search icon
என் மலர்tooltip icon

    சீனா

    • குழந்தை பிறப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டு 1,000 பேருக்கு 6.77 என்றளவில் குறைந்திருக்கிறது
    • கருவுறுதல் விகிதங்களை ஆதரிக்க சீன அரசு நவீன சிகிச்சைகளுக்கு உதவி

    சீனாவில் சமீப காலமாக குழந்தை பிறப்பு விகிதம் மிகக் கடுமையாக குறைந்துள்ளது. இதை தடுப்பதற்கும், தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கவும், பல முயற்சிகளை சீன அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக பீஜிங்கின் அரசு, நகரின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் கீழ் கருத்தரித்தலுக்கான 16 வகையான தொழில்நுட்ப சிகிச்சை கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    இந்த தொழில்நுட்பங்களில் முக்கியமானவையான இன்-விட்ரோ கருத்தரித்தல் (IVF), கரு மாற்று சிகிச்சை (Embryo Transplantation), விந்து உறைதல் (Freezing Semen) மற்றும் விந்துவை சேமித்தல் (Storing Semen) ஆகியவை அடிப்படை காப்பீட்டிலேயே சேர்க்கப்படும் என்று பெய்ஜிங்கின் நகராட்சி மருத்துவ காப்பீட்டு பணியகத்தின் துணை இயக்குனர் டு சின் தெரிவித்துள்ளார்.

    கடந்த அறுபது ஆண்டுகளில் முதல் முறையாக மக்கள் தொகை வீழ்ச்சியை பதிவு செய்த சீனா, குழந்தை பிறப்பு குறைவதைத் தடுக்க போராடி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    குழந்தை பிறப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டு 1,000 பேருக்கு 6.77 என்றளவில் குறைந்திருக்கிறது. மேலும், 2023-ல் இது இன்னமும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கருவுறுதல் விகிதங்களை ஆதரிக்கும் வகையிலும் அதிகப்படுத்தும் வகையிலும் சீர்திருத்த, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய வழிகாட்டுதல்களை மாகாணங்களுக்கு வழங்கியுள்ளது.

    சீனாவின் வடகிழக்கில் உள்ள மாகாணமான லியோனிங், ஜூலை முதல் உதவி இனப்பெருக்க தொழில்நுட்பங்களை

    ஆதரிக்கும் என்று மே மாதம் கூறியது.

    திருமணமாகாத 35 வயதான சீனப் பெண்ணான தெரேசா சூ, திருமணமாகவில்லை என்ற காரணத்தால் தனது கரு முட்டைகளை உறைவிக்க பெய்ஜிங் பொது மருத்துவமனை மறுப்பதாகவும், இது தனது உரிமைகளை மீறும் செயல் எனக் கூறி, இதற்காக அந்த மருத்துவமனையின் மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கிற்கான தீர்ப்பு விரைவில் வரவிருக்கும் நிலையில் பெய்ஜிங்கின் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

    கடந்த மார்ச் மாதம், சீனாவில் மக்கள் தொகையில் அதிகரித்து வரும் முதியோர்களும், தம்பதிகளிடையே குறையும் குழந்தை பிறப்பு குறித்தும் கவலை கொண்ட அரசாங்க அரசியல் ஆலோசகர்கள், திருமணமாகாத பெண்களுக்கு, கருமுட்டை உறைதல் மற்றும் இன்-விட்ரோ கருத்தரித்தல் சிகிச்சை போன்ற சேவைகள் அவர்கள் எளிதாக அணுகக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும் என்று முன்மொழிந்தனர்.

    சீனாவில் உள்ள தேசிய சட்ட விதிகளின்படி தற்பொழுது நாட்டில் உள்ள திருமணமாகாத பெண்கள் இது போன்ற உயர் தொழில்நுட்ப சிகிச்சைகளை பெறுதல் கடினம்.

