search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவண்ணாமலை மகா தீபத்தின்போது 11,500 பக்தர்கள் கோவிலுக்குள்ளும், மலை ஏறுவதற்கு 2000 பேருக்கும் அனுமதி
    X

    திருவண்ணாமலை மகா தீபத்தின்போது 11,500 பக்தர்கள் கோவிலுக்குள்ளும், மலை ஏறுவதற்கு 2000 பேருக்கும் அனுமதி

    • கார்த்திகை தீபத் திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • தீபத்திருவிழாவின்போது கோவிலுக்குள் இதய மருத்துவர் உள்பட 5 மருத்துவ குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று மாலை கோவிலில் உள்ள உள்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் இணை ஆணையர் ஜோதி வரவேற்றார்.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. துறைவாரியாக மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.


    கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தபோது எடுத்த படம்.



    பின்னர் அவர் கூறியதாவது:-

    கார்த்திகை தீபத் திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 4-ந் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியும், 13-ந் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீபத் திருவிழாவின்போது கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவின் போது சுமார் 35 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள், அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதிகள், உணவு வசதிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. திருவிழாவின்போது மாட வீதிகள் மற்றும் கிரிவல பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டங்களும், கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

    கடந்த ஆண்டு மேற்கொண்ட சிரமங்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு பக்தர்களுக்கு தேவையான விரிவான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். பரணி தீபத்தின்போது கோவிலுக்குள் 7,050 பக்தர்களும், மகா தீபத்தின்போது 11,500 பக்தர்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மலை ஏறுவதற்கு 2000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மலையேறும் பாதையில் மருத்துவ குழுவினர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அவர்கள் மலையேர அனுமதிக்கப்படுவார்கள். மகா தீபத்தன்று கோவிலில் தேவையான அளவு போலீசார் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    தீபத்திருவிழாவின்போது கோவிலுக்குள் இதய மருத்துவர் உள்பட 5 மருத்துவ குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளனர். தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் மருத்துவ குழுவினரும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் கோவில் மற்றும் கிரிவலப்பாதை என ஒட்டுமொத்தமாக 85 மருத்துவ குழுவினர் தீபத்திருவிழாவின் போது பணியாற்ற உள்ளனர்.

    வருகிற 8-ந் தேதி அருணாசலேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    108 ஆம்புலன்ஸ் மற்றும் சுகாதார துறையினர் தயார் நிலையில் உள்ளனர். அன்றைய தினமும், தீபத் திருவிழாவின்போது பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறும் அன்றும் மாட வீதியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும். தங்கும் விடுதிகளில் வழக்கமான கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகார் கொடுக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விடுதியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுகுறித்து விடுதி உரிமையாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கப்படும்.

    பரணி தீபத்தின்போது 500 ஆன்லைன் அனுமதி சீட்டும், மகாதீபத்தின் போது 1100 ஆன்லைன் அனுமதி சீட்டும் வழங்கப்பட உள்ளது.

    அவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மீனாட்சிசுந்தரம், ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×