என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நமது உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
- கருப்பு-சிவப்பு சட்டை அணிந்து போர் வீரர்கள் போல் கலந்து கொள்ள வந்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- நாம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து வாங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.
கன்னியாகுமரி:
தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்து வருகிறார்.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டுக்கான ஆயத்த பணிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை இளைஞரணி நிர்வாகிகள் மூலம் நடத்தி வருகிறார்.
இதன் அடுத்த கட்டமாக இப்போது இளைஞரணி நிர்வாகிகள் மோட்டார் சைக்கிளில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் இருசக்கர வாகன பிரசாரத்தை கன்னியாகுமரியில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இருசக்கர வாகன பிரசார தொடக்க விழா கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் இன்று நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வாகன பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. இளைஞரணி சார்பில் 2-வது மாநில உரிமை மீட்பு மாநாடு சேலத்தில் நடைபெறுகிறது. மத்திய அரசு நமது உரிமைகளை பறித்து வருகிறது. உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெறும் மாநாட்டில் திரளான நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும்.
கருப்பு-சிவப்பு சட்டை அணிந்து போர் வீரர்கள் போல் கலந்து கொள்ள வந்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ள நிர்வாகிகள் மாவட்டம் தோறும் சென்று லட்சக்கணக்கான மக்களை சந்திக்க உள்ளீர்கள்.
நீங்கள் நமது அரசினுடைய கொள்கைகளை, சாதனைகளை எடுத்து கூற வேண்டும். கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு மக்களுக்கு பல்வேறு இன்னல்களை செய்து உள்ளது. இதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். கல்வி உரிமையை விட்டுக்கொடுத்து உள்ளோம். நீட் தேர்வின் அவல நிலையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
நாம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து வாங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். தற்பொழுது இணையதளம் மூலமாக 9 லட்சம் பேரும், போஸ்ட் கார்டு மூலமாக 10 லட்சம் பேரும் கையெழுத்திட்டுள்ளனர். ஒரு மாதத்தில் 50 லட்சத்தை தாண்டி கையெழுத்து வாங்க வேண்டும்.
கடந்த 9 ஆண்டுகளில் நாம் மத்திய அரசுக்கு ரூ. 25 ஆயிரம் கோடி கொடுத்துள்ளோம். ஆனால் மத்திய அரசு நமக்கு ரூ.2000 கோடி தான் தந்துள்ளது. நமது உரிமைகளை மீட்க நாம் போராட வேண்டும்.
மதுரையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாநாடு எப்படி நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஒப்புக்கு செப்பாக மாநாடு நடத்தப்பட்டது. சேலத்தில் நடைபெறும் இளைஞரணி எழுச்சி மாநாடு வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக அமைய வேண்டும். நமது மாநாடு குறித்து வரலாறே பேச வேண்டும்.
சேலம் மாநாடு மத்திய அரசு திரும்பி பார்க்கும் வகையில் அமைய வேண்டும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் சொன்னதை மட்டும் இன்றி சொல்லாத பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளது.
குறிப்பாக 4 திட்டங்களை நினைவு கூறுகிறேன். இலவச மகளிர் பேருந்து திட்டம் முதல் திட்டமாக கையெழுத்திடப்பட்டது. இதன் மூலமாக ஒரு மகளிர் மாதம் ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்த முடியும். ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் மிச்சமாகலாம்.
தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டமான புதுமைப்பெண் திட்டம் மூலமாக அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது.
1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 31 ஆயிரம் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தால் பயன் அடைந்து வருகிறார்கள். பக்கத்து மாநிலங்கள் இந்த திட்டங்களை வியந்து பார்க்கும் அளவிற்கு அரசு செயல்பட்டு வருகிறது.
செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒரு கோடியே 18 லட்சம் மகளிர் இதன் மூலமாக பயன்பெறுகிறார்கள். தற்பொழுது இருசக்கர வாகன பேரணி மேற்கொண்டுள்ள நிர்வாகிகள் 15 நாட்கள் 8,400 கிலோ மீட்டர் பயணம் செய்ய உள்ளீர்கள்.
நீங்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும். விதிமுறைகளை பின்பற்றி பயணத்தை மேற்கொள்ளுங்கள். உங்களது குடும்பத்தினர் உங்களுக்காக காத்திருக்கிறார்கள். நான் சேலத்தில் உங்களுக்காக காத்திருப்பேன். இந்த பயணம் வெற்றி பயணமாக அமைய வேண்டும். இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ள 188 பேரும் தமிழகம் முழுவதும் 3 லட்சம் பேரை சந்திக்க உள்ளீர்கள். நீங்கள் பொதுமக்களிடம் நமது சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் இருந்து புறப்பட்டது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் கருப்பு-சிவப்பு கலரில் டீ-சர்ட் அணிந்திருந்தனர்.
இருசக்கர வாகன பிரசாரத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். இங்கிருந்து புறப்பட்ட பிரசார பேரணி கன்னியாகுமரி, குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, பத்மநாபபுரம், நாகர்கோவில் தொகுதிகளுக்கு இன்று செல்கிறது.
நாளை (16-ந்தேதி) நெல்லை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (17-ந்தேதி) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிரசார பேரணி செல்கிறது.
18-ந்தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளிலும் 19-ந்தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளிலும் 20-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளிலும் வாகன பிரசார பேரணி செல்கிறது.
இதை தொடர்ந்து மதுரை, தேனி, திண்டுக்கல் வழியாக நவம்பர் 27-ந்தேதி சேலம் சென்று அடைகிறது.
இதே போல் பெரியார் மண்டலத்திலிருந்து தொடங்கும் பிரசார பேரணி திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு செல்கிறது. அண்ணா மண்டலத்தில் இருந்து தொடங்கும் பிரசார பேரணி திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பிரசார பேரணி செல்கிறது.
கலைஞர் மண்டலத்திலிருந்து தொடங்கும் பிரசார பேரணி புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி வழியாக சேலம் செல்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்