search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்யக்கோரி வழக்கு- மதுரை ஐகோர்ட் அதிரடி கருத்து
    X

    'பேக்கேஜ் டெண்டர்' முறையை ரத்து செய்யக்கோரி வழக்கு- மதுரை ஐகோர்ட் அதிரடி கருத்து

    • பணிகள் அனைத்துக்கும் பேக்கேஜிங் டெண்டர் முறையை பின்பற்றி காண்டிராக்டர்களுக்கு பணிகள் வழங்கப்பட நடவடிக்கை.
    • இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார், ராயர், ரெங்கராஜன் உள்ளிட்ட 8 பேர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நாங்கள் அனைவரும் தமிழக அரசின் முதல் நிலை காண்டிராக்டர்கள். திருச்சி நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு சாலைப்பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டு இருந்தார்.

    இந்தப் பணிகளின் மதிப்பு ரூ.2 கோடி முதல் ரூ.6 கோடி வரை உள்ளது. இதில் மொத்தம் 49 சாலைப் பணிகள் உள்ளன. இந்தப் பணிகள் அனைத்துக்கும் பேக்கேஜிங் டெண்டர் முறையை பின்பற்றி காண்டிராக்டர்களுக்கு பணிகள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    அதிகாரிகளின் இந்த நடவடிக்கையினால் எங்களைப் போன்ற காண்டிராக்டர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர். பல்வேறு பணிகளையும் ஒரு சிலரிடம் ஒப்படைப்பதால் சம்பந்தப்பட்ட பணிகள் முழுமையாக சிறப்பாக நிறைவேற்றப்படுவது இல்லை.

    நபார்டு வங்கி மூலம் நிறைவேற்றப்படும் சாலை பணிகளுக்கு தனித்தனியாக டெண்டர் நடத்த வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இதுபோல பொதுப்பணித்துறையில் நடைமுறையில் இருந்த பேக்கேஜிங் டெண்டர் முறை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையிலும் பேக்கேஜிங் டெண்டர் முறைக்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்." என குறிப்பிட்டிருந்தது.

    இதே போல மேலும் சிலரும் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் கணபதி சுப்பிரமணியன் ஆஜராகி, புதுக்கோட்டை மாவட்டத் தில் சுமார் 50 முதல் நிலை காண்டிராக்டர்கள் உள்ளனர். சாலை பணிகளுக்கான பேக்கேஜிங் டெண்டர் முறையினால் சில காண்டிராக்டர்கள் மட்டுமே பயனடைகின்றனர். இதனால் விரைவாக பணிகளை முடிக்க இயலாததால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது என வாதாடினார்.

    பின்னர் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்படுவது வெவ்வேறு துறை சார்ந்த நடவடிக்கை. எனவே அவர்களின் கோரிக்கை ஏற்புடையது அல்ல என தெரிவித்தார்.

    அப்போது நீதிபதிகள், குறிப்பிட்ட சில காண்டிராக்டர்கள் மட்டும் முன்னேற்றம் அடைந்தால் சரியாக இருக்குமா? சிறிய காண்டிராக்டர்கள் உள்பட அனைத்து தரப்பு காண்டிராக்டர்களும் வேலை பெறுவது தான் சரியானது என கருத்து தெரிவித்தனர்.

    இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    Next Story
    ×