search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எடப்பாடி பழனிசாமி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
    X

    எடப்பாடி பழனிசாமி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

    • விருதுநகர் மாவட்டத்திற்கு திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • தமிழ்நாட்டை உயர்த்த என்னுடைய சக்தியை மீறி உழைப்பேன்.

    விருதுநகர்:

    விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டார். 2-வது நாளான இன்று ரூ.77.11 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் கட்டப்பட்டு உள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார்.

    பின்னர் பட்டம்புதூரில் நடைபெற்ற விழாவில் 58 ஆயிரம் பேருக்கு ரூ.417 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்திற்கு திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களை ஆய்வு செய்தேன்.

    இதில் 1786 கிராமங்களுக்கு ரூ.1387.73 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல் பாட்டுக்கு கொண்டு வரப்படும். ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

    அதேபோல் சமூக நலத்திட்டங்கள் மக்களை எவ்வாறு சென்று சேர்ந்திருக்கிறது என்றும் ஆய்வு செய்தேன். விருதுநகர் மாவட்டத்தில் 95 சதவீதத்திற்கும் மேல் பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்திருக்கிறார்கள்.

    நேற்றைய கள ஆய்வில் பட்டாசு தொழிற்சாலைக்கு சென்றிருந்தேன். அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களை சந்தித்தபோது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    அதன்படி பட்டாசு ஆலையில் ஏற்படும் விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களுடைய குழந்தைகளின் அனைத்து உயர்கல்வி வரையிலான அனைத்து செலவையும் அரசே ஏற்கும். இதனை மாவட்ட அளவில் முடிவு செய்து வழங்ககூடிய வகையில் கலெக்டரின் கீழ் தனி நிதியம் ஒன்று உருவாக்கப்படும். அதற்கு முதல் கட்ட நிதியாக ரூ.5 கோடியை தமிழக அரசு வழங்கும்.

    காரியாபட்டி, திருச்சுழி பகுதிகளில் உள்ள கண்மாய்கள் ரூ.17 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும். காரியாபட்டி வட்டத்தில் உள்ள தெற்கு ஆற்றில் ரூ.21 கோடி மதிப்பில் புதிய அணை கட்டப்படும்.

    காளிங்கபேரி, வெம்பக்கோட்டை, அனைக்குட்டம், கோல்வார்பட்டி அணைகள் ரூ.23 கோடியே 30 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்படும். அணைகளின் அருகே ரூ.2 கோடியே 73 லட்சம் மதிப்பில் சுற்றுலா பூங்காக்கள் அமைக்கப்படும்.

    அருப்புக்கோட்டை அருகே 400 ஏக்கர் பரப்பில் ரூ.350 கோடி மதிப்பில் புதிய சிப்காட் தொழில் மையம் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    சிவகாசி மாநகராட்சியில் ரூ.15 கோடி மதிப்பில் மாநாட்டு கூட்டரங்கம் அமைக்கப்படும். விருதுநகர் நகராட்சியில் ரூ.24.50 கோடி மதிப்பில் சாலை வசதி, மேம்படுத்தப்படும். சாத்தூரில் ரூ.2 கோடி மதிப்பில் சாலைகள், பூங்காக்கள் அமைக்கப்படும்.

    ராஜபாளையம் நகராட்சியில் ரூ.13 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் வசதி அமைக்கப்படும். அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ.3 கோடியில் மழைநீர் வடிகால் மற்றும் பூங்காக்கள் அமைக்கப்படும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கழிவறை, வாகன நிறுத்துமிடம் ஆகியவை ரூ.2.10 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும். இந்த விழாவில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நான் தேர்தல் பரப்புரை செய்தேன். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றேன். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் 100 நாட்களில் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தனித்துறையை உருவாக்கினேன். அதன் மூலம் மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது வந்த மனுக்களில் பெரும்பாலும் வீடு கட்ட வேண்டும். வீடு கட்டுவதற்கு பணம் இல்லை. புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறோம் என அதிகளவில் மனுக்கள் வந்தன.

    இதையடுத்து வருவாய் துறைக்கு உத்தரவு பிறப்பித்தேன். அதில் மக்களுக்கு எந்தளவுக்கு இலவச வீட்டு மனை வழங்க முடியுமோ? அந்த அளவிற்கு வழங்க நடவடிக்கை எடுங்கள். தீவிர நடவடிக்கை எடுத்ததின்பேரில் 2021-ம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சி அமைந்ததில் இருந்து 10 லட்சத்து 3ஆயிரத்து 824 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது இது மிகப்பெரிய சாதனை. இன்றைக்கு உங்கள் முகத்தில் உள்ள மகிழ்ச்சி தான் எனக்கு கிடைக்க கூடிய பாராட்டு.

    மு.க.ஸ்டாலின் எனும் நான் வீட்டுக்கு விளக்காக இருப்பேன். நாட்டுக்கு தொண்டனாக இருப்பேன். மக்களுக்காக கவலைப்படக் கூடிய முதல்வனாக இருப்பேன். அப்படி தான் செயல்பட்டு வருகிறேன். சில நாட்களுக்கு முன்பு இந்தியளவில் அதிக சக்தி வாய்ந்த தலைவர்களில் எனது பெயரை குறிப்பிட்டிருந்தார்கள். இந்த பெருமையும் புகழும் தமிழக மக்களையே சாரும்.

    உங்களுடைய அன்பும் ஆதரவும் தான் ஸ்டாலினின் பலம். தமிழ்நாட்டை உயர்த்த என்னுடைய சக்தியை மீறி உழைப்பேன். இந்த உழைப்பினுடைய பயன்தான் எல்லா புள்ளி விவரங்களிலும் எதிரொலித்து வருகிறது.

    முதலில் வந்து விட்டோம் என்று ஒருபோதும் நான் திருப்தியடைவில்லை. என்னை விட என்னை முந்தி செல்வதற்கு இன்னும் வேகமாக பலர் ஓடி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்தள்ளதா? என்பதை அறிய மாவட்டந்தோறும் கள ஆய்வு நடத்தி வருகிறோம்.

    ஆனால் இதைபற்றி எதுவும் அறியாத மக்களை பற்றி கிஞ்சிற்றும் கவலைபடாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. மக்கள் நல திட்டங்களுக்கு மூலதன செலவுகளை அதிகமாக செய்து கலைஞர் பெயரில் தேவையில்லாத திட்டங்களுக்கு நிதியை வீணடித்து வருகிறோம் என உளறியிருக்கிறார். இதை கேட்டால் சிரிப்பு தான் வருகிறது. ஒருவர் பொய் சொல்லலாம். ஆனால் ஏக்கர் கணக்கில் பொய் சொல்ல கூடாது என்ற பேச்சு உள்ளது. பொய் சொல்லலாம். ஆனால் பழனிசாமி அளவிற்கு பொய் சொல்லக்கூடாது என கூறலாம். அந்த அளவிற்கு எடப்பாடி பழனிசாமி புளுகு மூட்டைகளை அவிழ்த்து வருகிறார்.

    தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாட்டிற்காக 80 ஆண்டுகாலம் ஓயாமல் உழைத்தனர் கலைஞர். மக்கள் திட்டங்களுக்கு அவரது பெயரை வைக்காமல் பதவி சுகத்திற்காக கரப்பான் பூச்சி போல ஊர்ந்து சென்ற உங்களது பெயரையா வைக்க முடியும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    Next Story
    ×