    தென்மேற்கு சிச்சுவான் மாகாணம் போன்ற மாகாணங்களில் உள்ள சில தனியார் கிளினிக்குகள் குழந்தை பிறப்பு குறைவதால், ஏற்கனவே இன்-விட்ரோ கருத்தறித்தல் போன்ற தொழில்நுட்பங்களை அனுமதிக்கத் தொடங்கியுள்ளன.

    அதே சமயம், நாடு முழுவதும் கருவுறுதலுக்கான சிகிச்சைகளை தாராளமாக்குவதால், ஏற்கனவே உலகின் மிகப்பெரிய சந்தையாக இருக்கும் நாட்டில் இது அதிக தேவையை கட்டவிழ்த்துவிடலாம் என்றும் இதனால் வரையறுக்கப்பட்ட கருவுறுதல் சேவைகள் பாதிக்கப்படலாம் என்று முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஜிலின்-1 செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 108ஆக உயர்ந்துள்ளது.
    • 2030ம் ஆண்டுக்குள் சந்திரனில் விண்வெளி வீரர்களை தரையிறக்க சீனா திட்டம்.

    சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று மதியம் 1.30 மணிக்கு ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்களுடன் நீண்ட 2டி ராக்கெட்டை விண்ணில் செலுத்தி அந்நாடு புதிய சாதனையை படைத்துள்ளது.

    இந்த நீண்ட ராக்கெட் 476வது விமானப் பயணமாகும். ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் முக்கியமாக வணிக ரிமோட் சென்சிங் சேவைகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப சரிபார்ப்பை வழங்கும் எனவும் செயற்கைக்கோள்களில் பெரும்பாலானவை 36 ஜிலின்-1 தொடரைச் சேர்ந்தவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம், ஜிலின்-1 செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 108ஆக உயர்ந்துள்ளது.

    சீனா, 420 கிலோகிராம் எடை கொண்ட ஜிலின்-1 செயற்கைக்கோளை 2015ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில், அதன் எடையை வெறும் 22 கிலோவாகக் குறைத்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, 2030ம் ஆண்டில் நிலவு மற்றும் அதற்கு மேற்பட்ட பயணங்கள் மற்றும் பூமியில் தரை செயல்பாடுகளுக்கு இடையே ஒரு தகவல் தொடர்பு பாலமாக செயல்படும் ரிலே செயற்கைக்கோள்களை உருவாக்கவும் சீனா செயல்பட்டு வருகிறது.

    2030ம் ஆண்டுக்குள் சந்திரனில் விண்வெளி வீரர்களை தரையிறக்க சீனா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கொரோனா கட்டுப்பாடு தளர்ந்த நிலையில் 4 வருடத்திற்குப் பிறகு பில்கேட்ஸ் சீனா வருகை
    • அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்அதிபரை சீன அதிபர் சந்திக்க இருப்பது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது

    அமெரிக்க மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன்  அறக்கட்டளை அமைப்பின் தலைவருமான பில் கேட்ஸ் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார்.

    கோவிட் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகு சீனாவிற்கு பல மேற்கத்திய தலைவர்கள் வருகை புரிகின்றனர். அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன் சீனாவிற்கு கடந்த வாரம் வந்திருந்தார். கடந்த மார்ச் மாதம் சீனாவின் பீஜிங் நகருக்கு வந்திருந்த ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், சீனாவுடன் ஆப்பிள் நிறுவனத்திற்கும் ஒரு இணைதிறனுடைய உறவுமுறை நிலவுவதாக குறிப்பிட்டிருந்தார்.

    அதேபோல் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சென்ற 3 வருடங்களில் முதல்முறையாக வருகை தந்தார். சீனாவில் விரிவான வணிக ஆர்வமுடைய மஸ்க், சீன ஷாங்காய் நகரில் உள்ள டெஸ்லாவின் மிகப்பெரிய தொழிற்சாலையில் தமது பணியாளர்களை சந்தித்தார்.

