search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரெயில் விபத்துகளை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?: மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
    X

    ரெயில் விபத்துகளை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?: மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

    • ரெயில்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்துகள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன.
    • ரெயில்கள் மோதலை தடுக்க ‘கவாச்’ என்ற தானியங்கி தொழில்நுட்பத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    புதுடெல்லி:

    விஷால் திவாரி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஒடிசா மாநிலம் பலசோர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 3 ரெயில்கள் மோதிக்கொண்டதில், 288 பேர் பலியானார்கள். ரெயில்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்துகள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன.

    அவற்றை கருத்தில்கொண்டு, ரெயில்கள் மோதலை தடுக்க 'கவாச்' என்ற தானியங்கி தொழில்நுட்பத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், அந்த குறிப்பிட்ட வழித்தடத்தில் 'கவாச்' தொழில்நுட்பத்தை அமல்படுத்தவில்லை.

    பொதுமக்களின் பாதுகாப்புக்கும் உயிருக்கும் முன்னுரிமை அளிப்பதாக மத்திய அரசு அடிக்கடி கூறுகிறது. நான் எழுப்புவது மக்கள் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினை.

    ஆகவே, 'கவாச்' தொழில்நுட்பத்தை உடனடியாக அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும். அதுவரை ரெயில்கள் இயக்கத்தை நிறுத்திவைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

    மனுதாரர் தனது மனுவின் நகலை அட்டார்னி ஜெனரலிடம் ஒப்படைக்க வேண்டும்.

    ரெயில் விபத்துகளை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட 'கவாச்' தொழில்நுட்பம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும், இனி எடுக்க திட்டமிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அட்டார்னி ஜெனரல் தெரிவிக்க வேண்டும். நாடு முழுவதும் 'கவாச்' தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து ஏதேனும் ஆய்வு செய்யப்பட்டதா என்றும் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    அடுத்தகட்ட விசாரணையை 4 வாரங்களுக்கு பிறகு தள்ளி வைத்தனர்.

    Next Story
    ×