search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விருதுநகர் விழாக்கோலமாக மாறியது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 75 ஆயிரம் பேர் திரண்டு வரவேற்பு
    X

    விருதுநகர் விழாக்கோலமாக மாறியது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 75 ஆயிரம் பேர் திரண்டு வரவேற்பு

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் பயணம் செய்த வேனில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றார்.
    • ராமமூர்த்தி சாலை வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு-ஷோ செல்கிறார்.

    விருதுநகர்:

    தமிழக அரசின் நலத் திட்டங்கள் மக்களை சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி தனது முதலாவது கள ஆய்வை கடந்த 5-ந்தேதி தெற்கு மண்டலமான கோவையில் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக இரண்டாவது கள ஆய்வு பணியை விருதுநகரில் மேற்கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து இன்று காலை 11.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, ஏ.வ.வேலு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி, மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மணிமாறன், நிர்வாகிகள் வரவேற்றனர்.

    இதையடுத்து காரில் விருதுநகர் புறப்பட்டு சென்ற அவருக்கு மாவட்ட எல்லை மற்றும் பொதுப் பணித்துறை அலுவலகம் முன்பு சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலையில் இருபுறமும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காத்திருந்தனர். அவர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் பயணம் செய்த வேனில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றார்.


    அப்போது அவருக்கு ஏராளமானோர் கைகுலுக்கினர். பதிலுக்கு மு.க.ஸ்டாலினும் கைகொடுத்து உற்சாகப்படுத்தினார். சிலர் கோரிக்கை மனுக்களையும் அளித்தனர். தொடர்ந்து மக்கள் வெள்ளத்தில் அங்கிருந்து சூலக்கரை பகுதியில் உள்ள அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்திற்கு சென்றார்.

    அங்கு தங்கியுள்ள குழந்தைகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடுகிறார். தொடர்ந்து விருதுநகர் ஆர்.ஆர்.நகர் அருகிலுள்ள கன்னிசேரிபுதூரில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலைக்கு செல்கிறார்.

    அங்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பட்டாசு தயாரிப்பில் ஏற்படும் விபத்துகள், அதனை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கிறார். மேலும், தொழிலாளர்கள் சந்திக்கும் இன்னல்கள், குறைகளையும் கேட்டறிய உள்ளார்.

    இதைத்தொடர்ந்து ஆர்.ஆர்.நகரில் உள்ள ராம்கோ விருந்தினர் மாளிகையில் மதிய உணவு முடிந்ததும், மாலையில் விருதுநகர் புதிய பஸ் நிலையம் பகுதிக்கு வருகிறார். அங்கிருந்து திறந்த காரில் எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா, அருப்புக்கோட்டை ரெயில்வே மேம்பாலம், அல்லம்பட்டி முக்கு ரோடு வழியாக ராமமூர்த்தி சாலை வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு-ஷோ செல்கிறார்.

    ஒருசில இடங்களில் காரில் இருந்து இறங்கி நடந்து செல்லவும் திட்டமிட்டுள்ள அவர் பொதுமக்களிடம் மனுக்களையும் பெற்றுக்கொள்கிறார். பின்னர் அதே பகுதியில் உள்ள எஸ்.எஸ்.கே.சரஸ்வதி கிராண்ட் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட் டம் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.

    விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை தி.மு.க.வின் நிர்வாக காரணங்களுக்காக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் தவிர மற்ற 6 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளாக ம.தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களே உள்ளனர்.

    தேர்தல் வெற்றிக்கு ஆலோசனை 2026 சட்டமன்ற தேர்தலில் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் தீவிரமாக களப்பணியாற்ற தேவையான ஆலோசனைகளை வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருத்துவேறுபாடுகளை களைந்து தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள மக்கள் நலத்திட்டங்கள் மக்களை சரியாக சென்று சேர்கிறதா என்று அறிந்து அதுபற்றிய விபரங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி தி.மு.க.வுக்கு அவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தற்போது முதலே பணிகளை தொடங்கவேண்டும் என்பது தொடர் பாக ஆலோசனைகளை அவர் வழங்க இருக்கிறார்.

    கூட்டம் முடிந்ததும் இரவு ராம்கோ விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

    Next Story
    ×