    இப்பொழுது உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான அமெரிக்காவின் பில் கேட்ஸ் வருகை தந்துள்ளார். அமெரிக்க நாட்டு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஞாயிறன்று சந்திக்க இருக்கும் பின்னணியில் இது மிகவும் முக்கிய சந்திப்பாக பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை:-

    மலேரியா மற்றும் காசநோய் ஒழிப்பிற்காக எடுக்கப்படும் முயற்சிகளுக்காக சீனாவிற்கு இந்த அறக்கட்டளை 50 மில்லியன் டாலர் வழங்கும். கேட்ஸ், பீஜிங் நகராட்சி மற்றும் ட்சிங்குவா பல்கலைகழகம் இணைந்து உருவாக்கிய உலகளாவிய ஆரோக்கியத்திற்கான மருந்து கண்டுபிடிப்பு நிறுவனம் (GHDDI) எனப்படும் அமைப்பிற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படும்.

    மலேரியா மற்றும் காசநோய் போன்ற பெரும்பாலான உலகின் ஏழை மக்களை தாக்கும் நோய்கள் ஒழிப்பிற்காக எடுக்கப்படும் உயிர்காக்கும் சிகிச்சை முறைகள் மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டுக்கான வழிமுறைகளுக்கு இந்த தொகை உறுதுணையாக இருக்கும். உலகளாவிய ஆரோக்கியத்திற்கான மருந்து கண்டுபிடிப்பு நிறுவனத்தில் பேசிய பொழுது கேட்ஸ், மலேரியா மற்றும் காசநோய் ஒழிப்பிற்காக சீனா எடுக்கும் முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

    சீனாவிற்குள் வறுமை ஒழிப்பிலும், ஆரோக்கிய மேம்பாட்டிலும் அந்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் சவால்களை சமாளிக்க சீனாவால் பெரிய பங்காற்ற முடியும் என்றும் கேட்ஸ் தெரிவித்திருக்கிறார்.

    பில் கேட்ஸ் கடைசியாக 2019-ம் வருடம் வந்திருந்தபோது சீன முதல் பெண்மணி பெங்க் லியுவானை சந்தித்து தமது அறக்கட்டளை மூலமாக ஹெச்.ஐ.வி./எய்ட்ஸ் தடுப்பிற்காக செய்யப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து அவரிடம் பேசினார்.

    சீன நாட்டு அதிபருடன் வெளிநாட்டு தலைவர் ஒருவர் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

    • பீஜிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளது
    • அர்ஜென்டினா பாஸ்போர்ட் இல்லாததால் தடுத்து நிறுத்தம் எனத் தகவல்

    கால்பந்து உலகின் தலைசிறந்த வீரரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான மெஸ்சி மற்றும் அவரது அணி வீரர்கள் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடுவதற்காக சீனா சென்றனர்.

    சீனாவின் பீஜிங் விமானத்தில் மெஸ்சி வந்து இறங்கியதும் போலீசார் அவரை சுற்றி வளைத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    மெஸ்சி அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர். ஆனால் அர்ஜென்டினா பாஸ்போர்ட் வைப்பதற்குப் பதிலாக ஸ்பெயின் பாஸ்போர்ட் வைத்திருந்தார். அதில் சரியான சீனா விசா இல்லை எனத் தெரிகிறது. இதனால் தடுத்து நிறுத்தப்பட்டதாக என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் அதிகாரிகள் தடங்களை சரி செய்து அவரை அனுப்பி வைத்தனர்.

    அர்ஜென்டினா வருகிற 15-ந்தேதி பீஜிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 19-ந்தேதி ஜகார்த்தாவில் இந்தோனேசியாவுக்கு எதிராகவும் விளையாட இருக்கிறது.

