search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஆட்டம் காண துவங்கிய ஆயிரம் வருட கோபுரம்
    X

    "ஆட்டம்" காண துவங்கிய "ஆயிரம்" வருட கோபுரம்

    • கி.பி. 1109லிருந்து கி.பி. 1119க்கு இடைப்பட்ட காலத்தில் இரட்டை கோபுரங்கள் உருவாக்கப்பட்டன
    • கோபுரத்தை சுற்றி நகர நிர்வாக அமைப்பு உயரமான உலோக தடுப்பு அமைக்க உள்ளது

    வட இத்தாலியில் உள்ள போலோனா (Bologna) நகரில் இரு மிக பெரிய கோபுரங்கள் அருகருகே உள்ளன. உலக அளவில் பல வரலாற்று நூல்கள், குழந்தைகளுக்கான பாடல்களிலும், பயண கட்டுரைகளிலும் இந்த இரு கோபுரங்களுக்குமே சிறப்பான இடம் உண்டு.

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோபுரங்களில் சற்று உயரமானது "அசினெல்லி" (Asinelli); உயரம் குறைவானது "கரிசெண்டா" (Garisenda). கி.பி. 1109-ஆம் வருடத்தில் இருந்து கி.பி. 1119-ஆம் வருட காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்த இரு உயரமான கோபுரங்கள், இவற்றை உருவாக்கிய குடும்பங்களின் பெயர்களாலேயே வழங்கப்படுகின்றன.

    இதில் சிறிய கோபுரமான கரிசெண்டா, 157 அடி உயரம் உடையது. இதை விட உயரமாக, (சுமார் 200 அடி) இருந்த இந்த கோபுரம் 14-வது நூற்றாண்டில் சரியும் அபாயத்தில் இருந்ததால், அதனை தடுக்க செய்யப்பட்ட கட்டிட பணிகளின் காரணமாக தற்போது உள்ள உயரத்தை அடைந்திருக்கிறது.


    இந்நிலையில், தற்போது 4 டிகிரி அளவிற்கு சாய்ந்துள்ள கரிசெண்டா, சாய்ந்து கொண்டே வருவது அதிகரித்துள்ளதால், இடிந்து விழ கூடிய அபாயத்தை எட்டியுள்ளதாக கட்டிட வல்லுனர்களின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதனை நகர செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

    2019லிருந்தே கரிசெண்டா கோபுர கட்டித்தின் உறுதித்தன்மை குறித்து ஆராய்ச்சி செய்து வரும் அறிவியல் வல்லுனர் குழு, இதன் வீழ்ச்சிக்கான அபாயம் குறித்து முன்னரே எச்சரித்திருந்தது.

    கடந்த அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட துல்லிய சென்சார் பதிவுகளின்படி, முன்னெப்போதும் இல்லாத அழுத்தம் அதன் தரைப்பகுதிக்கு தரப்படுவதாகவும், அதன் காரணமாக அடித்தளத்தில் உபயோகப்படுத்தப்பட்ட கற்களில் தோன்றியுள்ள விரிசல்கள், மெதுவாக மேலே செங்கற்களுக்கும் பரவும் என இக்குழு தெரிவித்தது.

    இத்தகவலையடுத்து, பாதுகாப்பிற்காக கரிசெண்டா கோபுரத்தை சுற்றி ஒரு குறிப்பிட்ட பகுதி வரை உயரமான உலோக தடுப்பு அமைத்து மக்கள் நடமாட்டம் தடை செய்ய நகராட்சி முடிவு செய்துள்ளது. இதன் மூலம், கரிசெண்டா திடீரென விழுந்தாலும், அக்கம்பக்கத்திலுள்ள கட்டிடங்களுக்கு சேதாரம் குறைவாக இருக்கும் என நம்பப்படுகிறது.

    இரு கோபுரங்களையும் இணைக்கும் அனைத்து சாலை போக்குவரத்தையும் நகர நிர்வாக அமைப்பு, மூடி விட்டது.


    இருப்பினும், கோபுரம் கீழே விழ போகும் நாள் அல்லது மாதம் குறித்து இதுவரை காலவரையறை ஏதும் நிபுணர்களால் குறிப்பிடப்படவில்லை. வல்லுனர்கள், இந்த கோபுரம் 3 மாதத்திலிருந்து 10 வருடங்கள் வரை எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயம் உள்ளதாக மட்டுமே எச்சரித்துள்ளனர்.

    சுமார் 1000 வருடங்களாக அந்நகர மக்கள் பெருமைப்படும் ஒரு வரலாற்று சின்னமாகவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கலை வடிவமாகவும் விளங்கி வந்த கோபுரம் விரைவில் இடியும் எனும் செய்தி அந்நகர மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Next Story
    ×