என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில்பட்டி தொகுதி கண்ணோட்டம்
Byமாலை மலர்11 March 2021 5:34 PM IST (Updated: 11 March 2021 5:34 PM IST)
கடம்பூர் ராஜூ இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள கோவில்பட்டி தொகுதி கண்ணோட்டம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரம் கோவில்பட்டி. தொழிலாளர்களை அதிகம் கொண்ட கரிசல் பூமியான கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழில் பிரதானமாக உள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் கையினால் செய்யப்பட்டு வந்த தீப்பெட்டி தொழில் தற்பொழுது முழு எந்திர தீப்பெட்டி, பகுதி நேர தீப்பெட்டி என காலத்திற்கு ஏற்ப மாற்றம் பெற்றுள்ளது. பகுதி நேர ஆலைகள், முழு நேர ஆலைகள் என நூற்றுக்கணக்கான தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. அதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் பேருக்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது.
அதனைத்தொடர்ந்து கடலை மிட்டாய் என்றாலே ஞாபகம் வருவது கோவில்பட்டிதான். உலகளவில் அதற்கென்று தனி சுவையும் மவுசும் உள்ளது. 150 தயாரிப்பாளர்கள் மற்றும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் கடலை மிட்டாய் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். வெளி நாட்டிற்கும் சென்று தமிழரின் சுவை பரப்பும் கடலை மிட்டாய் மூலம் ஆண்டுக்கு ரூ. 350 கோடி வர்த்தகம் நடக்கிறது.
இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. புகழ்மிக்க கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு புவீசார் குறியீடு கிடைத்துள்ளதால் அதன் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும்,பட்டாசு, நூற்பாலை, பாய் உற்பத்தி, ஆயுத்த ஆடை தயாரிப்பு போன்ற தொழில்களும் நடைபெற்று வருகின்றன.
சிவகாசி மக்களவை தொகுதியில் இடம்பெற்றிருந்த கோவில்பட்டி தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு தூத்துக்குடி மக்களவை தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி நகராட்சி, கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை பேரூராட்சிகளை உள்ளடக்கி உள்ளது.
2016-ம் ஆண்டு தேர்தலில் கடம்பூர் ராஜூ இரண்டாம் முறையாக வெற்றி பெற்றார். அதனைத்தொடர்ந்து அமைச்சராக ஆன கடம்பூர் ராஜூ, இந்த தொகுதியில் இருந்து முதல் முறையாக அமைச்சரான எம்.எல்.ஏ. என பெயர் பெற்றார். இந்த தொகுதி கடந்த 1952-ம் ஆண்டு முதல் இதுவரை இதுவரை 15 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 7 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்றுள்ளது. அடுத்ததாக அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், சுயேச்சை 1 முறையும் வென்றுள்ளன.
கோவில்பட்டி பகுதியில் பருத்தி, உளுந்து, பாசி, சோளம், வெங்காயம், மிளாகாய், எலுமிச்சை, மக்காச்சோளம் ஆகியவை அதிகளவில் விளையும் கரிசல் மண் பூமியாக உள்ளது. கோரைப்பாய்க்கு பெயர் பெற்ற கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 70 நிறுவனங்கள் அந்த தொழிலில் ஈடுபடுகின்றன.
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 484 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 385 பேரும், 3&ம் பாலித்தனவர்கள் 31 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 64 ஆயிரத்து 900 பேர் உள்ளனர்.
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தேவர், நாடார், நாயக்கர் சமுதாய வாக்குகள் பிரதானமாக உள்ளது. அடுத்தபடியாக தலித் வாக்குகள் உள்ளன. மேலும் செட்டியார், கோனார், இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளனர்.
வேலையே மூலவராக கொண்ட சொர்ணமலை கதிர்வேல் முருகன் ஆலயம் கோவில்பட்டியின் அடையாளம். தென்னகத்தின் எல்லோரா என அழைக்கப்படும் கழுகுமலை வெட்டுவான் கோவிலும், சமணப் பள்ளியும் இந்த தொகுதியின் வரலாற்று சிறப்பின் சாட்சியங்கள்.
கோரிக்கைகள்
தீப்பெட்டி தொழில் நழிவடைந்து போவதை தடுக்க அரசிடம் சில கோரிக்கைகளை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கோழி முட்டையை அரசு கொள்முதல் செய்து சத்துணவு திட்டத்தில் வழங்குவது போன்று சத்துள்ள கடலைமிட்டாயை கொள்முதல் செய்து மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தால் வாழ்வாதரம் மேலும் மேன்மை அடையும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
பாய் உற்பத்திக்கு தேவைப்படும் கோரை புல் கிடைப்பதில் சிரமம் இருப்பது மட்டுமின்றி இடைத்தரகர்கள் காரணமாக அதிகமான விலைக்கு வாங்கும் நிலை இருப்பதால் பாய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே அரசு கோரைபுல்லை கொள்முதல் செய்து மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் பாய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக் கையாக உள்ளது.
நாளுக்கு நாள் நகரில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருவதால் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தினை செயல்படுத்த வேண்டும், கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து அண்ணா பஸ் நிலையத்திற்கு இரவு நேரங்களில் அதிகளவு அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கை ஆகும்.
1952- ராமசாமி (காங்கிரஸ்)
1957- சுப்பையா நாயக்கர் (சுயேச்சை)
1962- வேணு கோபால கிருஷ்ணசாமி (காங்கிரஸ்)
1967- அழகர்சாமி (இந்திய கம்யூனிஸ்ட்)
1971- அழகர்சாமி (இந்திய கம்யூனிஸ்ட்)
1977- அழகர்சாமி (இந்திய கம்யூனிஸ்ட்))
1980- அழகர்சாமி (இந்திய கம்யூனிஸ்ட்)
1984- ரங்கசாமி (காங்கிரஸ்)
1989- அழகர்சாமி (இந்திய கம்யூனிஸ்ட்)
1991- ஷியாமளா (அ.தி.மு.க.)
1996- அய்யலுசாமி (இந்திய கம்யூனிஸ்ட்)
2001- ராஜேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்)
2006- ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.)
2011- கடம்பூர் ராஜூ (அ.தி.மு.க.)
2016- கடம்பூர் ராஜூ (அ.தி.மு.க.)
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X