    • திருமண பதிவில் முந்தைய ஆண்டை விட சுமார் 800,000 பதிவுகள் குறைந்துள்ளது.
    • சில மாகாணங்கள் இளம் புதுமணத் தம்பதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறையை அளித்து நீட்டித்து வருகின்றன.

    சீனா ஏற்கனவே மக்கள் தொகையில் வீழ்ச்சயிடைந்த நிலையில், தற்போது திருமண பதிவின் எண்ணிக்கையிலும் சரிவை கண்டுள்ளது.

    குறிப்பாக கடந்த 2022-ம் ஆண்டில் திருமண பதிவுகள் குறைந்துள்ளதாக சீனாவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக திருமண பதிவு ஒரு நிலையான சரிவைக் கண்டு வருவதாகவும், கொரோனா காலத்தினால் திருமணத்தின் மொத்த எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு வெறும் 6.83 மில்லியன் தம்பதிகள் தங்கள் திருமணப் பதிவை செய்துள்ளனர். இதுவே, சிவில் விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தரவுப்படி, முந்தைய ஆண்டை விட சுமார் 800,000 பதிவுகள் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் ஊரடங்கில் பல வாரங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது வளாகத்திலோ அடைபட்டு கிடந்தனர். தொற்றுநோய் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியதால் திருமணங்கள், குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.

    2022-ம் ஆண்டில், ஆறு சதாப்தங்களில் இல்லாத அளவில் கடந்த 2022ம் ஆண்டில் முதல் முறையாக சீனாவின் மக்கள்தொகை வீழ்ச்சியடைந்தது. சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகளாகக் குறைந்துள்ளது, இது 2021ல் 7.52 ஆக இருந்தது.

    மக்கள் தொகையை அதிகரிக்க ஏற்கனவே, திருமணத்தை ஊக்குவிக்கவும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், கடந்த மாதம் 20க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களை தொடங்குவதாக சீனா கூறியது.

    சில மாகாணங்கள் இளம் புதுமணத் தம்பதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறைஅளித்து நீட்டித்து வருகின்றன.

    • அரசுக்கு சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • காணாமல் போன 5 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஜின்கோஹியில் உள்ள மலைப்பகுதியில் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அரசுக்கு சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

    உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 14 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 5 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியானது மாகாண தலைநகர் செங்டுவில் இருந்து 240 கிமீ தொலைவில் உள்ள மலைப்பிரதேசம் ஆகும். தொலைதூர மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த சிச்சுவானின் பெரும்பகுதி, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் பேரழிவுக்கு உள்ளாகிறது. 

    • அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து நேட்டோ ராணுவ அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன.
    • தென்சீன கடல் பகுதியில் சீன ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது.

    அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து நேட்டோ ராணுவ அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆசியா-பசிபிக் பகுதியில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க முயற்சிக்கக் கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற சீன பாதுகாப்பு மந்திரி லீ ஷங்பூ கூறும்போது, ஆசிய-பசிபிக்கில் நேட்டோ போன்ற முயற்சிகள் பிராந்திய நாடுகளில் மோதல்களை பெரிதுப்படுத்துவதற்கான ஒரு வழியாகும். இது ஆசிய-பசிபிக்கை சர்ச்சைகள் மற்றும் மோதல்களின் சுழலில் மட்டுமே மூழ்கடிக்கும்.

    இன்றைய ஆசிய-பசிபிக் பகுதிக்கு திறந்த மற்றும் உள்ளடக்கிய ஒத்துழைப்பு தேவை. அனைத்து நாடுகளின் மக்களும் இரண்டு உலக போர்கள் கொண்டு வந்த கடுமையான பேரழிவுகளை மறந்து விடக்கூடாது. இது போன்ற சோகமான வரலாறு மீண்டும் வருவதை நாம் அனுமதிக்கக் கூடாது என்றார்.

