search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாக்காளர் உரிமை பறிப்பு விவகாரத்தில் முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன்?: தமிழிசை சவுந்தரராஜன்
    X

    வாக்காளர் உரிமை பறிப்பு விவகாரத்தில் முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன்?: தமிழிசை சவுந்தரராஜன்

    • எல்லாவிதத்திலும் சிறுபான்மையினருக்கு சிறந்த அரசாக பாரதிய ஜனதா அரசு உள்ளது.
    • 25 கோடி மக்களை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி.

    கோவை:

    தெலுங்கானா முன்னாள் கவர்னரும், தென்சென்னை தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அனைவருக்குமான வளர்ச்சி, அனைவருக்குமான திட்டம் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் தாரக மந்திரம். பிரதமர் நரேந்திர மோடி அனைத்து தரப்பு மக்களுக்குமான பிரதமராக பணியாற்றி வருகிறார்.

    50 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரத்தை அடித்தட்டிலேயே வைத்துள்ளது. அவர்களை ஒரு வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். மக்களிடம் வேற்றுமையை விதைப்பது காங்கிரஸ் தான்.

    பிரதமர் மோடிக்கு அனைத்து தரப்பு மக்களிடம் ஆதரவு உள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி இஸ்லாமிய பெண்கள் மீது மிகுந்த அக்கறை செலுத்தி எண்ணற்ற திட்டங்களையும் நிறைவேற்றி கொடுத்து வருகிறார்.

    பெண்ணுரிமை என்று எதிர்க்கட்சியினர் பேசி வருகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பேசுகிறார். ஆனால் அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை செல்ல முடியாத நிலை இருந்தது. அதனை மீட்டெடுக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்க வில்லை.

    ஆனால், இஸ்லாமிய பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை செல்ல விசாவில் தளர்வு ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி தான். அதேபோன்று முஸ்லிம் பெண்கள் பாராட்டும் வகையில் முத்தலாக் தடைச் சட்டத்தையும் பாரதிய ஜனதா அரசு தான் கொண்டு வந்தது.

    எல்லாவிதத்திலும் சிறுபான்மையினருக்கு சிறந்த அரசாக பாரதிய ஜனதா அரசு உள்ளது.

    ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஏதோ இவர்கள் தான் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்கள் போலவும், பிரதமர் மோடி சிறுபான்மை மக்களுக்கு எதிரியாக இருப்பது போல சித்தரித்து இந்த தேர்தலை முன்னெடுத்து செல்ல முயல்கிறார்கள்.

    ஊடுருவல்காரர்களிடம் நமது சொத்து பறிபோய் விடக்கூடாது என்று தான் பிரதமர் சொன்னார். குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து ஏராளமானோர் ஊடுருவி உள்ளனர். மேற்கு வங்கத்தில் 1 கோடி ஊடுருவல்காரர்கள் உள்ளனர். அவர்களுக்கு அந்த அரசு ரேஷன் கார்டு வரை கொடுத்துள்ளது. நம் நாட்டு மக்களின் சொத்துக்கள் பறி போய்விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் பிரதமர் சொன்னாரே தவிர வேறு எதுவும் காரணம் இல்லை.

    ஆனால் காங்கிரஸ் இதனை தேர்தலுக்காக திசை திருப்ப முயற்சிக்கிறது.

    25 கோடி மக்களை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி. கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு 45 லட்சம் உயிர்களை காப்பாற்றியது பாரதிய ஜனதா அரசு.

    இப்படி எல்லா தரப்பு மக்களுக்குமான அரசாக பாரதிய ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது.

    ஆனால் காங்கிரஸ் வேண்டும் என்றே பாரதிய ஜனதா மீது குறை கூறுகிறார்கள். நாட்டின் முக்கியமான தேர்தல் நடக்கும்போது ராகுல் காந்தி எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் வெளிநாடு சென்றுவிட்டாரா என்று தெரியவில்லை.

    வட மாநில தேர்தல் பிரசாரத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லாதது ஏன் என்பது குறித்து தெரியவில்லை.

    ஒருவேளை இந்தி எதிர்ப்பு பிரச்சனை ஏற்படுமோ என்ற காரணத்தினால் இருக்கலாமோ? அல்லது அங்கு சென்றால் எந்த பிரயோஜனம் இருக்காது என்பதாலும் இருக்க வாய்ப்புள்ளது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்து பிரச்சனைகளையும் மீறி பா.ஜ.க வெற்றி பெறும்.

    வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் கொத்து கொத்தாக வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் வாக்குகள் விடுபட்டிருப்பது வேதனை அளிக்கிறது. தேர்தல் ஆணையம் இதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    சென்னையில் நான் போட்டியிட்ட தொகுதியில் கவுன்சிலர் தேர்தலில் பதிவான வாக்காளர்களின் வாக்குகள் சில மாதங்களில் காணாமல் போய் விட்டது.

    மக்களுக்கான உரிமை மறுக்கப்பட்டதற்கு குரல் கொடுப்பவர்களை பார்த்து தோல்வி பயத்தில் பேசுகிறார்கள் என்று கூறினால், நீங்கள் தான் தோல்வி பயத்தில் அமைதியாக உள்ளீர்கள் என்று சொல்வோம். ஏனென்றால் எங்களுக்கு தோல்வி பயம் இல்லை. நிச்சயமாக நான் உள்பட பா.ஜனதா சார்பில் போட்டியிட்டவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    மாநில உரிமையை பறித்து விட்டார்கள், அதனை மீட்க நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம் என முதலமைச்சர் அடிக்கடி பேசி வருகிறார். ஆனால் இங்கு மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

    சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் முதல் ஆளாக வந்து குரல் கொடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் இதுவரை ஒரு வார்த்தை கூட சொல்லாமல் மவுனம் காப்பது ஏன்? அவர்களது கூட்டணி கட்சியினரும் இந்த விஷயத்தில் மவுனம் காப்பது ஏன்?.

    இவர்கள் அமைதி காப்பதன் மூலம் இந்த சம்பவங்கள் வேண்டும் என்றே நடந்து போல தோன்றுகிறது. இதற்கு நீங்கள் தான் பதில் கூற வேண்டும்.

    தமிழ்நாட்டில் அரிசியிலும் அடிதடி நடக்கிறது. அரசியலிலும் அடிதடி நடக்கிறது. ரேஷன் அரிசியை கடத்தி அதனை மாவாக்கி விற்கிறார்கள்.

    தமிழகத்தில் கஞ்சா, போதை கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது. அதனையெல்லாம் விட்டுவிட்டு, பிரதமரை மட்டுமே குறை கூறுவதிலேயே கவனம் செலுத்தக்கூடாது.

    தே.மு.தி.க. முன்னாள் தலைவர் விஜயகாந்த் மீது எங்களுக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் என்றும் உள்ளது. பத்மவிபூஷன் விருது படிப்படியாக ஒவ்வொருவருக்காக தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    #WATCH | Coimbatore, Tamil Nadu: On PM Modi's statement, BJP candidate from South Chennai, Tamilisai Soundararajan says, "...First of all, our Prime Minister's schemes are of inclusive growth. Sabka Saath Sabka Vikas; nobody has been excluded...For the past 50 years, almost half… pic.twitter.com/oTqbdQlI9T

    Next Story
    ×