search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கார் மீது லாரி கவிழ்ந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு
    X

    கார் மீது லாரி கவிழ்ந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

    • விபத்தில் காருக்குள் இருந்த 6 பேர் சிக்கிய நிலையில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • விபத்து காரணமாக திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியை சேர்ந்த குமார் (60), மூலக்கிணறு பகுதியை சேர்ந்த செல்வம் (60), சவந்தரராஜ் (60), இண்டியன்பாளையம் பகுதியை சேர்ந்த சென்னைய்யன் (55), காஞ்ச நாயக்கனூர் பகுதியை சேர்ந்த செல்வம் (50), ஈரோட்டை சேர்ந்த மனோகர் (50) ஆகியோர் இன்று காலை 6 மணி அளவில் ஆம்னி வேனில் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது தாளவாடி மலை 27-வது கொண்டை ஊசி வளைவில் கார் திரும்பி கொண்டிருந்தபோது எதிரே தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி கரும்பு லோடுகளை ஏற்றி கொண்டு வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது கரும்பு லோடு உடன் கவிழ்ந்தது.

    இதில் காரில் இருந்த 6 பேரும் சிக்கிக்கொண்டு அலறினர். விபத்து குறித்து தாளவாடி மற்றும் ஆசனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 மருத்துவ குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் போலீசார், மருத்துவ குழுவினர் மற்றும் பொதுமக்கள் காரில் சிக்கிக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு காரில் படுகாயம் அடைந்த மூலகிணறு பகுதியை சேர்ந்த செல்வம், சவுந்தர்ராஜ் மற்றும் ஈரோட்டை சேர்ந்த மனோகர் ஆகியோரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    இந்த விபத்தில் நம்பியூரை சேர்ந்த குமார், இந்தியன் பாளையம் பகுதியை சேர்ந்த சென்னைய்யன், காஞ்ச நாயக்கனூர் பகுதியை சேர்ந்த செல்வம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் திம்பம் மலைப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. ஈரோடு-கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் படுகாயமடைந்த 3 பேரும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    இந்த கோர விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×