    தென்சீன கடல் பகுதியில் சீன ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது. தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து தைவானுக்கு ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அறுவை சிகிச்சை மேற்கண்டதால் தொடர்ந்து கழிவறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
    • ஒருமுறை சென்றால் சுமார் 3 மணி நேரம் வரை எடுத்துக் கொள்வாராம்

    சீனாவில் ஒரு நாளைக்கு சுமார் 6 மணி நேரம் கழிவறையில் நேரத்தை கழித்த ஊழியர் ஒருவரை நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியது செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

    சீனாவைச் சேர்ந்த வாங் என்பவர் ஒரு நிறுவனத்தில் கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் 2013-ம் ஆண்டு ஒப்பந்தம் அல்லாத ஊழியராக நிறுவனம் அவரை நியமனம் செய்தது. வயிற்று பிரச்சினை காரணமாக 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிகிச்சை மேற்கொண்டார்.

    அவருக்கு அறுவை சிகிச்சை சிறப்பான முறையில் செய்யப்பட்டது. இருந்தாலும் வலி இருப்பதாக அவர் உணர்ந்தார். அதன்பிறகு தொடர்ந்து அவர் கழிவறையில் உட்கார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வேலை நேரத்தின்போது ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை கழிவறைக்கு செல்வாராம். ஒவ்வொரு முறையும் 47 நிமிடம் முதல் 3 மணி நேரம் வரை கழிவறையில்தான் இருப்பாராம். இது 2015-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தொடர்ந்துள்ளது.

    இதை அறிந்த நிறுவனம் 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை அவர் எவ்வளவு நேரம் கழிப்பறை சென்றுள்ளார் என கணக்கெடுத்தது. அப்போதுதான் 47 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரை கழிப்பறையில் நேரத்தை கழித்தது தெரியவந்தது.

    வேலை நேரத்தில் சுமார் 6 மணி நேரம் கழிவறையில்தான் இருந்துள்ளார் என்பதை அறிந்த நிறுவனம் அவரை செப்டம்பர் 23-ந்தேதி வேலையில் இருந்து அதிரடியாக நீக்கியது.

    ஊழியர்களுக்கான கையேட்டில் சோம்பேறித்தனம், முன்னதாகவே வேலையில் இருந்து சென்றுவிடுதல், சரியான விளக்கம் அளிக்காமல் விடுமுறை எடுத்தல் ஆகியவை வேலையில் இருந்து நீக்க தகுதியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருந்தாலும், வாங் தன்னை வேலையில் இருந்து நீக்கிய நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீண்ட காலமாக விசாரித்து வந்த நீதிமன்றம் நிறுவனம் வாங்-ஐ வேலையில் இருந்து நீக்கியது சட்டப்பூர்வமானது. மணிக்கணக்கில் கழிவறையில் இருந்தது மனித உடலியல் தேவைகளுக்கு அப்பாற்பட்டது என தீர்ப்பு வழங்கியது.

    8 மணி நேரத்தில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் கழிவறையில் இருந்தால், எந்த நிறுவனம்தான் ஒரு ஊழியரை தொடர்ந்து வேலையில் அமர்த்தும்.

    • லாங் மார்ச்-2 எப் ராக்கெட்டில் ஜிங் ஹய்பெங், ஜுயங்ஜு, குய் ஹய்ச்சவ் ஆகிய 3 வீரர்கள் விண்ணுக்கு புறப்பட்டனர்.
    • ராக்கெட் வடமேற்கு சீனாவில் உள்ள கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

    பீஜிங்:

    சீனா, விண்ணில் தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது. டியாங்காங் என பெயரிடப்பட்ட இந்த விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் வரை தங்கலாம். இங்கு சீன விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டனர்.

    இந்த நிலையில் சீனாவின் விண்வெளி நிலையத்துக்கு இன்று 3 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இதில் சீனாவின் பொதுமக்களில் ஒருவரும் அடங்கும்.

