search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேலும் 2 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்... அமைச்சர் சிவசங்கர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மேலும் 2 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்... அமைச்சர் சிவசங்கர்

    • இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 20,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
    • போக்குவரத்து தொழிலாளர்கள் உடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஆவினங்குடியில் உள்ள வெள்ளாற்றில் மணல் திருடப்படுவதை கண்டித்து கடந்த 2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிவசங்கரன் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடலூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பின்னர் இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற சிவசங்கரன் எம்.எல்.ஏ. போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

    கடலூர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற இந்த வழக்கில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆஜர் ஆனார். வழக்கு விசாரணை அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த அமைச்சர் சிவசங்கரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் பொதுமக்கள் பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடத்தியதில் பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. இந்த வழக்கை எதிர்நோக்கும் வகையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளேன்.

    இந்த நிலையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நாளை 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். இந்த பேச்சுவார்த்தையில் முடிவுகள் தெரியவரும்.

    தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்து வரும் நிலையில் அனைத்து பிரச்சனைக்கும் முதலமைச்சர் நேரில் பேசுவது என்பது சிரமம் ஆகும். அதற்காகத்தான் ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர்கள், செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளனர்.

    ஏற்கனவே தற்போது உள்ள போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. போராட்டத்தில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையான ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கையானது ஒரு துறைக்கு சம்பந்தப்பட்ட கோரிக்கையாக இல்லாமல் பல்வேறு துறை சேர்ந்த ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக உள்ளதால் அரசின் நிதி சுமை எவ்வளவு கூடுதலாகும் என்பதை கணக்கிட்டு தான் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் இது சம்பந்தமாக முடிவெடுத்தால் மற்ற துறை சார்ந்த ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பாதிப்பாகும் என்ற காரணத்தினால் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தற்போது போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகள் வைத்துள்ள நிலையில், ஏற்கனவே 2 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பணிக்காலத்தில் இறந்த ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு தற்போது வேலையில் இருந்து வருகின்றனர். பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்குவதற்கு எழுத்து தேர்வு நடைபெற்று வருவதால் 2 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    மீதமுள்ள 4 கோரிக்கைகளில் தற்போது 2 கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்று வரும் நடவடிக்கை குறித்து விரிவாக தெரிவித்து உள்ளோம். மேலும் இவர்கள் வைத்த கோரிக்கைகள் நிதித்துறை சம்பந்தப்பட்டது என்பதால் உடனடியாக நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது. ஆனால் அரசியல் காரணத்தினால் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் போக்குவரத்து தொழிலாளர்களின் அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. ஆனால் அகவிலைப்படி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    தற்போது நிதி நிலை சரியான பிறகு அகவிலைப்படி வழங்கப்படும். மேலும் தேர்தல் நேரத்தில் கலைஞர் உரிமை திட்டம் தொகை வழங்கப்படும் என்பது தொடர்பாக கூறியபடி நிதி நிலைமையை சரி செய்து தற்போது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்காக இந்த ஆண்டு கூடுதலாக ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்து இருந்தனர். இந்த ஆண்டு முதலமைச்சர் தலைமையில் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படுவதை தொடர்ந்து பொதுமக்கள் அரசு பஸ்களில் அதிகளவில் பயணம் செய்து வந்தனர்.

    இதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் தமிழக அரசு திட்டமிட்டதை விட அதிக அளவில் பயணிகள் சென்று வந்ததால் பல்வேறு இன்னல்களுக்கு இடையே கண்டக்டர்கள், டிரைவர்கள் பயணிகளை பாதுகாப்பாக தங்களது ஊர்களுக்கு அழைத்துச் சென்று வந்தனர். சென்னை நோக்கி வெளியூரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வரும் காரணத்தினால் 1000-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இன்னும் 2 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஏற்கனவே அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட மற்ற போக்குவரத்துக் கழகம் பஸ்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில் கிளாம்பக்கம் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டது.

    மேலும் படிப்படியாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். சொந்த ஊரிலிருந்து திரும்பி செல்பவர்கள் சென்னை கோயம்பேடு செல்வதற்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் நடைபெறும் கூட்டத்தில் கிளாம்பாக்கத்தில் இருந்து அனைத்து பஸ்கள் இயக்கப்படுவதற்கும், போக்குவரத்து நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் படிப்படியாக கண்டறிந்து தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, தொ.மு.ச. பழனிவேல், தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக், பகுதி துணை செயலாளர் வக்கீல் பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×