search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவாரூரில்  லாரி வாய்க்காலில் கவிழ்ந்து 2 வெளிமாநில தொழிலாளர்கள் பலி
    X

    திருவாரூரில் லாரி வாய்க்காலில் கவிழ்ந்து 2 வெளிமாநில தொழிலாளர்கள் பலி

    • வாகனத்தை ஓட்டி வந்த கலையரசன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
    • கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருவாரூர்:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரை சேர்ந்த நோபோ மஜி (வயது 30), சௌடோ மஜி (27). இவர்கள் தஞ்சாவூரில் தங்கியிருந்து அதே பகுதியில் மாதா கோயிலில் உள்ள மொத்த விற்பனை கோழிக்கடையில் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். நோபோ மஜிக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகளும் சௌடோமஜிக்கு திருமணமாகி 1 குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து சரக்கு லாரியில் கோழிகளை ஏற்றிக்கொண்டு காரைக்காலுக்கு சென்று கொண்டிருந்தனர். லாரியை கலையரசன் என்பவர் ஓட்டினார். மேற்பார்வையாளராக மணிகண்டன் இருந்தார். இவர் லாரியின் உள்ளே அமர்ந்து இருந்தார். நோபோ மஜி, சௌடோ மஜி ஆகியோர் லாரியின் மேல் பகுதியில் அமர்ந்திருந்தனர்.

    இந்நிலையில் லாரி இன்று அதிகாலை திருவாரூர் அருகே மேப்பலம் என்கிற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி ஒட்டக்குடி வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் லாரியின் மேலே அமர்ந்து வந்த நோபோ மஜி மற்றும் சௌடோமஜி ஆகிய 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வாகனத்தை ஓட்டி வந்த கலையரசன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×