search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    இது NO ENTRY - காரை தடுத்த காவலாளியை சரமாரியாக தாக்கிய குடும்பம்- 3பேர் கைது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இது NO ENTRY - காரை தடுத்த காவலாளியை சரமாரியாக தாக்கிய குடும்பம்- 3பேர் கைது

    • 2 அடி நீள பிளாஸ்டிக் குழாயை பிடுங்கி, அந்த குழாய் 2 துண்டாக உடையும் வரை அவரை தாக்கி சட்டை கிழித்தார்.
    • சம்பவத்தை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இந்நிலையில் மாமல்லபுரம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் நோ பார்க்கிங் வழியாக கார் ஒன்று செல்ல முயன்றது. அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி ஏழுமலை (வயது 45) என்பவர் காரை ஐந்துரத வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறு கூறினார். அதை மீறி காரில் வந்தவர்கள் காரை நோ பார்க்கிங்கில் நிறுத்த முயன்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் ஏழுமலை அவர்களை திட்டியதாக கூறப்படுகிறது.

    உடனே காரில் இருந்து இறங்கிய டிப்டாப் உடை அணிந்திருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் "ஏய் யாரை பார்த்து திட்டுகிறாய்" என ஆவேசமடைந்து, நடுரோட்டிலேயே ஏழுமலையை சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர்களுடன் வந்த ஆண்களும் சேர்ந்து அவரை கடுமையாக தாக்கினர். பதிலுக்கு ஏழுமலை தாக்க முயற்சிக்கவே, 4 பேரும் அவரை கீழே தள்ளி அவரை நைய புடைத்தனர். அதில் ஒரு பெண் காவலாளி ஏழுமலை வைத்திருந்த 2 அடி நீள பிளாஸ்டிக் குழாயை பிடுங்கி, அந்த குழாய் 2 துண்டாக உடையும் வரை அவரை தாக்கி சட்டை கிழித்தார்.

    இந்த கைகலப்பு சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்பானது. பிறகு அவ்வழியாக சென்றவர்கள் 4 பேரையும் சமாதானம் செய்து காவலாளி ஏழுமலையை அவர்களின் பிடியில் இருந்து காப்பாற்றி வெளியேற்றினர். பின்னர் 2 பெண்கள் உள்ளிட்ட 4 சுற்றுலா பயணிகளும் காரில் சென்றுவிட்டனர். இந்த தாக்குதலில் முகத்தில் காயமடைந்த ஏழுமலை ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இச்சம்பவத்தை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. காவலாளி ஏழுமலைக்கு அங்குள்ள வியாபாரிகள் நாள் ஒன்றுக்கு ரூ.500 ஊதியம் என்ற தினக்கூலி அடிப்படையில் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் அவரை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐந்துரதம் வணிக வளாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.

    இந்த நிலையில், காவலாளியை தாக்கியது தொடர்பாக முடிச்சூரை சேர்ந்த பிரபு இன்பதாஸ், சண்முகப்பிரியா, கீர்த்தனா உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.


    Next Story
    ×