search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    Sheikh Hasina
    X

    வங்காளதேசமும்... ராணுவ ஆட்சியும்... ஓர் பார்வை

    • ஷேக் ஹசீனா லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
    • 1975-ம் ஆண்டு புரட்சியில் ஷேக் ஹசீனாவின் மொத்த குடும்பமே படுகொலை செய்யப்பட்டது.

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி போராட்டம் தீவிரமடைந்தது.

    இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையை விட்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்று விட்டார் என தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ராணுவம் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியது.

    நாட்டைவிட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு வருகை புரிந்துள்ளதாகவும் அங்கிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

    வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றுவது ஒன்றும் இது முதல்முறையல்ல. இதற்கு முன்பே 2 முறை ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ராணுவம் காப்பாற்றிய அந்த சமயத்தில் 2 அதிபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் வங்கதேசத்தின் அதிபராக இருந்தபோது, 1975 ஆம் ஆண்டு நடந்த முதல் ராணுவப் புரட்சியின்போது படுகொலை செய்யப்பட்டார்.

    அந்த புரட்சியின் போது ஷேக் ஹசீனாவும் அவரது தங்கை ஷேக் ரெஹானாவும் வெளிநாட்டில் இருந்ததால் உயிர் தப்பினர். அந்தப் புரட்சியின் போது மொத்தமாக ஷேக் ஹசீனாவின் மொத்த குடும்பமே படுகொலை செய்யப்பட்டது.

    1981-ல் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த ஜியாவுர் ரஹ்மான் ராணுவத்தினராலேயே படுகொலை செய்யப்பட்டார். அதே சமயம் பல முறை ராணுவத்தின் புரட்சி முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன.

    2009 ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ஏற்ற இரண்டே மாதத்தில் பங்களாதேஷ் ரைபிள் படையினர் பெரும் கலக்கம் செய்தனர் பெரும் சிரமத்திற்குப் பின்னர் அந்த கலகத்தை ராணுவம் அடக்கியது. கடந்த 2012-ம் ஆண்டும் ஹசீனாவுக்கு எதிராக ராணுவம் புரட்சி நடத்த முயன்றது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×