    லாங் மார்ச்-2 எப் ராக்கெட்டில் ஜிங் ஹய்பெங், ஜுயங்ஜு, குய் ஹய்ச்சவ் ஆகிய 3 வீரர்கள் விண்ணுக்கு புறப்பட்டனர். இந்த ராக்கெட் வடமேற்கு சீனாவில் உள்ள கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பெய் ஹாங் பல்கலைக்கழக பேராசிரியர் குய் ஹய்ச்சவ் விண்வெளிக்கு சென்ற முதல் சீன குடிமகன் என்ற சிறப்பை பெற்றார்.

    ஷென்சோ-16 விண்கலத்தில் அனுப்பப்பட்டுள்ள இந்த மூன்று வீரர்களும், கடந்த நவம்பர் மாத இறுதியில் விண்வெளி நிலையத்துக்கு வந்த 3 பேர் கொண்ட குழுவினர் மாற்றாக விண்வெளி நிலையத்தில் இடம் பெறுவார்கள். அவர்கள் 5 மாதங்கள் தங்கி ஆய்வு பணியை மேற்கொள்வார்கள்.

    இதற்கிடையே வருகிற 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து சீன விண்வெளி ஆய்வு மைய பிரிவு இணை இயக்குனர் லின் ஷிகியாங் கூறும்போது, "2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி அங்கு சோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வது மட்டுமின்றி, வேற்று கிரகத்துக்கு மனிதர்களை அழைத்து செல்வதற்கான தொழில்நுட்ப சோதனைகளையும் மேற்கொள்வது இத்திட்டத்தின் நோக்கமாகும்" என்றார்.

    • விண்வெளி போட்டிகள் தற்போது தீவிரம் அடைந்து வருகிறது.
    • சீனாவும், ரஷியாவும் சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்தன.

    பீஜிங் :

    சீனா கடந்த காலங்களில் வெற்றிகரமாக சந்திரன் மற்றும் செவ்வாய் கோளுக்கு ரோவரை அனுப்பி உள்ளது. அதேபோல் 2021-ல் சீனாவும், ரஷியாவும் சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்தன.

    இந்தநிலையில் விண்வெளி போட்டிகள் தற்போது தீவிரம் அடைந்து வரும் நிலையில் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை சீனா நேற்று அறிவித்தது.

    இதன் மூலம் மனிதர்களை நிலவில் தரை இறக்குவது, நிலவினை ஆய்வு செய்தல் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்வதே தனது இலக்கு என சீனா கூறி உள்ளது.

    • பெற்றோருக்கு மகளாக வாழ்வதற்கு ஒவ்வொரு மாதமும் 4 ஆயிரம் யுவான்களை நியானன் பெறுகிறார்.
    • பெற்றோருக்கு முழு நேர மகளாக செயல்படும் நியானன், அவர்களுடன் தினமும் ஒரு மணி நேரம் நடனம் ஆடுகிறார்.

    பெற்றோருக்கு மகளாக பணியாற்றுவதற்காக, தான் மேற்கொண்டு வந்த பணியை ராஜினாமா செய்த சீன பெண் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறார்.

    சீனாவை சேர்ந்த 40 வயதான நியானன் செய்தி நிறுவனம் ஒன்றில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். 2022-ம் ஆண்டு பணியிடத்தில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டதால், ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, இவரது மன அழுத்தம் கடுமையாக அதிகரித்து இருக்கிறது. மேலும் பணியில் எந்நேரமும் ஈடுபாடுடன் இருக்க வேண்டிய அவசியம் இருந்து வந்துள்ளது.

    இத்தகைய சவாலான சூழ்நிலையில், அவரது பெற்றோர் தலையிட்டு நியானனுக்கு உதவ முயற்சித்தனர். பொருளாதார ரீதியில் உதவி செய்வதாக பெற்றோர் நியானனிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த நியானன், தான் மேற்கொண்டு வந்த பணியை ராஜினாமா செய்துவிட்டார்.

