search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீலகிரிக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்
    X

    நீலகிரிக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்

    • மேட்டுப்பாளையம்- கோத்தகிரி, மேட்டுப்பாளையம்- குன்னூர் மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
    • தொடர் மழையால் நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    நீலகிரி:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. இரவு விடிய, விடிய மழை பெய்தது. குன்னூர், கோத்தகிரி பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. ரோட்டில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நடுரோட்டில் மரங்களும் முறிந்து விழுந்தன.

    இதன் காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. சாலையின் இருபுறமும் பல மணி நேரம் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.

    அந்த சாலையில் அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் மாற்று வாகனங்கள் மூலம் ஊருக்குசென்றனர். அதிகபட்சமாக கீழ் கோத்தகிரியில் 24.1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. தொடர் மழையால் நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீலகிரிக்கு வருவதை தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேட்டுப்பாளையம்- கோத்தகிரி, மேட்டுப்பாளையம்- குன்னூர் மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பாதையை பொதுமக்கள் இன்று பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கோவையில் இருந்து 2 தமிழக பேரிடர் மீட்பு படை வர உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×