search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈஷாவின் உதவி இல்லாமல் படித்திருக்க வாய்ப்பில்லை- சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்

    • கல்வி உதவி தொகையால் பள்ளி படிப்பு மட்டுமின்றி கல்லூரி படிப்பையும் தொடர்வதாக மாணவி நெகிழ்ச்சி
    • கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு ஈஷா சார்பில் அரசு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

    கோவை:

    ஈஷா அவுட்ரீச் அமைப்பு சார்பில் ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி ஈஷாவில் உள்ள சிவாங்கா குடிலில் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

    நல்லூர்பதி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி சஜிதா பேசுகையில், "நான் ஒன்றாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை ஈஷா வித்யா பள்ளியில் முழு கல்வி உதவி தொகையில் படித்தேன். இப்போது நான் அவிநாசிலிங்கம் கல்லூரியில் பி.காம் சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். ஈஷாவின் கல்வி உதவி தொகையால் தான் பள்ளி படிப்பு மட்டுமின்றி கல்லூரி படிப்பையும் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். கல்வி உதவி தொகை மட்டுமின்றி டி.என்.பி.எஸ்.சி, எஸ்.எஸ்.சி போன்ற அரசு தேர்வுகளுக்கு ஈஷா மூலம் எங்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதற்கு நான் என்னை தயார் செய்து வருகிறேன். சத்குருவின் அருளால் தான் இவை அனைத்தும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. எனவே, சத்குருவிற்கும் ஈஷாவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

    இதேபோல், முள்ளாங்காடு பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த நந்தினி பேசுகையில், "எனக்கு அப்பா, அம்மா இல்லை. பெரியம்மாவும், பாட்டியும் தான் என்னை பார்த்து கொள்கிறார்கள். ஈஷாவின் உதவியுடன் கோவை பி.எஸ்.ஜி பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்தேன். இப்போது கோவை கலைமகள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். ஈஷாவின் உதவி இல்லாமல் நான் படித்திருக்க வாய்ப்பில்லை. ஈஷாவிற்கு நன்றி" என்றார்.

    இந்நிகழ்ச்சியில் கோவை ஈஷா வித்யா பள்ளியின் முதல்வர் சாவித்ரி, கலைமகள் கல்லூரியின் முதல்வர் மாலா, முகவரி அறக்கட்டளையின் நிர்வாகி ரமேஷ், ஈஷா பிரம்மச்சாரி சுவாமி அலோகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைக்கான காசோலைகள் வழங்கினர்.

    தொண்டாமுத்தூர் பகுதி கிராமத்தில் வாழும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது மட்டுமின்றி பல்வேறு வழிகளில் ஈஷா உதவி வருகிறது. கோவை சந்தேகவுண்டம்பாளையத்தில் உள்ள ஈஷா வித்யா பள்ளியில் பழங்குடி குழந்தைகளுக்கு கல்வி, உணவு, போக்குவரத்து என அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    போக்குவரத்து வசதி இல்லாத தொலைதூர மலைவாழ் கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு ஈஷாவின் வாகனங்கள் மூலம் தினமும் போக்குவரத்து வசதி வழங்கப்படுகிறது. மேலும், பள்ளி மாணவர்கள் NMMS என்ற தேர்வு எழுதி ஆண்டுதோறும் ரூ.12 ஆயிரம் கல்வி உதவி தொகை பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இது தவிர, கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு அரசு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. தாணிக்கண்டி மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பிரேம குமாரி நீட் தேர்வுக்கான பயிற்சி பெறுவதற்கும் உதவி வருகிறது. மேலும், அவர்களிடம் கலை ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், பரத நாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×