    பெற்றோருக்கு மகளாக வாழ்வதற்கு ஒவ்வொரு மாதமும் 4 ஆயிரம் யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 47 ஆயிரத்து 648 வரை சம்பளமாக வழங்க நியானன் பெற்றோர் முடிவு செய்தனர். நியானனின் பெற்றோருக்கு ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் யுவான்கள் பென்ஷன் தொகையாக கிடைக்கிறது. இந்த தொகையில் இருந்து, 4 ஆயிரம் யுவான்களை நியானனுக்கு சம்பளமாக, அவரின் பெற்றோர் கொடுக்கின்றனர்.

    கிடைக்கும் வருவாய்க்கு ஈடு செய்யும் வகையில் நியானன் தனது பெற்றோருக்கு செல்ல மகளாக இருந்து வருகிறார். பெற்றோருக்கு முழு நேர மகளாக செயல்படும் நியானன், அவர்களுடன் தினமும் ஒரு மணி நேரம் நடனம் ஆடுகிறார். இதுதவிர மளிகை சாமான் வாங்க கூட செல்கிறார். மாலை நேரங்களில் இரவு உணவு சமைக்க பெற்றோருக்கு நியானன் உதவியாக இருக்கிறார்.

    இத்துடன் மின்சாதனங்கள் சார்ந்த பணிகளை மேற்கொள்வது, பெற்றோருக்கு ஓட்டுனராக இருப்பது, ஒவ்வொரு மாதமும் குடும்பமாக வெளியில் செல்லவும், சுற்றுலா செல்லவும் திட்டமிடுவது போன்ற பணிகளை நியானன் மேற்கொண்டு வருகிறார். 

    • உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 2017-ம் ஆண்டு சி-919 என்ற விமானம் உருவாக்கப்பட்டது.
    • சுமார் 130 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் ஷாங்காயில் இருந்து அதன் தலைநகரான பீஜிங்குக்கு சென்றடைந்தது.

    பீஜிங் :

    சீனாவில் முதன் முதலாக பயணிகள் விமானத்தை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சீனாவின் வணிக விமான கழகத்தால் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 2017-ம் ஆண்டு சி-919 என்ற விமானம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு பல கட்டமாக சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டது.

    அந்த வகையில் உயர் வெப்பநிலை, அதிக ஈரப்பதம், காற்று மற்றும் உறைபனி உள்ளிட்ட பல்வேறு இயற்கை சூழல்களில் சி-919 விமானம் சோதித்து பார்க்கப்பட்டது. இந்த சோதனைகள் வெற்றியடைந்ததையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் சிவில் விமான நிர்வாகத்தால் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

    சி-919 என பெயரிடப்பட்ட இந்த விமானம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசுக்கு சொந்தமான சீனா கிழக்கு ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிறுவனம் வணிக செயல்பாட்டை கருத்தில் கொண்டு 100 மணி நேர விமான சரிபார்ப்பு பணிகளை நிறைவு செய்தது.

    இந்த நிலையில் சி-919 விமானம் நேற்று தனது முதல் வணிக பயணத்தை தொடங்கியது. சுமார் 130 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் ஷாங்காயில் இருந்து அதன் தலைநகரான பீஜிங்குக்கு சென்றடைந்தது. இதனையடுத்து பீஜிங் விமான நிலையத்தில் மரியாதையின் அடையாளமாக இந்த விமானத்தின் பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு நீர் வணக்கம் செலுத்தப்பட்டது.

    இதற்கிடையே விமானத்தின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்திறன் ஆகியவை விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியது. இதன் காரணமாக 32 வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்களை செய்வதற்கு ஆர்டர் வந்துள்ளதாக அந்த நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையம் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

    இதன் மூலம் சர்வதேச சிவில் விமான சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் போயிங், ஏர்பஸ் போன்ற நிறுவனங்களுக்கு சீனா போட்டியை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×