக்கு பொருளாதார சுமையை குறைக்கிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இடை நிற்றலை குறைக்கிறது. இப்படி ஏராளமான நன்மைகள் காலை உணவு திட்டத்தால் விளைகிறது. கொஞ்ச நாளுக்கு முன்பு ஒரு பெண் அளித்த பேட்டியை பார்த்தேன். அதில் காலை உணவு திட்டம் ஏழை-எளிய குடும்பங்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர் இருவருமே வேலைக்கு செல்லும் நடுத்தர குடும்பங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது என்று பேட்டி கொடுத்திருந்தார்.

    இப்படி நமது திராவிட மாடல் அரசு கொண்டு வருகிற ஒவ்வொரு திட்டத்தையும் பயன்பெறுகிற மக்கள் பாராட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இல்லாத கற்பனை கதைகளுக்கு வடிவம் கொடுப்பவர்களுக்கும், ஈரை பேனாக்கும் வேலையை செய்பவர்களுக்கும் நம்மை பாராட்ட மனமில்லை. அதைப்பற்றி நமக்கு கவலையும் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன், பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தொடக்கப்பள்ளி துறை இயக்குனர் சேதுராமவர்மன், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், வருவாய் அலுவலர் ராஜ்கு மார், முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன், கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×