search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஆஸ்திரேலியாவுக்குள் மோடி அரசின் ஊடுருவல்..  ABC நியூஸ் ஆவணப் படத்தால் சர்ச்சை
    X

    ஆஸ்திரேலியாவுக்குள் மோடி அரசின் ஊடுருவல்.. ABC நியூஸ் ஆவணப் படத்தால் சர்ச்சை

    • மோடிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் உள்ள வெகுகாலத்திய தொடர்பு குறித்து அலசப்பட்டுள்ளது.
    • மோடியால் தனக்கு எதிரான விமர்சனங்களை சகித்துக்கொள்ள முடியவில்லை என்று அந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    ஆஸ்திரேலிய ஒளிபரப்பு கழக ஊடகமான ABC பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் இந்திய அரசு குறித்தும் கடுமையாக விமர்சித்து Spies, Secrets And Threats - Infiltrating Australia என்ற தலைப்பில் யூடியூபில் வெளியிட்டுள்ள ஆவணப்படம் பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மீது இந்தியா ரகசிய போர் தொடுத்துள்ளது என்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும் அந்த ஆவணப்படம் தெரிவிக்கிறது.

    இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் களத்தில் நரேந்திர மோடி இருக்கும் காட்சிகளுடன் தொடங்கும் அந்த ஆவணப்படத்தில் மோடிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் உள்ள வெகுகாலத்திய தொடர்பு குறித்து அலசப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், இந்து தேசியவாத அமைப்பு என்று சுட்டப்படும் ஆர்எஸ்எஸ், இந்திய பாராளுமன்றத்தை வலதுசாரிகள் வசம் வைத்திருக்க முயல்கிறது அதற்காக நரேந்திர மோடிக்கு ஆர்எஸ்எஸ் பாடமும் பயிற்சியும் வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'இந்த ஆவணப்படத்தின் மூலம் இந்தியா ஆஸ்திரேலிய விவகாரங்களில் ஊடுருவ முயல்வது குறித்தும் நரேந்திர மோடி மற்றும் அவரது சகாக்கள் குறித்த விசாரணையை நாங்கள் வெளியிட்டுள்ளோம் 'என்று இந்த படத்தின் நெறியாளர் அவானி தியாஷ் தெரிவித்துள்ளார். படத்தின் உருவாக்கத்தின்போது தான் இந்தியாவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    1984 சீக்கிய கலவரங்களுக்குப் பின் மீண்டும் தற்போது பூதாகரமாகியுள்ள காலிஸ்தான் விவகாரம் குறித்தும் கனடா அமெரிக்கா போன்ற வநாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறிவைக்கப்படும் நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் உரையாடல் நிகழ்த்தி இந்த விவகாரங்களில் இந்திய அரசின் தலையீடு குறித்தும் அலசப்பட்டுள்ளது.

    இதுதவிர்த்து, ஆஸ்திரேலியாவில் இந்திய உளவாளிகள் நடமாட்டம் மற்றும் இந்தியாவின் தலையீடு குறித்த பார்வையை இந்த ஆவணப்படம் முன்வைக்கிறது. பிரதமர் மோடியால் தனக்கு எதிரான விமர்சனங்களை சகித்துக்கொள்ள முடியவில்லை என்று ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக 2002 குஜராத் கலவரத்தோடு அப்போது அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி வெளியான பிபிசி ஆவணப்படம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×